வைணவ சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் இந்துசமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. நாளாயிர திவ்யபிரபந்தம் எனும் ஆழ்வார்கள் இயற்றிய தமிழ்நூலை வேதங்களுக்கு நிகராக போற்றுவதனால் இச்சமயத்திற்கு வைணவம் என்ற பெயர் எற்பட்டதாக கருத்துண்டு.

உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.

குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. [1] வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.

பொருளடக்கம்

வைணவ தத்துவம் [தொகு]

வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் வழிபடும் திருமால்

இராமானுஜர் பரப்பிய வைணவ தத்துவத்தில் ஆதிப்பரம் பொருள் நாராயணன் என்ற விஷ்ணுவே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.

இதற்கு பிரமாணம் பிருஹதாரண்யக உபநிஷத்து (3-7-22):

யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:.

இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.

உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விஜாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம் (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.

ஸ்ரீ [தொகு]

விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தக் கடலிலேயே நீந்துகிற ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, விஷ்ணுவின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர்.

வைணவத்தில் மோட்சம் [தொகு]

படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஒரு உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவ தில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.

வைணவத்தில் கடவுள் [தொகு]

இறைவனுக் கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணுவும் இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும். அவர்தான் திருமூர்த்திகளில் மற்ற இருவர்களான பிரம்மனையும் சிவனையும் படைத்தவர். யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். திவ்யப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.

வைணவ ஆச்சாரியர்கள் [தொகு]

புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.

சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. ஸ்ரீரங்கம் கட்டுரை

நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், வேதாந்ததேசிகர், பிள்ளை லோகாச்சாரியர். வேதாந்த தேசிகர் தென்கலை ஆசார்யராகவே இருந்துள்ளார். மணவாளமாமுனிகள் வைணவத்துக்கு ஆற்றிய தொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு அரிய பெரிய பொக்கிஷம். பிற்காலத்தில் ஸாஸ்த்ர சர்ச்சையினால், பூர்வாசார்யர்களின் கருத்துக்களுக்கு முரண்பட்ட சில மைசூர்க்கு அப்பால் இருந்த வைணவர்கள் விஷிஷ்டாத்வைத சமயத்தை இரண்டாக பிரித்து வடகலை பிரிவை உண்டாக்கினர்(ஆதாரம்: திருமழிசை அண்ணாவப்பங்கார் ச்வாமியின் தேசிகர்-வேதாந்தாச்சார்யாரின் சரிதை). வைணவம் வளர்த்தது போல் தமிழை வளர்க்க எவராலும் இயலாது. இராமானுசரும்,தேசிகரும்,மாமுனிகளும் தமிழை இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திர தேசம்,கர்நாடகம்,ஒரிசா வரை தமிழ் வழி ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும்,அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான் செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது. தமிழ் பாசுரங்ளை சமச்க்ருதம்,தெலுங்கு,கன்னடம்,ஒரியா மொழிகளில் எழுதிவைத்து அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம்,ஆகம வழிபாட்டில் சமஸ்க்ருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலி பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள்,இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லற சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

திருமண் [தொகு]

திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

  • வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் வடகலை
  • தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் தென்கலை
வடகலை தென்கலை
திருமால் தெய்வம் திருமகளும் தெய்வம்
வடமொழி வேத வழி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலும் போற்றப்படும்
பிராமணருக்கு முதன்மை மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை
வடக்கிலுள்ள திருப்பதிக்குத் தென்கலை நாமம். காஞ்சிபுரம் வடகலையின் மையம் தெற்கிலுள்ள திருவரங்கம் கோயிலுக்கு வடகலை நாமம்
  • வைணவர் கூறும் இந்த விளக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

வடகலையும் தென்கலையும் [தொகு]

வேதாந்த தேசிகரும் ஆழ்வார்களின் பாசுரங்களையும், வைணவ ஆலயங்களின் பெருமைகளையும் போற்றி தமிழிலும்,சமஸ்க்ருதம்,மணிப்ரவாள மொழிகளிலும் கருத்தாழமிக்க நூல்களை இயற்றியுள்ளார். மணவாளமாமுனிகள் ஆழ்வார்களின் தெள்ளிய தமிழ் பாசுரங்களுக்கு பொருளுரையிட்டு திருவரங்கத்தில் பெருமாளின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு வருட காலம் திருவிழா அனைத்தும் விட்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அந்த தீந்தமிழிலேயே மக்களுடன் மக்களாக அரங்கத்துறையும் இறைவனும் கேட்டு இன்புற்றனர். இதே போல் காஞ்சீபுரத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலிலும் மாமுனிகள் ஒருவருட காலம் தங்கி இருந்து அவ்வூர் இறைவனிடமும், மக்களிடமும் ஆழ்வார்களின் பாசுரங்களின் பொருளை விரிவாக தமிழிலே எடுத்துரைத்தார்.

இராமானுசரும், பிள்ளை உலகாசிரியரும், வேதாந்த தேசிகரும் ,மணவாள மாமுனிகளும் சமஸ்க்ருதத்திலும் பல சுவையான பாமரர்களுக்கும் விளங்கும்படி பல அருமையான ச்தோத்திரங்களும், காவிய நாடகங்களும் இயற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துகளையே தங்கள் நூல்களிலும், வாழ்க்கை நடைமுறைகளிலும் பின்பற்றிவந்திருக்கின்றனர். தம் தம் சீடர்களுக்கும் அவ்வாறே கற்றுக்கொடுத்துள்ளனர்.

இவர்கள் காலத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பழக்கமுறைகளினால் வைணவர்களில் புதிய பிரிவாக வடகலை வைணவம் தோன்றியது.

தமிழ்ப் பிரபந்தங்களை வேதங்களாகவே மதிக்கவேண்டும் என்பது இராமானுஜரின் போதனை. அதனால் வேதங்கள், உபநிடதங்கள் இவைகளுக்கு பதிலாகவே பிரபந்தங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்து தலை தூக்கியது. இரு நூற்றாண்டுகளில் இந்த விதைக்கருத்து கொழுந்துவிட்டு மரமானபோது அது வைணவத்தையே இரு பிரிவுகளாக்கிவிட்டது. இப்படி ஏற்பட்டது தான் வடகலையும் தென் கலையும். தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தென்கலை வைணவம்.

திருக்கச்சி நம்பிகள், இராமானுசர், அவரின் சீடர்கள் கூரத்தாழ்வார்,முதலியாண்டான், பின்னர் வேதாந்த தேசிகர் ஆகியோர் காஞ்சீபுரம் தேவப்பெருமாள் கோயில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சார்ந்தவர்களே.

பிற்காலத்தில் வடகலையாருக்கு முக்கிய நகரமாக காஞ்சீபுரமும், தென்கலையாருக்கு ஸ்ரீரங்கமுமாக இருந்ததே அவர்கள் அப்படி அழைக்கப்பட்டதற்குக் காரணம். காஞ்சீபுரத்தில் வடமொழிப் புலவர்களின் நடமாட்டம் அதிகம். ஸ்ரீரங்கமும் அதன் சுற்றுவட்டாரமும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள். இதைத்தவிர தத்துவ ரீதியாகவும் இருபிரிவுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் வேரூன்றின.

வடகலையார் ஸ்ரீயாகிய மகாலட்சுமியை நாராயணன் என்ற மலரிலிருந்து பிரிக்கமுடியாத அதன் மணமாகக் கொள்வர். அதனால் ஸ்ரீயும் மோட்சத்தைக் கொடுக்கக் கூடியவள். தென்கலையாருக்கோ ஸ்ரீயும் ஒரு ஜீவன் தான்; ஆனால் முக்கியமான ஜீவன். ஆண்டவனிடம் நமக்காகப் பரிந்து பேசக்கூடிய ஜீவன்.

மதக்கோட்பாட்டு வல்லுனர்கள் வடகலைக்கும் தென்கலைக்கும் 18 வேறுபாடுகள் சொல்வர். ஒரு சராசரி வைணவனுக்கு இந்த வேறுபாடுகள் பொருளற்றவை. ஒரே பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் அளவு கடந்த பக்தியும், இராமானுஜர் சொல்லியபடி எல்லா ஜீவர்களிடமும் காட்ட வேண்டிய அன்புமே அடிப்படை வைணவ லட்சணமாகும்.

இறைவனை வழிபடவும், ஆன்மீக அரும்பொருள்களை பாமரர்களும், எளியோரும், அந்தணர்களும் மிக எளிமையாக கற்கவும், தெரிந்துகொள்ளவும் வைணவம் நிகரற்ற சமயமாக போற்றப்படுகிறது. இறைவனைத்தொழவும்,அறிந்து கொள்ளவும், இறைத்தொண்டு ஆற்றவும், அனைத்து சாதியினருக்கும் எவ்வித தடையும் இல்லாமல் மிக்க எளியமுறையிலும்,மொழி வேற்றுமை இல்லாமலும் தூய்மையான ஆன்மீக வழியையே விஷிஷ்டாத்வைதம் எனும் வைணவ சமயம் உரைத்து கடைபிடிக்க செய்கிறது. மோக்ஷம் எனப்படும் ஆன்மா முக்தியடைய எளிய முறை பாற்கடல்நாதனான நாராயணனை அடிபணிந்து வழிபடுவதே என்பது வைணவத்தின் கோட்பாடு.

துணை நூல்கள் [தொகு]

  • Swami Tapasyananda. Bhakti Schools of Vedanta.1990. Sri Ramakrishna Math. Mylapore, Chennai. ISBN 81-7120-226-8
  • V.N. Gopaladesikan. A Dialogue on Hinduism. 1990. Vishishtadvaita Research Centre, Madras.
  • Vatsya Ranganatha, Astadasabheda-nirnaya. Edited and translated by Suzanne Siauve. Pondichery: Intitut Francais D 'Indologie Pondichery, 1978
  • Swami Krishnananda. A Short History of Religious and Philosophical Thought in India. 1970. Divine Life Society, Shivanandanagar.
  • Cultural Heritage of India. Bharatiya Vidya Bhavan, Bombay. Article on ‘The Historical Evolution of Sri Vaishnavism in South India’.
  • V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism.1994. New Age International. New Delhi.ISBN 81-224-0628-9

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=வைணவ_சமயம்&oldid=1391926" இருந்து மீள்விக்கப்பட்டது