கலித்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கியம்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண் மேற்கணக்கு
எட்டுத்தொகை
ஐங்குறுநூறு அகநானூறு
புறநானூறு கலித்தொகை
குறுந்தொகை நற்றிணை
பரிபாடல் பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி
முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை
பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்ககால நிலத்திணைகள்
சங்க காலப் புலவர்கள் சங்ககாலப் பெண் புலவர்கள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
edit

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன,

பொருளடக்கம்

[தொகு] தொகுப்பு

கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது என் கீழ் வரும் இரு பாடல்களின் உதவியுடன் அறியலாம்.

[தொகு] பாடல் 1

இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:

பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்
கலவிவலார் கண்ட கலி.

கலித்தொகை நூலில் உள்ள

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன்
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன்
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன்
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன்

இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.

[தொகு] பாடல் 2

ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்

போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்
புல்லும் கலிமுறைக் கோப்பு.

இதில் சொல்லப்பட்டவை: தலைவன், தலைவி
பிரிதல் போக்கு - பாலை
புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி
இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்
நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை
இரங்கிய போக்கு - நெய்தல்

[தொகு] பாடல் தொகைகள்

கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், குறிஞ்சிக்கலியில் 23 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், மருதக்கலியில் 35 படல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், பாலைக்கலியில் 35 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

[தொகு] குறிஞ்சிக்கலி

புணர்தலும் புணர்தலும் நிமித்தமும் குறிஞ்சி ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளன.
"சுடர்த்தொடீஇ கேளாய்"
என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் 51 ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கூறப்படுகிறது.

[தொகு] முல்லைக்கலி

முல்லைக்கலிப் பாடல்கள், நோக்கம் ஒன்றுபட்டு இல்லிருக்கும் தலைவி ஆற்றியிருத்தலைக் கூறுகிறது. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

[தொகு] மருதக்கலி

பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும், அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும், தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.

[தொகு] நெய்தற்கலி

பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும்

[தொகு] பாலைக்கலி

பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும், தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.

[தொகு] கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்

'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருதுகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

                                      (கலி ,133)

[தொகு] கலித்தொகை காட்டும் சமூகம்

களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

[தொகு] வரலாற்று, புராணச் செய்திகள்

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கலித்தொகை&oldid=947809" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்