செல்லத்தம்மன், கண்ணகி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லத்தம்மன் - கண்ணகி கோயில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி. மீ., தொலைவில் சிம்மக்கல் பகுதியில், வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது. செல்லத்தம்மன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத எட்டுக் கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள் தேவி செல்லத்தம்மன். செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

இக்கோயிலில் கண்ணகிக்கும் தனிச்சந்நதி உள்ளது. இடது கையில் சிலம்பும் வலது கையில் செண்டும் ஏந்திய நிலையில் அருள் புரிகிறார். கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குலப்பெண் மாதரி இடைச்சி அம்மனாக வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். இக்கோயில் 1500 வருடங்கள் பழமையானது. தல மரம் வில்வமரம் மற்றும் அரசமரம்; தீர்த்தம் வைகை. [1]

சன்னதிகள்[தொகு]

அய்யனார், பைரவர், ஐயப்பன் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். விநாயகர், மீனாட்சி - சுந்தரேசுவரர், மயில் மீது அமர்ந்த முருகப்பெருமான் ஆகியோர் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். முன் மண்டபத் தூண்களில் அஷ்ட காளி சிற்பங்கள் உள்ளன. பேச்சியம்மன் தெற்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளாள். கருப்பசாமியும், துர்க்கையும் வடக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர்.

சிறப்பு[தொகு]

மீனாட்சி கோயிலுக்குள் மற்ற கோயிலிலிருந்து சுவாமியோ அம்மனோ உள்ளே செல்ல முடியாது. ஆனால் இக்கோயில் தெய்வமான செல்லத்தம்மன் மட்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வரும் அனுமதி பெற்றிருப்பது சிறப்பாகும்.

வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்கள்[தொகு]

  • கோப குணம் மறைய, கணவன் - மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி குடும்பப் பிரச்னைகள் அகலவும் வேண்டுதல் நடக்கிறது.
  • நாக தோசம் மற்றும் ராகு, கேது தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து குங்குமம் தடவிய பஞ்சுத்திரி மாலை அணிவிக்கின்றனர்.
  • இங்குள்ள வன பேச்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டு குடும்ப சண்டை- பங்காளி சண்டை நீங்கி ஒற்றுமையாக இருக்க விபூதி வாங்கிச் செல்கிறார்கள்.
  • அம்மனுக்கு அபிசேகம் செய்து, துணி அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து பெண்கள் வழிபடுகின்றனர்.

சிறப்பு நாட்கள்[தொகு]

  • தை மாதம் மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள்
  • நவராத்திரி நாட்கள்

திருவிழா[தொகு]

செல்லத்தம்மன் கோயில், தை மாத பிரம்மோற்சவ திருக்கல்யாணத்தன்று செல்லதம்மன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிவன் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவாள். சிவன் சன்னதியிலிருந்து பட்டுப்புடைவை எடுத்து வந்து செல்லத்தமன்னுக்கு அணிப்பவர். பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படும். மறுநாள் செல்லத்தம்மன் திருமணப்பட்டுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பாள்.

மதுரையின் காவல் தெய்வம்[தொகு]

மதுரை நகரின் காவல் தெய்வமாக அமைத்த காளி தேவி, பிற்காலத்தில் தன்னை வழிபடும் அடியவரின் துயரங்களை தீர்த்து இன்பம் நல்கியதோடு செல்வ வளமும் அருளியதால் செல்வத்தம்மன் என்று அழைக்கபட்டாள். அந்த பெயரே பின்னர் மருவி செல்லத்தம்மன் என்று வழங்கப்படலாயிற்று.

இதனையும் காண்க[தொகு]

பேச்சியம்மன் கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-13.