உள்ளடக்கத்துக்குச் செல்

பூங்கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூங்கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
70 – 90 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பூங்கார் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நெல் வகைகளில் குறுகிய காலப் பயிராகும். ஆண்டின் எல்லாப் பருவங்களுக்கும் பயிர்ச் செய்ய ஏற்றதான இவ்வகை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகையிலும், ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடிச் செய்யக்கூடிய இரகமாகும். பாரம்பரிய நெல் வகைகளில் மாறுபட்ட இரகமான இந்த பூங்கார் நெல், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்டதாகும்.[1]

நடுத்தரம்

[தொகு]

நடுத்தரமான இந்த நெல் இரகம், நடவுச் செய்யவும், நேரடி விதைப்புக்கும் ஏற்றதாகும். சிவந்து காணப்படும் இதன் நெற்பயிர் அரிசியும் சிவப்பாகவே உள்ளது. இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது.[1]

தாங்கும் திறன்

[தொகு]

பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது. விதைப்பு செய்த நாற்றங்கால் வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பினும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப் படுவதில்லை இதன் நெற்கதிர் மூப்படைந்த அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும், மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில், நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.[1]

இந்த பூங்கார் நெல் இரகம் பொதுவாக தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, ரெகுநாதபுரம் வட்டாரங்களில் பிரதானமாக விளையகூடியதாக உள்ளது. மேலும், வரப்புக் குடைஞ்சான், குழியடித்தான் போன்ற பாரம்பரிய நெல் வகைகளைவிட, பெரும் வறட்சியைத் தாங்கும் தன்மைக் கொண்டதாக கருதப்படுகிறது.[2]

மருத்துவக் குணம்

[தொகு]

மருத்துவக் குணம் கொண்ட இந்த இரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவும் குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "நம் நெல் அறிவோம்: 40 நாட்களுக்குப் பின் முளைக்கும் பூங்கார்". தி இந்து (தமிழ்). மே 2, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-03.
  2. "Traditional Varieties grown in Tamil nadu - Poongkar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கார்_(நெல்)&oldid=3602105" இலிருந்து மீள்விக்கப்பட்டது