சமசுகிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமக்கிருதம் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சமசுகிருதம்
संस्कृतम्
தேவநாகரி எழுத்து முறை
பிராந்தியம்தெற்கு ஆசியா
Parts of தென்கிழக்காசியா
ஊழிபொ.ஊ.மு. 2000 – பொ.ஊ.மு. 600 (வேதகால சமசுகிருதம்);[1]
கிமு 600 முதல் தற்கால செம்மொழி சமசுகிருதம்)
ஆரம்ப வடிவம்
வேத மொழி
  • சமசுகிருதம்
தேவநாகரி,
also written in various other பிராமிய குடும்பம்.[2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sa
ISO 639-2san
ISO 639-3san
மொழிக் குறிப்புsans1269[3]

சமசுகிருதம் (ஆங்கிலம்: Sanskrit), சமற்கிருதம் அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.[5]

தற்போது கருநாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.[6] எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இராமாயணம் மற்றும் மகாபாரதம், புராணங்கள் போன்ற பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. காளிதாசர் சமசுகிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தார். பாணினி என்பார் சமசுகிருத மொழி இலக்கணத்தைப் படைத்தார்.

இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குசராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது.[7]

தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வட மொழிச் சொற்கள் அதிகம் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவர்.[8] சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வட மொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.

தமிழ் மொழிக்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமசுகிருத மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்தது.[9]

தொல்காப்பிய தமிழாக்கல் முறை

தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் வடமொழி என தமிழாக்க விதிக்கிறது.[10] எனவே சமசுகிருதம் அல்லது சமற்கிருதம் எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சருமா இயற்றிய வடமொழி நாடக இலக்கிய வரலாறு, சு. சாத்திரியார் இயற்றிய வடமொழி நூல் வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

தமிழ் மொழிக்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமசுகிருத மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.[11]

வரலாறு

சமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்)[12] வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராட்டிரி, சவுரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு பொ.ஊ.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.

இம் மொழிக்கு பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெத்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.

பல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாதர்), தந்தை (பிதர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். எயின்றிச்சு உரோத்து மற்றும் சொகான் ஏருணெட்டு அங்குலெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் இயோனுசு இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.

வடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும்.

வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் பொ.ஊ.மு. இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் பொ.ஊ.மு. முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம் பாணினியின் சு. பொ.ஊ.மு. 500 அட்டாத்தியாயி ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம்.

கீழ் மட்ட வடமொழியே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), மேம்பட்ட இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். வடமொழிக்கும் தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கு இடையேயும் கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது.

எழுத்து

வரலாற்று நோக்கில் சமசுகிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமசுகிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.

சமசுகிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு, வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று இரைசு இடேவிட்டு (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமசுகிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட வருணமாலா என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

செல்வாக்கு

நவீன இந்தியா

சமசுகிருதத்தின் சொற்றொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம்மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமசுகிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சமசுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமசுகிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குசராத்தி, இந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமசுகிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமசுகிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் சன கண மன, என்ற பாடல் பெருமளவில் சமசுகிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. வந்தே மாதரம் என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமசுகிருதத்தில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமசுகிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது.

சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமசுகிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமசுகிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமசுகிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமசுகிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.

இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமசுகிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியிலும், மலைய மொழியிலும், சப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமசுகிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகலாகு (Tagalog) மொழியிலும் குரு (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.

ஒலியனியலும் எழுத்து முறைமையும்

சமசுகிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமசுகிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும்.

ஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், வெடிப்பொலிகளும் (stops) மூக்கொலிகளும் (nasals) (வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை), இறுதியாக இடையொலிகளும் (liquids), குழிந்துரசொலிகளும் (sibilants).

(குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை. இவற்றுடன் மேலதிகமாக நீண்டொலிக்கும் உயிர்களும் உள்ளன. இவை அழைத்தல், வாழ்த்துதல் போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுகின்றன.

ஒலிபெயர்ப்பு

சமசுகிருதத்தை ஒலிபெயர்ப்பதற்கு இலத்தீன் வரிவடிவங்களைப் பயன்படுத்தும் பல முறைகள் உள்ளன. பெருமளவு பயன்பாட்டிலுள்ளது IAST (International Alphabet of Sanskrit Transliteration) என்னும் அனைத்துலக சமசுகிருத ஒலிபெயர்ப்பு முறை ஆகும். கல்விசார்ந்த தேவைகளுக்கான தரநிலையான இம்முறை, ஒலியடிக் கூறுகளை (diacritical marks) உள்ளடக்கியது ஆகும். கணினிகளில் இம்முறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வேறு முறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றுள், ஆர்வட்டு-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS என்பனவும் அடங்கும். ITRANS இணையத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ளது.

உயிரெழுத்துக்கள்

(கிட்டிய தமிழ் ஒலிக் குறியீடுகளுடன்)

अ - அ
आ - ஆ
इ - இ
ई - ஈ
उ - உ
ऊ - ஊ
ऋ "ரி". "ரு" என்பவற்றுக்கு இடையில்
ॠ "ரீ". "ரூ" என்பவற்றுக்கு இடையில்
ऌ லி லு என்பவற்றுக்கு இடையில்
ॡ லீ லூ என்பவற்றுக்கு இடையில்

(Sanskrit recognizes vocalic r (errr) and l (ulll), unlike, say, English)

கூட்டுயிர்கள்

(எளிய உயிரெழுத்துக்களின் சேர்க்கை) (Diphthongs)

ए - ஏ
ऎ - ஐ
ऒ- ஓ
औ - ஔ

உயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு.

மெய்யெழுத்துக்கள்

சமசுகிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:

மேற்கோள்களும் அடிக்குறிகளும்

  1. Uta Reinöhl (2016). Grammaticalization and the Rise of Configurationality in Indo-Aryan. Oxford University Press. பக். xiv, 1–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-873666-0. https://books.google.com/books?id=nR_4CwAAQBAJ. 
  2. "http://aboutworldlanguages.com/sanskrit"
  3. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Sanskrit". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/sans1269. 
  4. https://www.pratidintime.com/latest-census-figure-reveals-increase-in-sanskrit-speakers-in-india/
  5. உத்தராகண்ட் - வடமொழி[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Tale of two villages
  7. ‘Sanskrit has had profound influence on world languages’
  8. History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788172017989. https://books.google.lk/books?id=sqBjpV9OzcsC&pg=PA38&dq=sanskrit+borrowed+tamil+words&hl=en&sa=X&ved=0ahUKEwj56JnTusPhAhWPbN4KHY5yDjUQ6AEIKDAA#v=onepage&q=sanskrit%20borrowed%20tamil%20words&f=false. 
  9. Classical language
  10. Na Cañcīvi, Cū In̲n̲āci (1990). Tamiliyal Katturaikal: Papers in Tamilology. Cen̲n̲aip Palkalaikkal̲akam. பக். 85. http://books.google.co.uk/books?id=DL1kAAAAMAAJ&q=vatamoli+sanskrit&dq=vatamoli+sanskrit&hl=en&sa=X&ei=PTWSUeb0GqOg0wXV3YCwBA&ved=0CDoQ6AEwAQ. 
  11. Classical language
  12. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:1188.tamillex[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சமசுகிருதம்ப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமசுகிருதம்&oldid=3824863" இலிருந்து மீள்விக்கப்பட்டது