சத்திரியர்
. சத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், கிருஷ்ணன் ஆகியோரும், புத்த சமய நிறுவனரான கௌதம புத்தர், சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரர் ஆகியோரும் சத்திரியர்களே.
தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்ததாகக் கருதப்படுகிறது[ஆதாரம் தேவை]. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது[ஆதாரம் தேவை]. காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை[ஆதாரம் தேவை] ஆயினும், சத்திரியர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர்.