பத்து பகாட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°55′N 103°0′E / 1.917°N 103.000°E / 1.917; 103.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து பகாட் மாவட்டம்
Daerah Batu Pahat
மலேசியா மாவட்டம்
ஜொகூர்
பத்து பகாட் அமைவிடம் ஜொகூர்
பத்து பகாட் அமைவிடம் ஜொகூர்
ஆள்கூறுகள்: 1°55′N 103°0′E / 1.917°N 103.000°E / 1.917; 103.000
தொகுதிபத்து பகாட் நகரம்
உள்ளூராட்சிபத்து பகாட் நகராட்சி மன்றம்
(மேற்கு)
யோங் பெங் நகராட்சி மன்றம்
(கிழக்கு)
அரசு
 • மாவட்ட அதிகாரிஹாஜி சுல்கிப்லி ஹாஜி அபாஸ்
Haji Zulkiflee bin Haji Abbas
பரப்பளவு[1]
 • மொத்தம்1,872.58 km2 (723.01 sq mi)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்4,43,600
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+6-07-42 to +6-07-45
வாகனப் பதிவுJ

(பத்து பகாட் எனும் பெயரில் பத்து பகாட் மாவட்டம்; பத்து பகாட் நகரம் என இரு இடங்கள் உள்ளன.)

பத்து பகாட் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Batu Pahat; ஆங்கிலம்:Batu Pahat District; சீனம்:峇株巴辖县) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் பண்டார் பெங்காரம் (Bandar Penggaram).

இந்தப் பத்து பகாட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

பத்து பகாட் நகரம்
பத்து பகாட் ஆறு
பத்து பகாட் கிணற்றுக்கு அருகில் ஒரு நினைவுத் தகடு.
பத்து பகாட் பேருந்து நிலையம்

பத்து பகாட் என்றால் மலாய் மொழியில் உளியால் செதுக்கப்பட்ட கல் என பொருள்படும். ஒரு கற்சுரங்கத்தில் இருந்த ஒரு கல்லில் இருந்து இந்தப் பெயர் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. இது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன.

மலாக்கா மீது சயாமியர் படையெடுப்பு[தொகு]

1456-ஆம் ஆண்டில், சயாமிய இராணுவம், மலாக்காவைத் தாக்குவதற்கு களம் இறங்கியது. சயாமிய இராணுவத்திற்குக் கடல்படைத் தளபதி அவி டி சூ (Admiral Awi Di Chu) என்பவர் தலைமை தாங்கினார்.

சயாமிய இராணுவத்தால் மலாக்காவைத் தாக்க முடியவில்லை. பின்வாங்கிய நிலையில் கடலோர கிராமமான கம்போங் மினியாக் பெக்கு எனும் இடத்தில் தண்ணீர் பெறுவதற்கு முகாமிட்டது.

அங்கே ஒரு பெரிய கற்பாறை. அந்தக் கற்பாறையில் ஒரு சிறிய குழி. அதில் கொஞ்சம் நீர் இருந்து இருக்கிறது. மேலும் நீர் கிடைக்கும் எனும் ஆர்வத்தில் கூர்மையான உளிகளைக் கொண்டு குழியை அகலமாகத் தோண்டி இருக்கிறார்கள்.

ஆ பாமோசா கருங்கல் பாறைகள்[தொகு]

மலாக்காவில் ஆ பாமோசா கோட்டை

இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அந்த இடத்திற்கு பத்து பகாட் எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. அந்தக் கற்பாறை, ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் பத்து பகாட்டில் உள்ளது.[2]

பத்து பகாட் பெயரின் தோற்றத்திற்கான மற்றொரு சாத்தியமான விளக்கம் உள்ளது. மலாக்காவைக் கைப்பற்றிய பின்னர் போர்த்துகீசியர்கள், தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா.

அந்தக் கோட்டையைக் கட்டுவதற்கான கருங்கல் பாறைகள் பத்து பகாட் நதியின் முகத்துவாரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். ஆக அந்த வகையில் பத்து பகாட்டிற்குப் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. [3]

1893-ஆம் ஆண்டில் பத்து பகாட்[தொகு]

முன்பு காலத்தில் உப்பு சேர்க்கப்பட்ட மீன்களுக்குப் பத்து பகாட் புகழ்பெற்ற இடமாக விளங்கியது. அதனால் முன்பு இந்த நகரம் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) என்று அழைக்கப்பட்டது. அதாவது "உப்பு தயாரிப்பாளர்களின் நகரம்" என்று பொருள்.

1893-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் சுல்தான் அபுபாக்கரின் கட்டளையின் பேரில் தற்போதைய நகரத்தை டத்தோ பெந்தாரா லுவார் முகமட் சல்லே பெராங் (Dato' Bentara Luar, Mohamed Salleh bin Perang) என்பவர் நிறுவினார்.[4]

மலாயா அவசரகாலத்தில் பிஜி நாட்டுக் காலாட்படை[தொகு]

1952 முதல் 1956 வரை மலாயா அவசரகாலத்தில் பொதுநலவாயம் எனும் காமன்வெல்த் படைகளின் ஒரு பகுதியாக பிஜி நாட்டைச் சேர்ந்த காலாட்படை (1Bn Fiji Infantry Regiment) இங்குதான் இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

அந்தப் படைப் பிரிவில் 1,600 இராணுவ வீரர்கள் இருந்தார்கள். ஜொகூர், மலாக்கா மாநிலப் பகுதிகளைப் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கி உள்ளார்கள்.[5]

பத்து பகாட் வரலாற்றில் ஒரு சோக நாள்[தொகு]

அண்மைய பத்து பகாட் வரலாற்றில், 1980 அக்டோபர் 16-ஆம் தேதி ஓர் இரத்தக்களரி நாளாகக் குறிக்கப் படுகிறது. அன்று காலை 9:30 மணியளவில் நடந்த நிகழ்ச்சி. முகமட் நசீர் இஸ்மாயில் என்பவரின் தலைமையில், 20 முஸ்லிம் தீவிரவாதிகள். பத்து பகாட் காவல் நிலையத்திற்குள் வீச்சு அரிவாள்களுடன் நுழைந்தார்கள்.

காவல் நிலையத்தில் இருந்த 23 போலிஸ் ஊழியர்களையும்; பொதுமக்களையும் வெட்டி காயப் படுத்தினார்கள். இந்தத் துர்நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் 8 பேரைப் போலீசார் சுட்டுக் கொன்றார்கள். தாக்குதலின் நோக்கம் இன்று வரையிலும் முழுமையாகத் தெரியவில்லை.[6]

பண்டார் பெங்காராம், பத்து பகாட் (Bandar Penggaram) துரிதமாக வளர்ந்து வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ளது.

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்[தொகு]

பத்து பகாட் மாவட்டத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 398,014. இதில் 2000-ஆம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி விழுக்காடு 1.55% ஆகும். [7] அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிம் சிம்பாங் கானான். மக்கள் தொகை: 311,862. குறைந்த மக்கள் தொகை கொண்ட முக்கிம் பாகன். மக்கள் தொகை: 4,692.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினர் (51%); சீனர்கள் மிகப்பெரிய சிறுபான்மையினர் (46%); இந்தியர்கள் (3%). இஸ்லாம், பௌத்தம், தாவோயிசம், கன்பூசியம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதம் ஆகியவை முக்கிய மதங்கள்.

400-க்கும் மேற்பட்ட சீனக் கோயில்கள்[தொகு]

பத்து பகாட் சி ஹாய் லோங் வாங் சீனக் கோயில்

இந்த மாவட்டத்தில் சீன மக்கள் தொகை அதிகம். அதன் காரணமாக பத்து பகாட்டில் 400-க்கும் மேற்பட்ட சீனக் கோயில்கள் உள்ளன. ஒரு சில கோயில்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானவை. இவற்றுள் பல கோயில்கள் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன.

பக்தர்கள் பலரும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கோயில்களைப் பார்க்க வருகின்றனர். இது ஒரு வகையில் உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் மாறியுள்ளது.

இங்குள்ள சோங் லோங் கோங் கோயில் (Chong Long Gong Temple) 1864-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கோயில் பக்தர்களின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய மாவட்டங்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batu Pahat District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Batu Pahat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_பகாட்_மாவட்டம்&oldid=3596712" இருந்து மீள்விக்கப்பட்டது