திருமழிசையாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். . பக்திசாரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. யாப்பருங்கல விருத்திகாரர் 'குடமூக்கிற் பகவர்' என்று குறிப்பது இவரையே என்று சொல்லப்படுகிறது.

பொருளடக்கம்

பிறப்பின் அற்புதம் [தொகு]

பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்றுப்பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப்பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப்பிரம்புத்தூற்றின் கீழ் போட்டுச்சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண் டம் எல்ல உருப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் குழந்தையைக் கண்டெடுத்து தம் மனைவி பங்கயச்செல்வியிடம் கொடுத்தனன். அவர்களுக்கு வேறு மகப்பேறு இல்லை. இக்குழந்தையை வளர்க்கத் தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை.

கால நிர்ணயம்[1] [தொகு]

ஆதாரம் திருமழிசையாரின் காலம்
முனைவர் மா. இராசமாணிக்கனார் 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி
சாமி சிதம்பரனார் 7ம் நூற்றாண்டின் இடைப்பகுதி
பூர்ணலிங்கம் பிள்ளை 7ம் நூற்றாண்டு
கலைக்களஞ்சியம் 6ம், 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி
மு. இராகவ அய்யங்கார் 6ம் நூற்றாண்டு

இவரது பிரபந்தங்கள் [தொகு]

நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக விஷ்ணுவை உயர்வாகச்சொல்லியவை. இவருக்குமுன் தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.

பரமயோகி [தொகு]

இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்ன என்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம் முதலிய ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். முக்கண்ணனான சிவபெருமான் இவரைச் சோதித்து இவருடைய பக்தியை மெச்சி இவருக்கு 'பக்திசாரர்' என்ற சிறப்புப்பெயரை அருளிச் செய்தார்.

சொன்னவண்ணம் செய்த பெருமான்[2] [தொகு]

கணிகண்ணன் திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதைபாடச்சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப்பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,

கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

குறிப்புகள் [தொகு]

  1. நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997
  2. ஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதலியார். திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை. 1967

வெளியிணைப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருமழிசையாழ்வார்&oldid=1386789" இருந்து மீள்விக்கப்பட்டது