பகவத் கீதை
பகவத் கீதை (Bhagavad Gita) என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதம் என்னும் புனைகதையில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதை.
பொருளடக்கம் |
[தொகு] கண்ணனின் ஐந்து வாதங்கள்
கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.
- வேதாந்தப் பார்வை
- சுயதருமப் பார்வை
- கருமயோகப் பார்வை
- பக்திப் பார்வை
- தத்துவப் பார்வை.
[தொகு] வேதாந்த வாதம்
“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டர்ம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.
[தொகு] சுயதரும வாதம்
“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)
‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47).
இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது
[தொகு] கருமயோகப் பார்வை
இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).
கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது.
[தொகு] பக்திப் பார்வை
‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.
[தொகு] தத்துவப் பார்வை
பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.
[தொகு] சரணாகதி என்ற முத்தாய்ப்பு
‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது.
இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.
[தொகு] கீதையின் போதனை
போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
- பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
- பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
- ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
- அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
- யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
[தொகு] கீதா சாரம்
சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறத்துறந்தோர் - பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.
பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும் பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில், (பகவத் தொண்டு தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ்ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தியோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராயணனே பகவத்கீதைக்கு அறிவாளிகள் அங்கீகரித்து எண்ணும் பொருளாவான்.
- பகவத் கீதை வெண்பாவிலிருந்து.
[தொகு] கீதைக்கு உரைகள் பல
பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் சிறந்த உரைகளை எழுதியிருக்கின்றனர். உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[தொகு] பிற கீதைகள்
கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:
[தொகு] உருசியாவில் சர்ச்சை
உருசியாவின் சைபீரியாவில் உள்ள டோம்ஸ்க் என்ற நகர நீதிமன்றத்தில் பகவத் கீதை "தீவிரவாத" நூலாகக் கருதப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் என காவல்துறை வழக்கு பதிந்தது[1]. இஸ்கான் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவினால் எழுதப்பட்ட நூலின் உருசிய மொழிபெயர்ப்பு பெறப்பட்டு இந்த இந்துமத நூல் "சமூக வேற்றுமையை " வளர்ப்பதாக உருசியா எங்கும் தீவிரவாத நூல் என்று தடை செய்ய வேண்டும் என சூன் மாதத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது. வழக்கைப் பதிவு செய்த நகர நீதிமன்றம் இதனை டோம்ஸ்க் மாநில பல்கலைக்கழகத்திற்கு "ஆராய்வதற்காக" அக்டோபர் 25 அன்று அனுப்பியது. திசம்பர் 28, 2011 அன்று இம்மொழிபெயர்ப்பை தடை செய்யமுடியாதென்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டது.[2][3]
[தொகு] துணை நூல்கள்
- Swami Shivananda. Srimad Bhagavad Gita. 1967. Divine Life Society, Shivanandanagar, Aurobindo. Essays on the Gita. 1922. Aurobindo Ashram. Pondicherry.
- T. Subba Row. Notes on the Bhagavad Gita. 1978. Theosophical Society Press. Pasadena, California.
- பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி. கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி? 2001. அல்லயன்ஸ் கம்பெனி. சென்னை.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு, விக்கிசெய்தி, திசம்பர் 21, 2011
- ↑ சைபீரிய உயர்நீதி மன்றம் இம்மொழி பெயர்ப்பு நுலை தடை செய்ய மறுப்பு
- ↑ பகவத்கீதை நூலைத் தடை செய்யக் கோரும் மேன்முறையீட்டை உருசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, விக்கிசெய்திகள், மார்ச் 21, 2012