அழகர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்
ஆள்கூறுகள்: 9°20′N 78°02′E / 9.33°N 78.03°E / 9.33; 78.03ஆள்கூறுகள்: 9°20′N 78°02′E / 9.33°N 78.03°E / 9.33; 78.03
பெயர்
பெயர்: கள்ளழகர்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ் நாடு
மாவட்டம்: மதுரை
அமைவு: தமிழ் நாடு, இந்தியா
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை

அழகர் கோவில் (கள்ளழகர் திருக்கோயில்) மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்ப்டும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.

தலவரலாறு[தொகு]

சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகையாற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டுவணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.

தலத் தகவல்[தொகு]

  • மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
  • தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
  • காட்சி - சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
  • திசை - கிழக்கே திருமுக மண்டலம்
  • தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
  • விமானம்- சோமசுந்தர விமானம்
  • உற்சவர் - கள்ளழகர்

நைவேத்தியம்[தொகு]

அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்து இந்த தோசை தயாரிக்கப்படும்.[1]

பாடல்கள்[தொகு]

உதாரணமாக

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.

-நாச்சியார் திருமொழி

ஆக மொத்தம் 108 பாடல்கள். இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பரிபாடலில்[தொகு]

இக்காலத்தில் இம் மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்

பாடல் (மூலம்) செய்தி
கள்ளணி பசுந்துளவினவை கருந்துளசி மாலை அணிந்தவன்
கருங்குன்று அனையவை கருங்குன்றம் போன்றவன்
ஒள்ளொளியவை ஒளிக்கு ஒளியானவன்
ஒரு குழையவை ஒரு காதில் குழை அணிந்தவன்
புள்ளணி பொலங்கொடியவை பொலிவுறும் கருடக்கொடி உடையவன்
வள்ளணி வளைநாஞ்சிலவை மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
சலம்புரி தண்டு ஏந்தினவை சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்
வலம்புரி வய நேமியவை சங்கும், சக்கரமும் கொண்டவன்
வரிசிலை வய அம்பினவை வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்
புகர் இணர் சூழ் வட்டத்தவை புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்
புகர் வாளவை புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்

வட்ட வடிவக் கருவறை[தொகு]

கோயில்களின் கருவறை சமசதுரம், வட்டம், முக்கோண வடிவங்களில் அமைக்கப்படும். சதுரம் மற்றும் வட்ட வடிவம் இந்தியக் கோயில்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இதில் வட்ட வடிவம் இறந்தவர்களோடு தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பதால் புத்த ஸ்தூபிகளும், பள்ளிப்படைக் கோயில்களுக்கும் அடிப்படையாக அமைந்தன. இருப்பினும் இந்து சமயத்தில் சில கோயில்கள் வட்ட வடிவக் கருவறையுடன் அமைந்துள்ளன. அழகர் கோயில் கருவறை வட்ட வடிவத் தரையமைப்பைக் கொண்ட கோயிலாகும்.[2]

சிறப்புகள்[தொகு]

மதுரை மீனாட்சி அம்மனின் சகோதரனாக இக்கோவிலில் உள்ள மூலவர், கள்ளழகர் கருதப்படுகிறார்.

விழாக்கள்[தொகு]

சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை[3] என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=21350
  2. டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல் பக்கம் 84
  3. "Etir Sevai". The Hindu (Chennai, India). 18 April 2011. http://www.hindu.com/2011/04/18/stories/2011041861280400.htm. 

இவற்றையும் காண்க[தொகு]

பழமுதிர்ச்சோலை

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்_கோவில்&oldid=1826553" இருந்து மீள்விக்கப்பட்டது