மனுநீதிச் சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) எல்லாளன் என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மனுநீதிச் சோழன் சிலை

மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன்.

வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. [சான்று தேவை]

எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.

இலக்கியக் குறிப்புக்கள்[தொகு]

சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது[1]. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன[2]. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது[3]. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது[4]. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது.

முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது[5]. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

கதை[தொகு]

மனுநீதிச் சோழனது மகன் வீதிவிடங்கன், தேரேறி வீதி உலாக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்றான்.

மகாவம்சம்[தொகு]

கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளி நூலான மகாவம்சம் கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது[6].

கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள்[தொகு]

கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்[தொகு]

கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் திருவாரூர் கல்வெட்டையும் திருவாரூர் சிற்பத்தையும் ஆதாரமாகக் கொண்டு, மனுநீதிச்சோழன் வாழ்ந்தது உண்மையே என்று குறிப்பிடுகின்றார்.[7]

கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா[தொகு]

தமது ஆய்வுப்பேழை எனும் நூலில் மனுசரிதக் கல்லெழுத்து முழுமையையும் அதன் தகவல்களையும் தருகின்றார். இதில் மனு திருவாரூரில் இருந்து அரசாண்டவர் என்றும் மனுவின் மந்திரி பெயர் இங்கனாட்டுப் பாலையூடையான் உபயகுலாமலன் என்றும் மனுவின் மகன் பிரியவிருத்தன் என்றும் திருவாரூர் கல்வெட்டுத் தகவல்களைத் தெரிவிக்கின்றார்.

புலவர் வே.மகாதேவன்[தொகு]

"சேக்கிழார் சொல்லாத செய்திகள்" என்ற தலைப்பில் திருவாரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மனுவின் அமைச்சர் பற்றிய செய்திகளையும், மனுவின் வரலாற்றைக்கூறிய சேக்கிழார் அதிலுள்ள பிற தகவல்களைச் சொல்லாது விட்டதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். அமைச்சர் பதவியிலிருந்தவரான சேக்கிழார் தகவல்களை மிகுந்து தேர்ந்தே கூறினார் என்பதை அடிப்படையாகக் கொள்கிறார். திருவாரூர் மனுசரிதக் கல்வெட்டு அறக்கொடை பற்றிய சாசனம். இதன் ஆரம்ப வரிகள் "பூலோக ராஜ்யம் செய்கிற சூர்ய புத்ரன் எனும் மனு தன் புத்ரன் ஏறி வருகிற தேரில்.."என்பது. சூர்யபுத்ரன் மனு எனும் தொடக்கக் கருத்தில் கருத்து வேறுபாடு கொண்ட சேக்கிழார் கல்வெட்டின் பிற செய்திகளையும் தவிர்த்துவிட்டார் என்று கருதுகிறார். [8]

சூரிய மனுவிலிருந்து சோழ மன்னன் வேறுபட்டவன் என்ற கருத்தை சேக்கிழார் கொண்டிருந்தார் என்பதை புலவர் வே.மகாதேவன்,மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தம் பெயராக்கினான் (100), தொல்மனு நூல் தொடைமனுவால் துடைப்புண்டது (122) எனும் சேக்கிழாரின் பெரியபுராண வரிகள் கொண்டு சுட்டுகிறார்.[8]

குறிப்புகள்[தொகு]

 1. சிலப்பதிகாரம், வழக்குரை காதை 53-55
 2. சிலப்பதிகாரம், கட்டுரை காதை 58
 3. பழமொழி நானூறு, அரசியல்பு, பாடல் 242.
 4. பெரியபுராணம், திருமலைச் சருக்கம், திருநகரச் சிறப்பு, பாடல்கள் 13 - 50
 5. indianfolklorist.com இன் இந்தப் பக்கத்தில் இருந்து
 6. Wijesinha, L. C., 1996. பக். 82.
 7. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=3594
 8. 8.0 8.1 அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61

உசாத்துணைகள்[தொகு]

 • சிறீசந்திரன், ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001.
 • சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)
 • பழமொழி நானூறு, மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
 • Wijesinha, L. C. (Translator), Mahavansa Part-1", Asian Educational Services, 1996, New Delhi, (First Published in 1889, Colombo).

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மனுநீதிச்_சோழன்&oldid=1764701" இருந்து மீள்விக்கப்பட்டது