தைப்பொங்கல்
| தைப்பொங்கல் | |
|---|---|
| அனுசரிப்பவர்கள் | தமிழர் |
| முக்கியத்துவம் | தமிழர்களின் அதிமுக்கிய திருநாள், இயற்கைக்கு நன்றி. |
| நாள் | தமிழ் நாட்காட்டி: தை 1 |
| கொண்டாட்டங்கள் | பொங்கி பகிர்ந்து உண்ணல், உறவுகளை காணுதல் |
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
பொருளடக்கம் |
தைப்பொங்கல் வரலாறு [தொகு]
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.
உழவர் திருநாள் [தொகு]
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்க வைக்கும் முறை [தொகு]
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.
நான்கு நாள் திருவிழா [தொகு]
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகி [தொகு]
- பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
- போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தைப்பொங்கல் [தொகு]
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் [தொகு]
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல் [தொகு]
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.
பொங்கலை ஒத்த பிற விழாக்கள் [தொகு]
மேற்குநாடுகளில் பொங்கல் போன்றே ஒரு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள் [தொகு]
2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு[1] சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.[2] அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[3]
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் [தொகு]
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
காட்சியகம் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Bill on new Tamil New Year Day is passed unanimously
- ↑ http://news.oneindia.in/2011/08/23/jaya-govt-reverses-yet-another-dmk-decision.html
- ↑ http://www.highbeam.com/publications
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Pongal தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- பொங்கல் மலர் தினமலர்
- பொங்கலும் போர்த்தேங்காயும்
- பொங்குக... தமிழுணர்வுப் பொங்கல்..!
- தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும் - ஜோ
- முஸ்லிம்களும் பொங்கலும்
- கிராமத்துப் பொங்கல் -மு.கார்த்திகேயன்
- யு ரியூப் நிகழ்படம்
- Pongal celebrations in a remote village in Tamil Nadu with photos
- www.pongalfestival.org
|
கொண்டாட்டங்களும் |
|---|
|
|
|
|
|
|
|
|---|---|
| போகி * மகர சங்கிராந்தி * தைப்பொங்கல் * மாட்டுப் பொங்கல் * காணும் பொங்கல் * தைப்பூசம் * தை அமாவாசை * மகா சிவராத்திரி * மாசி மகம் * ஹோலி * பங்குனித் திங்கள் * பங்குனி உத்தரம் * தமிழ்ப் புத்தாண்டு * சித்திரைப் பரணி * சித்திரா பௌர்ணமி * உகாதி * இராம நவமி * திருவிளக்குப் பூசை * வைகாசி விசாகம் * ஆனி உத்தரம் * ஆடிப்பூரம் * ஆடி அமாவாசை * ஆடிச் செவ்வாய் *வரலட்சுமி நோன்பு * கிருஷ்ண ஜெயந்தி * ஓணம் * ஆவணி சதுர்த்தி * ஆவணி மூலம் * ரக்ஷா பந்தன் * விநாயக சதுர்த்தி * நவராத்திரி நோன்பு * விஜயதசமி * தீபாவளி * கந்த சஷ்டி * கேதாரகௌரி விரதம் * கார்த்திகை விளக்கீடு * திருவாதிரை நோன்பு * பிரதோஷ விரதம் * ஏகாதசி விரதம் * வைகுண்ட ஏகாதசி * புரட்டாதிச் சனி * திருவெம்பாவை நோன்பு * கும்பமேளா * மார்கழி நோன்பு * மார்கழி உற்சவம் |