உள்ளடக்கத்துக்குச் செல்

கூடாட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E / 6.88333°N 116.83333°E / 6.88333; 116.83333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடாட் மாவட்டம்
Kudat District
Kudat District Council office
கூடாட் மாவட்ட அலுவலகம்
கூடாட் மாவட்டம் is located in மலேசியா
கூடாட் மாவட்டம்
      கூடாட் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E / 6.88333°N 116.83333°E / 6.88333; 116.83333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுகூடாட்
தலைநகரம் கூடாட்
பரப்பளவு
 • மொத்தம்1,287 km2 (497 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்83,140
அஞ்சல் குறியீடு
89050
தொலைபேசி எண்+60(88) 61XXXX; +60 (88) 61XXXX; (88) 62XXXX
வாகனப் பதிவெண்கள்SD
இணையதளம்www.sabah.gov.my/pd.kdt www.sabah.gov.my/lbk/

கூடாட் மாவட்டம்; (மலாய்: Daerah Kudat; ஆங்கிலம்: Kudat District) என்பது மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கூடாட் மாவட்டத்தின் தலைநகரம் கூடாட் (Kudat Town).[1]

கூடாட் நகரம், போர்னியோவின் முதல் தலைநகரமாகவும், 19-ஆம் நூற்றாண்டில் பரபரப்பான வர்த்தக நிலையமாகவும் விளங்கியதாக அறியப் படுகிறது. இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வடக்கே 190 கி.மீ. தொலைவில்; கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது.[2]

பொது

[தொகு]
கூடாட் மாவட்டத்தின் வரைபடம்

சபா, கூடாட் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கூடாட் நகரத்தைக் கடல் வழியாக மட்டுமே அணுக முடியும். இறுதியில் அங்கு ஒரு சாலை அமைக்கப்பட்டு கூடாட் நகரத்தையும் கோத்தா கினபாலு நகரத்தையும் இணைக்கச் செய்யப் பட்டது.

கடந்த காலத்தில் கூடாட் மாவட்டம் தனிமைப்படுத்தப் பட்டதால், அது அதன் அசல் வசீகரத்தையும், பாரம்பரியத்தையும் தக்க வைத்துக் கொண்டது. இந்தத் தன்மைகள்தான் இன்று வரை கூடாட் மாவட்டத்தைச் சிறப்பு செய்கின்றன.[2]

அத்துடன் போர்னியோ தீவின் உச்ச மட்ட வடக்குப் பகுதி கிராமமான தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவ் (Tanjung Simpang Mengayau) கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது.

சொற்பிறப்பியல்

[தொகு]

கடந்த காலத்தில் தஞ்சோங் பெருங்குஸ் (Tanjong Berungus) என்று கூடாட் அறியப்பட்டது. சில நேரங்களில் தம்பருங்கான் (Tambarungan) என்றும் அழைக்கப்பட்டது. சீனாவில் இருந்து வந்த சீன வணிகர்கள் தஞ்சோங் பெருங்குஸ் நகருக்கு வருகை தந்தபோது, எல்லா இடங்களிலும் ஒரு வகையான புல் வளர்ந்து இருப்பதைக் கண்டு வியந்தனர்.

அவர்கள் உள்ளூர் ருங்குசு மக்களிடம் (Rungus People) அதைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர்களின் ருங்குசு மொழியில் அந்தப் புல்லை குத்தாட் புல் (Kutad Grass) என்று சொன்னார்கள். பின்னர் அந்தத் தஞ்சோங் பெருங்குஸ் நகரம், உள்ளூர் மற்றும் சீன வர்த்தகர்களுக்கு இடையே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மையமாக மாறியது.

வரலாறு

[தொகு]

1752-ஆம் ஆண்டில், ஒரு பிரித்தானியக் கடற்படை மணிலாவை ஸ்பானிய காலனித்துவத்தில் இருந்து தற்காலிகமாகக் கைப்பற்றியது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சூலு சுல்தானையும் விடுவித்தது.

அதற்கு நன்றிக் கடனாக, பாங்கி (Banggi) மற்றும் பலம்பாங்கான் (Balambangan) தீவுகளுடன்; போர்னியோவின் வடக்குக் கடற்கரையின் ஒரு பகுதியையும் சூலு சுல்தான் பிரித்தானியருக்குக் கொடுத்தார்.[1]

1773-இல் போர்னியோவில் ஒரு பிரித்தானியக் குடியேற்றம் திறக்கப்பட்டது. ஆனால் மோரோ கடற்கொள்ளையர்கள் (Moro Pirates) என்று அழைக்கப்படும் சூலு கடற்கொள்ளையர்களால் (Sulu Pirates) அந்தக் குடியேற்றப் பகுதி அடிக்கடி தாக்கப்பட்டது. அதனால் அந்தக் குடியேற்றம் மூடப்பட்டது. 1803-இல் மீண்டும் திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டது.

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்

[தொகு]

வடக்கு போர்னியோவில் கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடும் பிரித்தானிய படைகள் அதிகரிக்கப்பட்டன. கடற்கொள்ளையர்களும் அடக்கப் பட்டனர். 1881-ஆம் ஆண்டு கூடாட் நகரத்தில் ஒரு பிரித்தானியர் குழுவினர், சில புரூணை மலாய்க்காரர்களுடன் கூடாட் பகுதியில் தரை இறங்கினர். கூடாட் பகுதியில் இருந்த நிலத்தைச் சுத்தம் செய்தனர்.

பின்னர் பிரித்தானியர்கள் வடக்கு போர்னியோவில் ஒரு திடமான குடியிருப்பை நிறுவினார்கள். கூடாட் நகரத்தைப் பிரித்தானியர்கள், அவர்களின் புதிய குடியேற்றத்தின் தலைமையகமாக மாற்றி அமைத்தார்கள். அதற்கு அவர்கள் பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று பெயர் வைத்தார்கள். அதன் பின்னர் 1882-ஆம் ஆண்டு, பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company) நிறுவப்பட்டது.[1]

மக்கள் தொகையியல்

[தொகு]

சபா மாநிலத்திலேயே ருங்குசு (Rungus) இனக் குழுவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கூடாட் மாவட்டம் மிகப் பெரிய இடமாகும். ருங்குசு இனக் குழுவினரின் முக்கியக் கலாசார மையமாகவும் கூடாட் நகரம் விளங்குகிறது. ருங்குசு பழங்குடி மக்கள் கடசான்-டூசுன் (Kadazan-Dusun) இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[3]

கூடாட் நகரத்தில் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) மிகுதியாக வாழ்கிறார்கள். இவர்களைத் தவிர பிசாயா பூர்வீக இனத்தவர்களும் உள்ளார்கள். சீனர்கள் முதன்முதலில் சபாவில் குடியேறிய இடமாகவும் கூடாட் விளங்குகிறது.[3]

கூடாட் பிரிவின் மக்கள்தொகை

[தொகு]

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, கூடாட் பிரிவின் மக்கள்தொகை 186,516. இது சபாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6 விழுக்காடு ஆகும். பெரும்பாலும் ருங்குஸ் (Rungus) மக்கள் வாழ்கின்றனர்.[4]

கூடாட் நகரம்

[தொகு]

கூடாட் மாவட்டத்திற்குள் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். இதுவே முக்கியப் போக்குவரத்து மையமும் ஆகும். கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது.

சபாவில் உள்ள மற்ற நகரங்களான கோத்தா கினபாலு; பெனாம்பாங்; தாவாவ்; பாப்பார்; தெனோம் போன்ற நகரங்களைப் போலவே, கூடாட் நகரிலும் தொடக்கக் காலத்தில் இருந்தே சீன ’ஹக்கா’ மக்கள் மிகையாக வாழ்ந்து வருகின்றனர்.

சுற்றுலா

[தொகு]

கூடாட் நகரம் அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. சபா மாநிலத்தில் மாசு அடையாத கடற்கரைகள் இந்தக் கூடாட் நகரில்தான் உள்ளன.

பாக் பாக் (Bak Bak), பாசிர் பூத்தே, கலாம்புனியான் (Kalampunian), தொருங்குங்கான் (Torungkungan) ஆகியவை மிகவும் பிரபலமான கடற்கரைகளாகும்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "A group of British landed in the area near the present location of Kudat town in December 1881,". www.sabah.edu.my. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  2. 2.0 2.1 "Known as the first capital of Borneo and a bustling trading post in the 19th century, Kudat has evolved into a chilled town. In the early days, Kudat was only accessible by sea until less than 50 years ago, where a road eventually linked Kudat with Kota Kinabalu". பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
  3. 3.0 3.1 "Sabah - Kudat by Herman Scholz: Kudat has been the home of the Rungus people (see below for links), many of whom still live in traditional longhouses and maintain even in a time of rapid change a very traditional life style". www.flyingdusun.com. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  4. Carol R. Ember; Melvin Ember (31 December 2003). Encyclopedia of Sex and Gender: Men and Women in the World's Cultures Topics and Cultures A-K - Volume 1; Cultures L-Z -. Springer Science & Business Media. pp. 770–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-47770-6.

மேலும் படிக்க

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடாட்_மாவட்டம்&oldid=4110569" இலிருந்து மீள்விக்கப்பட்டது