நாச்சியார் திருமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.[1]

பாசுரங்கள் பற்றிய சுருக்கங்கள்[தொகு]

இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.

  1. முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.
  2. இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.
  3. கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.
  4. நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.
  5. குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.
  6. மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள் ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.
  7. ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.
  8. மேகவிடுதூதாக அமைந்த எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.
  9. ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்லன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.
  10. மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.
  11. திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.
  12. பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.
  13. அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.
  14. பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.

சில பாடல்கள்[தொகு]

தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியையும் தொழுதேன்

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
ஆண்டாள், நாச்சியார் திருமொழி, முதல் பாடல்[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "P202245.htm". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  2. "1 தையொரு Archives". Dravidaveda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாச்சியார்_திருமொழி&oldid=3898789" இலிருந்து மீள்விக்கப்பட்டது