வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாழை
வாழைக்குலையுடன் வாழை மரம்
வாழைக்குலையுடன் வாழை மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
குடும்பம்: Musaceae
பேரினம்: மியுசா (Musa)

வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது.[1] இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.[2]

வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை மரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும். சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.

2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

வரலாறு[தொகு]

தென் கிழக்கு ஆசியாவில் தான் வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.[1]

வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு புத்த மத ஏடுகளில் காணப்படுகிறது[மேற்கோள் தேவை]. மாமன்னர் அலெக்சாந்தர் இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன[மேற்கோள் தேவை]. கி.பி 200 ஆம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன[மேற்கோள் தேவை] . கி.பி 650இல் முகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டு வந்தனர். அரேபிய வியாபாரிகள் வாழையை ஆப்பிரிக்காவெங்கும் பரப்பினர். பின்னர் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மூலமாக வாழை அமெரிக்காவிற்கு சென்றது.

வாழையின் ஆங்கிலப் பெயர் 'பனானா' (banana) தோன்றியது ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய (மூலம்: வொலோஃப் என்ற ஆப்பிரிக்க மொழி) மொழியிலிருந்து இருக்கலாம். இருப்பினும், வாழையின் அறிவியல் பெயரான 'மூசா' (Musa), அரபுப்பெயரிலிருந்து வந்திருக்கலாம்.

இந்நாட்களில் வெப்பமான பகுதிகளெங்கும் வாழை பயிரிடப்படுகிறது.[2]

வாழைச்செடியின் உறுப்புகள்[தொகு]

வாழையின் உறுப்புகள்

வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது.[3]

ஓர்வித்திலைச் செடியான வாழையில் வேர்த்தொகுதி நார்க்கொத்தைப் போல, ஆழமாகச் செல்லாமல் பரவி நிற்கும். இவை இருவித்திலைச் செடிகளில் உள்ளதைப்போல ஆணிவேரைக் கொண்டிருக்க மாட்டா. இதனால் வலுவான காற்றடிக்கும்போது வாழைச்செடிகள் சாய்ந்துவிடக் கூடியவை.

தண்டுப்பகுதி பெரும்பாலான செடியினங்களில் மண்ணுக்கு வெளியே கதிரவனின் வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டுமே வளர்கிறது. வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி இலைக்காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும். இது போலித்தண்டு எனப்படும். வளர்ந்த செடியில் இவற்றின் ஊடே நடுவில் சற்றே உறுதியான நாராலானது போல் தோன்றும் தண்டுப் பகுதி மலர்க்காம்பாகும்.

இலைக் காம்புகள் மண்ணுள் இருக்கும் கிழங்கிலிருந்தே தோன்றி வளர்ந்து அடுக்கடுக்காக நீளமான இலைகள் தோன்றும். முதிர்ந்த இலைகள் கரும்பச்சை நிறத்திலும் புதியன இளம்பச்சை நிறத்திலும் இருக்கின்றன. புதிதாய் வெளிவரும் குருத்திலை தன் நீளத்தை மையமாகக் கொண்டு சுருண்டு இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக விரிந்து வளரும். இலைகளில் பாயும் நரம்புகள் நடுத்தண்டிலிருந்து இலையின் ஓரங்களை நோக்கி வரிசையாக ஏறத்தாழ ஒரே அளவு இடைவெளி விட்டு இணையாகப் பாய்கின்றன.

வாழையின் மலர்கள் ஒரு மாறுபட்ட பூங்கொத்தாக இருக்கின்றன. இருபால் உறுப்புக்களையும் கொண்ட பூக்களில் இருந்து முதலில் தண்டின் அடியில் ஆண் பூக்களும், பின்னர் நுனியில் பெண் பூக்களும் உருவாகின்றன. கொல்லைப்படுத்திய வாழையினங்களில் மகரந்தச் சேர்க்கை நடவாமலேயே விதைகளற்ற காய்கள் சீப்புகளில் உருவாகின்றன. அடுக்கடுக்கான சீப்புகள் பூந்தண்டைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இதை வாழைத்தார் என்பர். இக்காய்கள் படிப்படியாகப் பழுக்கின்றன. பொதுவாக ஒருமுறை தார் போட்டதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். விதைவழிப் பரவுதல் அரிது, புதிய கன்றுகள் கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.

வாழைச் சாகுபடி[தொகு]

வாழையின் விதைகள்
விதைகளுள்ள மூதாதைய காட்டுவாழை
விதைகளற்ற, இன்றைய மரபின வாழை

உலகில் இருவகையான வாழைகள் உள்ளன. காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana). பழ வகை தாவரங்களில் வாழைமரம் மட்டுமே ஒருவிதையிலைத் தாவரமாகும். மற்றைய பழமரங்கள் இருவிதையிலைத்தாவரங்களாகும். பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும். காய்வகை வாழைகள் நீளமாக இருந்தாலும் சற்று பட்டையான பக்கங்களுடன் இருக்கும்.

மனிதன் முதலில் பயன்படுத்திய பல காட்டுவாழை இனங்களின், பழங்கள் விதையுடன் இருந்தன. இவற்றுள், முக்கியமானது மூசா அக்கியூமினாட்டா (Musa acuminata)என்னும் வகை ஆகும். இந்தியாவில் மூதாதைய காட்டுவாழைகள் மூசா பால்பிசியனா (Musa balbisiana) விதையுடன் இருந்தன. ஆனால், இவை பூச்சி மற்றும் நோய் தாங்கும் குணமுடையவை. இயற்கையாகவே இவ்விரு சிற்றினங்களும் கலந்து விதைகளற்ற நற்குணங்களுடன் முப்படை மரபணுத்தாங்கிகளுடைய வாழை இனங்கள் உருவாயின மூசா சாப்பியென்ட்டம் (Musa X sapientum). பின்னர், இவை நிலத்தடி வாழைக்கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டன.

தற்போது வாழை இனங்கள் தங்களின் மூல சிற்றினங்களை குறிக்கும் விதமாக AA, BB, AB, AAA, AAB, ABB அல்லது BBB என அழைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில், A என்பது மூசா அக்கியூமினாட்டாவையும் (M.acuminata) B என்பது மூசா பால்பிசியனாவையும் (M.balbisiana) குறிக்கும். அதிக அளவில் B மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைக்காய்' இனத்தையும், அதிக அளவில் A மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைப்பழ' இனத்தையும் சேரும்.

தட்பவெப்பம்[தொகு]

வாழைச்சாகுபடி (2011)[Note 1]
Country Millions
of tonnes
Percentage
of world
total
Table 1: Production
 இந்தியா 29.7 20%
 உகண்டா 11.1 8%
 சீனா 10.7 7%
 பிலிப்பைன்ஸ் 9.2 6%
 எக்குவடோர் 8.0 6%
 பிரேசில் 7.3 5%
 இந்தோனேசியா 6.1 4%
 கொலம்பியா 5.1 4%
 கமரூன் 4.8 3%
 தன்சானியா 3.9 3%
All other countries 49.6 34%
Total world 145.4 100%
Table 2: Exports
 எக்குவடோர் 5.2 29%
 கோஸ்ட்டா ரிக்கா 1.8 10%
 கொலம்பியா 1.8 10%
 பிலிப்பைன்ஸ் 1.6 9%
 குவாத்தமாலா 1.5 8%
All other countries 6.0 34%
Total world 17.9 100%

நீர் அதிகம் கிடைக்கும், நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 - 30 °C இருப்பது நல்லது. 10 °Cக்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின் முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 - 50 கி.மீ வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 - 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.

மண்[தொகு]

வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல வடிகால் வசதி தேவை. நிலம் சற்றே காடித்தன்மையுடன் (அமிலத்தன்மையுடன்) இருப்பது அவசியம் (காரக்காடித்தன்மை சுட்டெண் pH 6.0). நீர் தேங்கக்கூடிய நிலமாக இருப்பின், உயர்த்தப்பட்ட வரப்புகளில் வாழை நடலாம்.

வாழைக்கன்றுகள்[தொகு]

வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கிலிருந்து வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது. நடுமுன் இம்முளைகளை வெந்நீரிலும், பூச்சி மருந்துகளிலும் நனைக்கின்றனர். இதன்மூலம் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைகிறது. திசு வளர்ப்பு முறையிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில பயிர்த்தொழிலாளர்கள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.

தோட்டம் அமைத்தல்[தொகு]

வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வேறு குருத்துக்கள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.

அழிக்கும் பூச்சிகளும் நோய்களும்[தொகு]

நோய் தாக்கம்

வாழை மரங்கள் கலப்பின விருத்தியில்லாமல் இனப்பெருக்கம் செய்வதால், பல்வேறு வகையான நோய் எதிர்ப்பு மரபணுக்கள் ஒரே இரக வாழையில் இருப்பதில்லை. எனவே வாழை மரங்கள் பல நோய்களால் எளிதில் தாக்கப்படுகின்றன. கறுப்பு சிகடோகா, பனாமா நோய் ஆகிய பூஞ்சை நோய்கள் வாழையைத் தாக்கும் முக்கியமான நோய்களாகும். ஃபியூசாரியம் எனும் பூஞ்சையால் உண்டாகும் பணாமாவாடல் நோய் 1950 களில் குரோசு மைக்கேல் எனும் வாழை இனத்தையே அழித்து விட்டது. கறுப்பு சிகடோகா நோய் 1960 களில் ஃபிஜி தீவுகளிலிருந்து ஏற்றுமதியான வாழைப்பழத்தைச் சுற்றப் பயன் படுத்திய இலைகள் மூலம் ஆசியாவெங்கும் பரவியது.

கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் நச்சுரி நோய்களும் எளிதில் பரவுகின்றன. நுனிக்கொத்து நோய் வாழையை அழிக்கும் முக்கியமன நச்சுரி நோயாகும். நோய் தொற்றிய மரங்களை அழித்து எரிப்பதும், நோயைப் பரப்பும் பூச்சிகளை அழிப்பதுமே இதற்கு தீர்வாகும்.

வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி டன்ஸ் விளைவிக்கப்படுகிறது [4] வாழையில் ஏற்படும் பக்டேரியா, பூஞ்சை, தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன.[5][6] வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயெய் அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.

 • வாழை நுனி மொசைக் நுண்மம்

வாழை நுனி மொசைக் நுண்மம் (Banana bract mosaic virus) [7]: இவைகள் நேர்மறை (+) கொண்ட, ஓரிழை ஆர்.என்.எ தீ நுண்மம் (RNA) ஆகும். இவைகள் போட்டி (Poty) பிரிவில் வருபவை ஆகும்.

 • வாழை குறை மொசைக் நுண்மம் (Banana mild mosaic virus) [8]
 • வாழை தீ நுண்மம் X (Banana virus X (BVX)) [9]

இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.

 • வாழை இழை கொத்து தீ நுண்மம் (Banana bunchy top virus) [10]

இவைகள் ஓரிழை உடைய டி.என்.எ ( DNA) தீ நுண்மம் ஆகும். நானோ நுண்மந்தில் (nano virus) என்னும் பிரிவில் வருபவை.

 • வாழை வரி நுண்மம் (Banana streak virus) [11]

பார ரெட்ரோ நுண்மந்தில் (pararetro virus) வருவது. மேலும் மரபு இழையில் உள்ள வேறுபாட்டை பொருந்து, மூன்று வகையாக பிரிக்கலாம்.

வாழை வரி தங்க விரல் நுண்மம் -Banana streak Gold Finger virus (BSGFV),
வாழை வரி மைசூர் நுண்மம்- Banana streak Mysore virus (BSMyV)
வாழை வரி ஒபனோ ல் எவாய் நுண்மம் - Banana streak Obeno L’Ewai virus (BSOLV)
 • வாழை மறு- இறத்தல் நுண்மம் (Banana die-back virus), நைசிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.[12]

மேலும் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் பிழை-ஒற்றுகளை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மந்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையெய் வேறுப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பல தீ நுண்மங்கள் தாக்கும் பொழுது, அவைகளிடையெய் ஏற்படும் உள்-இணைவுகள் அல்லது மறு-கலத்தல்கள் (Recombination) புதிய தீ நுண்மங்களை ஏற்படுத்துகின்றன. இவைகள் முன்பை விட வீரியம் கூடுதலாகவும் பெருத்த இழப்புகளையும் ஏற்படுத்த வல்லன.

அறுவடை[தொகு]

அறுவடையான வாழைத்தார்கள்

பழங்கள் முக்கால்வாசி முற்றிய நிலையில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக, முதல் சீப்பு தோன்றிய மூன்று மாதங்களில் வாழைத்தார் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அறுவடையின் போது முழு வாழைத்தாரும் வெட்டப்பட்டு கம்பிகளில் தொங்கவிடப்பட்டு தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. உள்நாட்டுச் சந்தைக்கு தார்கள் அப்படியே விற்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான வாழைகள் சீப்புகளாக வெட்டப்பட்டு, வாழைப்பால் கறையை நீக்க, 'பிளீச்'(வெளுத்தல்) (சோடியம் கைப்போக்ளொரைட்) கரைசலில் நனைக்கப்படுகின்றன. பின்னர் அவை பத்திரமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன.

பழுக்க வைத்தல்[தொகு]

மரத்தில் பழுக்கும் வாழைப்பழங்கள்
 • ஏற்றுமதிக்காகப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட பழங்களை, தேவைப்படும்போது, எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்குத் தயாராக்கப் படுகின்றன.
 • வளரும் நாடுகளில், இயற்கையான பாரம்பரிய ஊதல் முறையில் பழுக்க வைக்கப் படுகின்றன. இம்முறையில் காலதாமதமும், பழங்கள் கனிந்தும் விடுகிறது. கனிந்த வாழைத்தார்களை, பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அதிலுள்ள பழங்கள் உதிர்ந்து, உழவர்களுக்கு இழப்பைத் தருகின்றன. எனவே, இம்முறையை அதிகம் பயன்படுத்துவதில்லை.
 • தற்போது அதிக விளைச்சல் (இந்தியா) செய்யப்படுவதால், பெரும்பாலும், தார்கள் செங்காய் நிலைக்குச் சற்று முந்தைய, காவெட்டு நிலையிலேயே அறுவடைச் செய்யப்படுகிறது. அத்தார்கள் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறது.
 • எத்திலீன் வாயுக்கு மாற்றாக, அதே குணமுடைய், ஆனால் தீப்பற்றும் தன்மையுடைய அசிட்டிலீன் வாயு அல்லது கால்சியம் கார்பைட்( CaC2) மூலம், பழுக்க வைக்கப் படுகிறது. இது மனித உடலின் செரிமான மண்டல நலத்திற்க்கு, மிகத்தீமை விளைவிக்கக் கூடியது. சில நபர்களுக்குப் புற்றுநோயும் உருவாகிறது.

பயன்பாடு[தொகு]

வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை அட்டவணையில் பார்க்கலாம்.

வாழை (தோல் நீங்கியது)
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 90 kcal   370 kJ
மாப்பொருள்     22.84 g
- சர்க்கரை  12.23 g
- நார்ப்பொருள்  2.6 g  
கொழுப்பு 0.33 g
புரதம் 1.09 g
உயிர்ச்சத்து ஏ  3 μg 0%
தயமின்  0.031 mg   2%
ரிபோஃபிளாவின்  0.073 mg   5%
நியாசின்  0.665 mg   4%
பான்டோதெனிக் அமிலம்  0.334 mg  7%
உயிர்ச்சத்து பி6  0.367 mg 28%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  20 μg  5%
உயிர்ச்சத்து சி  8.7 mg 15%
கால்சியம்  5 mg 1%
இரும்பு  0.26 mg 2%
மக்னீசியம்  27 mg 7% 
பாசுபரசு  22 mg 3%
பொட்டாசியம்  358 mg   8%
துத்தநாகம்  0.15 mg 2%
One banana is 100–150 g.
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database
மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
 • வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது. பனிக்குழை (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து பேக்கரி(வெதுப்பகம்) வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
 • வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.
 • வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.
 • வாழைப்பழத்தில் உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒருவகை புரதம் நம் உடலில் சேரும்போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது. இது உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 • பொட்டாசியம் சத்து அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
 • வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு உறைகுளிர் பெட்டியில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
 • வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, வாழைப் பொரிப்புகள் செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
 • வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
 • அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
 • வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. நீரிழிவு என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
 • வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.

வாழைப்பழ வகைகள்[தொகு]

இளஞ்சிவப்பு வாழைக்குலை
வாழைப்பழ வகைகள்
 • செவ்வாழை (சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும்)
 • ரசுதாளி (இதை யாழ்ப்பாணத் தமிழர் கப்பல் பழம் என்கிறார்கள். சிங்களவர்கள் கோழிக்கூடு என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் பறங்கிப்பழம் என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.) இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்
 • கற்பூரவல்லி வாழைப்பழம் இதனைத் தேன் வாழை என்பார்கள்.
 • மலை வாழைப்பழம்
 • பேயன் வாழைப்பழம் பேய்கள் நடமாடும் சுடுகாடுகளில் சிவ பெருமான் உலாவுவதாக பேசப்படுவதால் அவர் பேயன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பேயன் பழம்.
 • பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)இதைத்தான் இரதை வாழைப்பழம் என்பதா?
 • பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)
 • நேந்திர வாழைப்பழம் (கேரளாவில் உற்பத்தியாகின்றன)
 • மொந்தன் வாழைப்பழம்அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள். விஷ்ணு பகவானுக்கு மற்றொரு பெயர் முகுந்தன்.அதுவே மருவி மொந்தன் என்றாகி அந்தப் பெயரில் மொந்தன் பழம்.
 • பூவன் வாழைப்பழம் எப்போதும் பூவின்மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கும் பிரம்ம தேவன் பூவன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பூவன் வழைப்பழம்.
 • கப்பல் வாழைப்பழம்இதுவே ரசுதாளி வாழைப் பழம்.
 • கதலி வாழைப்பழம் இது வாழைப்பழத்திற்கு வடமொழி பொதுப் பெயர்.
 • ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
 • மோரீஸ் வாழைப்பழம்
 • செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
 • ஏற்றன் வாழைப்பழம் அளவில் பெரிதாக இருக்கும்.தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம் விளைகிறது.ஏற்றன் பழத்தில் தயாரிக்கப்படும் சிப்ஸ் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பிரசிதிப்பெற்றது.
 • மட்டி வாழைப்பழம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

மருத்துவ குணங்கள்[தொகு]

 • வாழைப்பூவை சமைத்துண்ணுவதால், நமது செரிமாண மண்டலம் முழுமைக்கும் மிக மிக நல்லது.
 • வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக மொந்தன் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல் விழும் காலங்களில் ஆடிக்கொண்டிருக்கும் பல்லை, பிடுங்குவதற்கு பதிலாக பெரிய அளவிலான வாழைப்பழம் (மொந்தன் அல்லது ரஸ்தாளி) போன்றவைகளை வலுக்கட்டாயமாக கொடுப்பர். பல் வாழைப்பழத்துடன் சேர்ந்து வயிற்றில் சென்று பிறகு மலத்துடன் வெளியேறிவிடும்.
 • தீப்புண்ணுக்கு வாழைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட சார் எரிச்சலை குறைக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை கொண்டு போர்த்துவது பல்வேறு இடங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. இதை அப்படியே சாப்பிடலாம். ஐஸ்கிரீம், சாண்ட்விச், தயாரிக்க இந்தப் பழம் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

இதைத் தவிர கற்பூர வாழை, நேந்திர வாழை, பூவன் வாழை எனப் பலவகை உண்டு.

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும். தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும். இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும். சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும். கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

மஞ்சளும், பச்சையுமான நிறங்களுள்ள வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இதில் பலவகைகள் அடங்கியுள்ளன. உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.

தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

பண்பாட்டு முக்கியத்துவம்[தொகு]

வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கட்டாயம் குலைகளுடன் கூடிய வாழை மரங்களை வாசலில் தோரணமாகக் கட்டுவர்.வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்.

இலக்கியத்தில் வாழை[தொகு]

வாழைப் பூங்கொத்து

இலக்கியத்தில் வாழை அமைந்துள்ள அமைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.[13]

எ.கா: முக்கனியி னானா முதிரையின் (கம்பராமாயணம் நாட்டு. 19).
வாழைக்கு பல பெயர்களுள்ளன. அவைகளும், அவைக் காணப்படுகின்ற நூல்களும் வருமாறு
அம்பணம் - கவர், சேகிலி (பிங்கல நிகண்டு)
அரம்பை - அரம்பை நிரம்பிய தொல் வரை (கம்பராமாயணம்-வரைக்.59) நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ் கன்றும் உதவும் கனி (நன்னெறி)
கதலி - கானெடுந்தே ருயர்கதலியும் (கம்பராமாயணம்-முதற்போர்.104)
பனசம் - வாழை (கம்பராமாயணம். மாரீசன்வதை.96)
கோள் - வாழை = மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக சிந்தாமணி 1098)
குலைவாழை பழுத்த (சீவக சிந்தாமணி. 1191).
மடல் - கொழுமடற் குமரி வாழை (சீவக சிந்தாமணி. 2716). Musa paradisiaca
வான்பயிர் - நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர்கள்.
வாழைக்கு இருக்கும் வேறுபெயர்கள்
 • ஓசை², அரேசிகம், கதலம், காட்டிலம், சமி³, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பிச்சை³, புட்பம், நீர்வாகை, நீர்வாழை (தண்ணீருதவும் வாழை = Ravenala madagascariensis), பானுபலை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம்³, வனலட்சுமி, விசாலம், விலாசம், அசோகம், அசோணம்.

பழமொழிகள்[தொகு]

 • வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்.
 • வாழப்பழ சோம்பேறி.

காட்சி[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

Notes[தொகு]

 1. The figures in the tables were derived from: "FAOSTAT". Food and Agriculture Organization of the United Nations. The datasets for bananas and plantains for 2011 were downloaded and combined (the two are not distinguished in many cases). Totals and percentages were then calculated. The number of countries shown was chosen to account for a minimum of 66% of the world total.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. 1.0 1.1 "Tracing antiquity of banana cultivation in Papua New Guinea". The Australia & Pacific Science Foundation. பார்த்த நாள் 2007-09-18.
 2. 2.0 2.1 agroforestry.net
 3. இங்கு வாழையின் உறுப்புகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
 4. Arias, P., Dankers, C., Liu, P., Pilkauskas, P., 2003. Overview of world banana production and trade. In: The world banana economy, 1985-2002. Food and Agriculture Organization of the United Nations (FAO), Rome, pp 1-97.
 5. Panhwar, M.H., 1991. The banana epidemic in Sindh: Imported disease or deliberate sabotage? Sindh Quarterly 19, 12-23.
 6. Smith, M.C., Holt, J., Kenyon, L., Foot, C., 1998. Quantitative epidemiology of banana bunchy top virus disease and its control. Plant Pathol. 47, 177-187.
 7. Thomas, J.E., Geering, A.D.W., Gambley, C.F., Kessling, A.F., White, M., 1997. Purification, properties and diagnosis of Banana Bract Msaic Potyvirus and its distinction from Abaca Mosaic Potyvirus. Phytopathol. 87, 698-705.
 8. Gambley, C.F., Thomas, J.E., 2001. Molecular characterization of Banana mild mosaic virus, a new filamentous virus in Musa spp.. Arch. Virol. 146, 1369-1379.
 9. Teycheney, P.Y., Marais, A., Svanella-Dumas, L., Dulucq, M.J., Candresse, T., 2005. Molecular characterization of banana virus X (BVX), a novel member of the Flexiviridae family. Arch. Virol. 150, 1715-1727
 10. Harding, R.M., Burns, T.M., Hafner, G.J., Dietzgen, R.G., Dale, J.L., 1993. Nucleotide sequence of one component of the banana bunchy top virus genome contains a putative replicase. J. Gen. Virol. 74, 323-328
 11. Jaufeerally-Fakim, Y., Khorugdharry, A., Harper, G., 2006. Genetic variants of Banana streak virus in Mauritius. Virus Res. 115, 91-98
 12. Hughes, J.d’A., Speijer, P.R., Olatunde, O., 1998. Banana die-back virus: a new virus infecting banana in Nigeria. Plant Dis. 82, 129.
 13. சென்னைப் பல்கலைக்கழக பேரகரமுதலி


வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாழை&oldid=1759304" இருந்து மீள்விக்கப்பட்டது