திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.இதுகடைச்சங்கநூல்களில் ஒன்றுஎன்பது மரபுவழிச்செய்தியாகும். இதுபிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- முருகாற்றுப்படை என்னும் பெயரில் 5 நூல்கள் உள்ளன.
திருமுருகாற்றுப்படை - நெடுநல்வாடை (ஒப்புநோக்கம்)
திருமுருகாற்றுப்படை
1 ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.
2 அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன.பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம்
3 தொல்காப்பிய மரபு - 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்' திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. 'அளியன் தானே முதுவாய் இரவலன்'(முருகு 384) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் 'கூத்தர் ஆற்றுப்படை' என்று கூறுவது போன்றது.
நெடுநல்வாடை
1 குளிர் நடுக்கத்தைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது
2 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதாக அதன் கொளுக்குறிப்பு கூறுகிறது. பாடலில் அவன் பெயர் இல்லை. 'வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்'ஒன்றை வைத்துக்கொண்டு அவனது மெயக்காப்பாளன் அவனுடன் வந்தான் என்று கூறப்படுவது ஒன்றே பாண்டியன் என்று கொள்வதறகான அடிப்படை. அரண்மனையில் அரசி பிரிவால் வாடுகிறாள். இது பாலை. பாசறையில் பாண்டியன் போரில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு காயம் பட்ட குதிரைகளையும், யானைகளையும் தேற்றிக்கொண்டிருக்கிறான்.வாடைக்காற்று இருவரையும் வருத்துகிறது.
3 தொல்காப்பிய மரபு | 'வாகை தானே பாலையது புறனே' - தொல்காப்பியம் 1019 'கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு' மேல் வாகைத்திணைப் பாடல் வரும் - தொல்காப்பியம் 1022 இந்த நெறியில் அமைந்துள்ளது நெடுநல் வாடை
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் ஒருவரா வெவ்வேறு புலவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- நெடுநல்வாடை
- மதுரைக் காஞ்சி
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப் பாலை
- மலைபடுகடாம்