சமூகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமூகம் என்பது, தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு மனிதர் கூட்டத்தைக் குறிக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது, இது பல்வேறுபட்ட மக்களை அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிக்கக்கூடும்.
அரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். இதில், பெரும்பாலான ஊடுதொடர்புகள் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடனேயே இடம்பெறுகின்றன. சமூகம் என்பது சில வேலைகளில் பண்பாடு என்பதிலிருந்து முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிளிபர்ட் கீர்ட்ஸ் என்பவர், சமூகம் என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், பண்பாடு என்பது நம்பிக்கைகளாலும், குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார்.
ரிச்சார்ட் ஜெங்கின்ஸ் என்னும் சமூகவியலாளர், சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாளுகிறது என்கிறார்.
- புலன்களால் உணரப்படும் உலகம் மனித அனுபவத்தின் ஒரு சிறு பகுதியே. எனவே உலகைப் புரிந்து கொள்வதற்கு, மனிதத் தொடர்புகளைப் பண்பியல் (abstract) அடிப்படையில் (அதாவது, சமூகம் என்பதன் மூலம்) உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
- பல தோற்றப்பாடுகளை தனிப்பட்ட நடத்தைகளாகப் பார்க்க முடியாது. சில நிலைமைகளை விளக்குவதற்கு, "பகுதிகள் எல்லாவற்றின் கூட்டுத்தொகையிலும் பெரிதான ஒன்று" தேவையாக இருக்கிறது.
- கூட்டுநிலை, தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கைக் காலத்தையும் தாண்டி நிலைக்கக்கூடியது.
- மனித நிலைமைகள் எப்பொழுதும் எமது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது.