பழையாறை பட்டீச்சரம் கோவில்
காமதேனுவின் மகளாகிய பட்டியால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயர். தலத்தின் பெயர் பழையாறை என்பது. அது பெரிய நகரமாய் இருந்த இடம். சோழ அரசர்கள் முடி சூடும் ஐந்து நகரங்களில் ஒன்று. இப்பொழுது அது பல ஊர்களாகப் பிரிந்து வழங்குகிறது. பட்டீச்சரம் என்னும் கோயில் இருக்கும் ஊர் முன்பு (திருஞானசம்பந்தர் காலத்தில்) மழபாடி (கொள்ளிடத்தின் வடபால் மழநாட்டைச் சேர்ந்த திருமழபாடி என்பது வேறு தலம்.) என்று வழங்கப்பெற்றது. இப்பொழுது அவ்வூரும் பட்டீச்சரம் என்றே வழங்கப்பெறுகின்றது. திருஞானசம்பந்தப்பெருமான் அதை மழபாடி நகரம் என்றே பாடியுள்ளனர்.
பொருளடக்கம் |
இருப்பிடம்[தொகு]
இது கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப்பாதையில் இருக்கும் தாராசுரம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே சுமார் 3. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்களுள் இருபத்துமூன்றாவது ஆகும்.
பட்டீச்சரம்[தொகு]
இறைவரின் திருப்பெயர் பட்டீச்சுரநாதர். இறைவியின் திருப்பெயர் பல்வளைநாயகி. தீர்த்தம் ஞானதீர்த்தம். மரம் வன்னி. இராமபிரான் வழிபட்டுப் பிரமகத்திதோஷம் நீங்கப்பெற்றான். இவ்விழா மார்கழி அமாவாசையில் கொண்டாடப்பெறுகின்றது. திருஞானசம்பந்தர் திருச்சத்தி முற்றத்தினின்று இப்பதிக்கு எழுந்தருளியது ஆனி முதுவேனிற் காலமாதலால், இறைவன் பூதங்களின் மூலம் முத்துப் பந்தரைக் கொடுத்தருளிய தலம். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் முதல் தேதியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப் பெற்றுவருகின்றது. கோயில் நந்திகள், திருமுன்பிற்குச் சற்று விலகியிருக்கின்றன. திருஞானசம்பந்தப் பெருந்தகையார் எழுந்தருளும் போது நேரில் கண்டுகளிக்கும் பொருட்டாக இறைவன் கட்டளைப்படி நந்திகள் விலகியிருக்கின்றன என்பர். இக்கோயிலில் திருப்பணி புரிந்த கோவிந்த தீட்சதர், அவர்தம் மனைவியார் பிரதிமைகள் எழுந்தருளுவிக்கப் பெற்றுள்ளன.
கல்வெட்டு[தொகு]
இக்கோயிலில் ஐந்து கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டாம் கோபுரத்தின் உட்பக்கம் இருக்கும் கல்வெட்டு தஞ்சை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டதாகும். இவ்வூரில் திருமணம் நிகழும்போது தாம்பூலத்தை முதலில் இவ்வூரினர்களாகிய செட்டியார்கள், பட்டுநூல்காரர்கள் என்போருள் எவர்களுக்கு முதலில் கொடுப்பது என்ற தகராறு எழுந்தது. முடிவில் இக்கோயிலில் எழுந் தருளியிருக்கும் அம்மனுக்கு ஒரு புடைவையையும் வெற்றிலை பாக்கையும் முதலில் கொடுத்துவிட்டுப் பின்னர் அவ்விருவகுப்பாரும் எடுத்துக் கொள்வது என்னும் முடிவுபற்றியதே அது. கிரந்தத்தில் உள்ள கல்வெட்டு கோயிலைப் பழுது பார்த்ததைப்பற்றிக் கூறுகின்றது. கிரந்தத்திலுள்ள இரண்டு செய்யுள்கள், புனித இடங்களாகிய விருத்தா சலம், கமலாலயம், வெண்காடு, சாய்க்காடு, கைலாசம் இவைகளைப் போல் பட்டீச்சரமும் ஒன்று என்று குறிப்பிடுகின்றன. வெளிப் பிராகாரத்தில் பலிபீடத்தின்அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு, திருஞானசம்பந்தர் மடம், திருநாவுக்கரசு மடம், திருமூலதேவர் திருமடம் என்பவை பற்றிக் குறிப்பிடுகின்றது.([1]
சிறப்புக்கள்[தொகு]
சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கின. இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது.
பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும். சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம்.
மங்கையர்க்கரசி அம்மையார், அமர்நீதி நாயனார் அகியோர் அவதரித்த பதி:[தொகு]
மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் ஆவார். மணிமுடிச் சோழர் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவர். இவரே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவராக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்ற அரசரும் இவரே ஆகும் [2]
அமர்நீதி நாயனார்- 63 நாயன்மார்களுள் ஒருவர்.பழையாறை இவரது அவதாரத் தலம்.
இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது. இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
சுற்றியுள்ள முக்கியத் திருக்கோயில்கள்:[தொகு]
இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷ¤ணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.
- ↑ See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927, No. 257-261
- ↑ திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.