அன்னமாச்சாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார்
பிறப்பு மே 9, 1408(1408-05-09)
தாள்ளபாக்கம்
இறப்பு பெப்ரவரி 23, 1503 (அகவை 94)
மற்ற பெயர்கள் அன்னமய்யா
பணி வைணவ அடியார், கவிஞர்
வலைத்தளம்
www.annamayya.org

தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த ஒரு வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, இவர் திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில் பிறந்தவர். தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான "சுபத்ரா கல்யாணம்" இயற்றிய '’திம்மக்கா" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.

அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.

இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

கீர்த்தனைகள்[தொகு]

இவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள (சங்கீர்த்னைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தபடுகின்றன. வைணவ ஆசாரியர் இராமானுசரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் இராமானுசர் மீதும் (உ.ம் கதுலன்னி கிலமைனா..., உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (உ.ம்: வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்கள் இயற்றியுள்ளார்.

சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் "ப்ரஹ்மம் ஒக்கடே" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலாயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார்.

கீர்த்தனைகள் தவிர ஒவ்வொன்றும் 100 பாடல்கள் அடங்கிய 12 சாதகங்களையும் இயற்றியிருக்கிறார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

திரைப்படம்[தொகு]

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னமய்யா என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமாச்சாரியார்&oldid=1571125" இருந்து மீள்விக்கப்பட்டது