நாமக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாமக்கல்
—  தேர்வு நிலை நகராட்சி  —
நாமக்கல்
இருப்பிடம்: நாமக்கல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°14′N 78°10′E / 11.23, 78.17அமைவு: 11°14′N 78°10′E / 11.23, 78.17
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு வ.தட்சிணாமூர்த்தி.இ.ஆ.ப
நகராட்சித் தலைவர் இரா. கரிகாலன்
ஆணையர் எசு. செழியன்
சட்டமன்றத் தொகுதி நாமக்கல்
சட்டமன்ற உறுப்பினர்

கே. பி. பி பாஸ்கர் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

53,040 (2001)

960 /km2 (2 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 55.24 சதுர கி.மீட்டர்கள்s (21.33 சதுர மைல்)
இணையதளம் www.municipality.tn.gov.in/namakkal


நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்[3]. 2011ல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது [4]. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது.

வரலாறு[தொகு]

"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது [5]. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது [6]. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர் [7]

இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[8]


நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார். அவன

நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது.

ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார். அவனுடன் உக்கிரமாகப் போரிட்டு, ஒரு கொடூரனை கொடூரமாக வதம் செய்ததால், அந்த உக்கிரம் தணியாமல் கர்ஜித்தார். சாந்த ஸ்வரூபியான ஸ்ரீமந் நாராயண அவதாரம் என்றாலும், பகவானின் உக்கிர ஸ்வரூபத்தை எப்படித் தாங்குவது? எனவே, அவருடைய சாந்தமான குணத்தை மீண்டும் அவருக்கு நினைவூட்ட, கருணையே வடிவான மகாலட்சுமியை வேண்டினர் தேவர்கள். ஆனால், அவர்கள் சொல்வதைக் கேட்ட அன்னையோ உக்ர ரூபத்தில் இருந்த அவருக்கு அருகில் செல்லவே பயந்தாள். எனவே இறுதியில் பக்த பிரகலாதன் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்தான்.

இதன் பின்னர் பெருமாளைப் பிரிந்து தவித்த அன்னை மகாலட்சுமி, ஸ்ரீநரசிம்மப் பெருமானின் அருளைப் பெற ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து தவம் செய்து வந்தாள்.

ராமாவதாரத்தின் போது, போரில் மயக்கமுற்று வீழ்ந்த ராம லட்சுமணர்களை மீட்க, ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை கொண்ட மூலிகை மலையைப் பெயர்த்து வந்தார். அந்தப் பணி செவ்வனே நிறைவேறிய பிறகு, மீண்டும் அந்த மலையை அதன் இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார். அப்படித் திரும்பும் வழியில் இமயமலையில் கண்டகி நதியில் ஒரு பெரிய சாளக்கிராமக் கல்லைப் பார்த்தார். சாளக்கிராமக் கல், பகவான் விஷ்ணுவின் வடிவம் என்பர்.

அப்படி ஒரு கல்லில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியிருப்பதைக் கண்ட அனுமன், அந்தப் பெருங்கல்லை வழிபாட்டுக்காகப் பெயர்த்தெடுத்து வான் வழியே பறந்து வந்தார். சற்று தொலைவு வந்த பின்னர், அவர் நித்ய அனுஷ்டானம் செய்வதற்கான நேரம் நெருங்கியதை உணர்ந்தார்.

அந்த நேரம், இந்தத் தலத்தின் அருகே உள்ள கமல தீர்த்தம் அவருக்கு தென்பட்டது. சாளக்கிராமத்தினை கீழே வைக்க முடியாது என்பதால், மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது, அந்த தீர்த்தக் கரையில் மகாலட்சுமித் தாயார், தவமியற்றி வருவதைக் கண்டார்.

அருகே சென்று தாயாரை வணங்கிய ஆஞ்சநேயர், தாயாரின் தவத்துக்கான காரணத்தைக் கேட்டார். ஸ்ரீ விஷ்ணுவின் நரசிம்ம வடிவை தரிசிக்க விரும்புவதாகவும், அதனால் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை நோக்கி தவம் இருப்பதாகவும் கூறினார். ஆஞ்சநேயர், அவரது கையில் ஸ்ரீநரசிம்மர் ஆவிர்பவித்திருந்த அந்த சாளக்கிராமத்தைக் கொடுத்தார். தான் நீராடிவிட்டு, திரும்ப வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் சென்றார்.

ஆனால், அனுமன் திரும்ப வர காலதாமதம் ஆகிவிட்டது. எனவே, மகாலட்சுமித் தாயாரும் தன் கையில் வைத்திருந்த அந்த சாளக்கிராமப் பெருங்கல்லைத் தரையில் வைத்துவிட்டார். சற்றே தாமதமாக வந்த ஆஞ்சநேயர், அந்த சாளக்கிராமத்தை எடுக்க முயன்றார்.

ஆனால் முடியவில்லை. அது பெரிய மலையாக வளர்ந்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றினார். தன்னை நோக்கி தவமியற்றிய தாயாருக்கு தரிசனமும் அளித்து அருள் புரிந்தார். இதன் பின்னர், அவர் அருள் பெற்ற அனுமனும் இங்கேயே தங்கினார்.


ஸ்ரீ ஆஞ்சனேயர்

க்ஷராப்திநாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதால் இந்த நகரம் ஸ்ரீசைல úக்ஷத்ரம் என்றும், ஸ்ரீ சைலகிரி என்றும், கார்கோடகன் நற்கதி அடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் போற்றப் படுகிறது. ஸ்ரீமஹாலட்சுமி நரசிம்ம மூலமந்திரம் ஜபித்து தவமிருக்க, ஸ்ரீநரசிம்மரும் அகமகிழ்ந்து காவேரிக்கும் மஹாலட்சுமிக்கும் அருள்பாலித்தார். அப்போது, இந்தத் தலத்துக்கு வந்து, கமலாலயத்தில் குளித்து மனம் முழுக்க பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு, ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றில் இருந்து விடுதலை கிட்டும், சகல் நலன்களும் அடையப் பெறுவர் என ஸ்ரீநரசிம்மர் அவர்களுக்கு வரம் அருளியதாக தல புராணம் கூறுகிறது.

தந்தை காச்யப முனிவரிடம் குறும்பு செய்த கார்கோடகனை, காட்டுத்தீயில் சிக்கி அவதிப்படுமாறு சபித்தார் முனிவர். அவ்வாறு ஒரு சமயம் கார்கோடகன் காட்டுத் தீயில் சிக்க, நள சக்கரவர்த்தி அவனை அதிலிருந்து காப்பாற்றினார். தீயில் இருந்து காப்பாற்றப்பட்ட கார்கோடகன், ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவமிருந்தான். நாராயணரும் அவன் முன் தோன்றி, விருப்பம் யாதெனக் கேட்டார். ஆதிசேஷன் மீது பகவான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது போல், அடியேன் மீதும் பள்ளிகொண்டு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினான் கார்கோடகன். அவன் விருப்பத்தின்படி, ஸ்ரீ ரங்கநாதனாக, மலையின் பின்புறம் கார்கோடகசாயியாக காட்சியளிக்கிறார் பகவான் என தல புராணம் கூறுகிறது. மேலும் கார்கோடகன் தினமும் கமலாலய குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து நித்ய ஆராதனம் செய்கிறானாம்.

நாமக்கல்லில் சுமார் 18 அடி உயரத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கரங்களுடன் தனிக் கோயிலில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் கோயிலில் ஸ்ரீநாமகிரி தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஸ்ரீநாமகிரி தாயார் ஸ்ரீநரசிம்மமூர்த்தியை எண்ணி தவமியற்றி அருள்பெற்றதால் இக்குளம் கமலாலயம் எனும் சிறப்பு பெற்றது. கணிதமேதை ராமானுஜத்துக்கு கடினமான கணிதப் புதிர்களுக்கான விடைகளை கனவில் தோன்றி புலப்படுத்தினார் நாமகிரி தாயார் என்பர். இதை கணிதமேதை ராமானுஜமே வெளிப்படுத்தியிருக்கிறார். பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக நாமகிரி தாயார் விளங்குவது இப்பகுதி மக்களின் உணர்வுபூர்வமான பக்தியில் இருந்து புலனாகும்.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் காலை, மாலை வேளைகளில் நீராடி, பக்தியுடன் ஸ்ரீநாமகிரி தாயார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஆஞ்சநேயர் முதலிய சந்நிதிகளை பன்னிரு முறை வலம் வருகிறார்கள். அப்படி நியம நிஷ்டையுடன் ஸ்ரீ நாமகிரி தாயாரை தரிசிக்கும் பக்தர்கள் பேய், பிசாசு, பில்லிசூன்யம், ஏவல், தீராத நோய்கள், சந்ததியின்மை முதலிய குறைகள் நீங்கப் பெறுகிறார்கள்.

இந்தத் தலத்தில், நாமகிரி தாயாருக்கே முதலிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் தாமரையில் ஸ்ரீநாமகிரி தாயாரை முதலில் தரிசித்து பிறகே நரசிம்மப் பெருமாளை வழிபடுகிறார்கள். பக்தர்கள் புடவை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு முடி எடுத்தல் முதலிய காணிக்கைகளை செலுத்தி திருமஞ்சனம் முதலிய ஆராதனைகளால் ஸ்ரீநாமகிரி தாயாரை வழிபடுகிறார்கள்.

ஸ்ரீநாமகிரி என்ற தாயாரின் பெயராலேயே இந்தத் தலம் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது. அடியார்கள் தம் குழந்தைகளுக்கு நரசிம்மன், நாமகிரி என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். ஸ்ரீ நாமகிரி தாயாரின் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், ஸ்ரீநரசிம்மர் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் உள்ளிட்ட ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீநரசிம்மர் கோயில் கொண்டுள்ள இந்தத் தலம், மலையின் மேற்புற குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீது வைத்தும் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். சூர்ய சந்திரர்கள் கவரி வீச, வலப்புறம் ஈசனும், இடப்புறம் பிரம்மாவும் பகவானின் உக்கிரம் தீரவேண்டி வழிபடுகிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இது மும்மூர்த்தி தலம் என அழைக்கப்படுகிறது. இரணியனை வதைத்த பின், ரத்தக் கறையுடனும் கூரிய நகங்களுடனும் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.

இந்த மலையைச் சுற்றிலும் கோட்டை ஒன்று உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோயிலும் கோட்டையும் பாதுகாக்கப்படுகிறது. மலையைச் சுற்றி நரசிம்ம புஷ்கரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், க்ஷீராப்தி தீர்த்தம், கமலாலயம் சக்ரதீர்த்தம், தேவ தீர்த்தம், சத்ய புஷ்கரணீ முதலிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

நாமக்கல்லுக்கு வரும் பக்தர்கள், தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆஞ்சனேயர் முன் தமது குறைகளை வைத்து, காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். சனி, ராகு பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெயில் செய்த உளுந்த வடைகளால் மாலைகள் சாற்றியும் வாசனை சந்தனத்தால் அலங்காரம் செய்து மகிழ்ந்தும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாமக்கல், தமிழகத்தின் முக்கியமான நகரம் என்பதால், பேருந்து வசதி நிறைய உண்டு. கோயில் பற்றிய மேல் விவரங்களுக்கு கோயில் தொலைபேசி எண்: 04286-233999.


அமைவிடம்[தொகு]

நாமக்கலின் அமைவிடம் 11.23° N 78.17° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு இது அருகில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ஆறு காவிரி. நாமக்கல் நகரம் பின்வரும் நரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).

பொருளாதாரம்[தொகு]

 • உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
 • நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது.[9]
 • மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sago) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன.

சுற்றுலா இடங்கள்[தொகு]

நாமக்கல் ஆஞ்சநேயர்
 • இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.
அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நுழைவாயில்
 • அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
 • புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.
 • மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
 • நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.
 • நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள ஜேடரபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை.
 • நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும்.
 • நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
 • நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டியில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது.
 • நைனா மலையில் அருள்மிகு வரதராச பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
 • நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.
 • நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.

விளை பொருட்கள்[தொகு]

நாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நன்செய் விவசாயம் சிறிதளவும் புன்செய் விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள், கரும்பு, நெல், வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காசோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைபயறு, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

போக்குவரத்து[தொகு]

நாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை வாரனாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7 - NH7 இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை )நாமக்கல் வழியாக செல்கிறது. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (45 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும்.

நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி - சென்னை தொடர் வண்டி இயக்கப்படுகின்றன[10]. தற்போது நாகர்கோவில் - பெங்களூர் தொடர் வண்டி இயக்கப்படவுள்ளன.[11]

கல்வி[தொகு]

நாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடம். நாமக்கல் கல்லூரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

கல்லூரிகள் பட்டியல்[தொகு]

 • அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.
 • அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி (இருபாலர்), லத்துவாடி
 • நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி
 • கந்தசாமி கண்டர் அறிவியல் & கலைக்கல்லூரி
 • பிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி
 • செல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி
 • டிரினிட்டி பெண்கள் கல்லூரி
 • பிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி
 • அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி, எருமைப்பட்டி அஞ்சல்
 • செல்வம் தொழில்நுட்ப கல்லூரி
 • சி. எம். சி பொறியியற் கல்லூரி
 • கிங் பொறியியல் கல்லூரி

பள்ளிகள் பட்டியல்[தொகு]

 • பாரதி துவக்கப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
 • பாரதி உயர்நிலைப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
 • பாரதி மேல்நிலைப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
 • அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மோகனூர் சாலை ,நாமக்கல்(தெற்கு)
 • அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு
 • நகராட்சி உயர் நிலைப்பள்ளி
 • டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி
 • கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • கிரீன் பார்க் பள்ளி
 • ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி
 • பாரதி மேல்நிலைப்பள்ளி
 • நாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • மாருதி வித்யாலயா

மருத்துவமனை[தொகு]

நாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.

 • Anti Retro-Viral Treatment (ART)
 • Anti Retro-Viral drugs (ARV)

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் உள்ளதால் இங்கு நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.[12]

2011 உள்ளாட்சி தேர்தல்[தொகு]

2011 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் இரா. கரிகாலன் 30638 வாக்குகள் பெற்று நகரவை தலைவரானார்.[13] தனி சின்னம் கிடைக்காததால் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கூட்டணி கட்சியான பாஜக சின்னத்தில் போட்டியிட்டார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அருள் கே பாஜக 4647
கரிகாலன் இரா அதிமுக 30638
செல்வராஜ் எம் சுயேச்சை 392
செல்வராஜ் இரா திமுக 14310
நடராஜன் மு சுயேச்சை 387
புகழேந்திரன் எம் மதிமுக 1138
மணிமாறன் பழ விடுதலைச் சிறுத்தைகள் 295
வாசு சீனிவாசன் கே காங்கிரசு 966
வேல் எஸ்.கே தேமுதிக 4103

குறிப்பிடத்தக்க சிறப்புகள்[தொகு]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/18358
 3. http://municipality.tn.gov.in/namakkal/ph_Iso.htm
 4. 2011, சனவரி 21ல் நகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டது
 5. Gazetter of south india - page 61
 6. South India Handbook - Travel Guide page 150 பார்க்கப்பட்ட நாள் 2012 பிப்ரவரி 09
 7. GANDHIJI'S HARIJAN TOUR IN TAMIL NADU, PDF file
 8. http://www.hindu.com/thehindu/fr/2002/11/01/stories/2002110101441000.htm
 9. 1.htm "நாம‌க்க‌‌ல்‌லி‌ல் இரு‌ந்து வளைகுடா நாடுகளு‌க்கு 50 ல‌ட்ச‌ம் மு‌ட்டைக‌ள் ஏ‌ற்றும‌தி!". Web dunia. 25 டிசம்பர் 2007. http://tamil.webdunia.com/newsworld/news/business/0712/25/1071225035 1.htm. பார்த்த நாள்: 2007-12-26. 
 10. "Chennai-Palani daily express from October 1". thehindu. பார்த்த நாள் 4 மார்ச் 2014.
 11. "Interim railway budget dubbed as insipid for Coimbator". timesofindia. பார்த்த நாள் 4 மார்ச் 2014.
 12. "நாமக்கல்லில் நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் அறிமுகம்". 04 ஜனவரி 2008. http://thatstamil.oneindia.in/news/2008/01/04/tn-mobile-aids-detection-centre-in-namakkal.html. 
 13. உள்ளாட்சி தேர்தல் முடிவு

வெளிஇணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாமக்கல்&oldid=1702408" இருந்து மீள்விக்கப்பட்டது