பாசிர் கூடாங்
பாசிர் கூடாங் Pasir Gudang | |
---|---|
ஆள்கூறுகள்: 1°30′10″N 103°56′8″E / 1.50278°N 103.93556°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
நகரத் தோற்றம் | 1 சூலை 1985 |
நகராண்மைத் தகுதி | 1 சூலை 2008 |
மாநகர்த் தகுதி | 22 நவம்பர் 2020 |
அரசு | |
• உள்ளூர் நகராட்சி | பாசிர் கூடாங் முனிசிபல் மன்றம் Pasir Gudang Municipal Council |
• மேயர் | அசுமான் சா அப்துல் ரகுமான் Asman Shah Abd Rahman |
• நாடாளுமன்ற உறுப்பினர் | அசான் அப்துல் கரிம் (பாக்காத்தான் அரப்பான்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 359.57 km2 (138.83 sq mi) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 5,34,659 |
• அடர்த்தி | 1,500/km2 (3,900/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 81700 |
தொலைபேசி | +607 |
வாகனப் பதிவெண்கள் | J |
இணையதளம் | mppg |
பாசிர் கூடாங் அல்லது பாசிர் கூடாங் மாநகரம் (மலாய்: Bandar Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang City; சீனம்: 巴西古当); சாவி: ڤاسير ݢودڠ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில்; அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்.[1]
இந்த மாநகரம் ஒரு தொழில்துறை நகரமாகும். போக்குவரத்துத் தளவாடங்கள் உற்பத்தி; கப்பல் கட்டுதல்; இரசாயனப் பொருகள் உற்பத்தி; கனரகத் தொழில்கள்; எண்ணெய் பனை சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய தொழில்கள் ஆகும்.
பாசிர் கூடாங் பகுதியில் 1890-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் குடியேறி விட்டார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். 1916-ஆம் ஆண்டு வரையில், 15,000 ஏக்கர் (61 சதுர கி.மீ.) பரப்பளவு கொண்ட ஆறு தோட்டங்கள் பாசிர் கூடாங்; பிளந்தோங் பகுதிகளில் திறக்கப் பட்டன.[2]
வரலாறு
[தொகு]இந்த நகரம் 1918-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முன்பு கம்போங் பாசிர் ஊடாங் என்று அழைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் ரியாவ் தீவில் இருந்து வந்ததாக நம்பப்படும் லாங் அபு என்பவரால் இந்த நகரம் நிறுவப்பட்டது.[3]
1918-இல் உருவான கிராமங்கள்:
- கம்போங் பாசிர் கூடாங் லாமா (Kampung Pasir Gudang Baru)
- கம்போங் சுங்கை பெரம்பி (Kampung Sungai Perembi)
- கம்போங் உலு (Kampung Ulu)
- கம்போங் தெங்ஙா (Kampung Tengah)
- கம்போங் ஈலீர் (Kampung Hilir)
1920-ஆம் ஆண்டில் உருவான கிராமங்கள்
[தொகு]1920-ஆம் ஆண்டில் மேலும் நான்கு கிராமங்கள் உருவாக்கப்பட்டன.
- கம்போங் ஆயர் பீரு (Kampung Air Biru)
- கம்போங் பாசிர் மேரா (Kampung Pasir Merah)
- கம்போங் பாசிர் பூத்தே (Kampung Pasir Puteh)
- கம்போங் புலாவ் தெக்கோங் (Kampung Pulau Tekong)
பாசிர் கூடாங் பெயர் வந்த வரலாறு
[தொகு]கம்போங் உலு எனும் இடத்தில் இருந்த ஒரு மணல் சுரங்கத்தில் இருந்து, பாசிர் கூடாங் என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என்று அறியப் படுகிறது.
மலாய் மொழியில் பாசிர் என்றால் மணல். கூடாங் என்றால் பொருள் சேமிப்புக் கட்டடம். அந்த வகையில் இந்த இடத்திற்குப் 'பாசிர் கூடாங்' என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது.
ஜொகூர் சுல்தான் அனுமதி
[தொகு]19-ஆம் நூற்றாண்டில் தியோச்சு (Teochew) வம்சாவளியைச் சேர்ந்த சீனர்கள் சிலரால், பாசிர் கூடாங் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உருவாக்கப்பட்டன. ஜொகூர் சுல்தானால் அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
கங்கார் மாசாய் (Kangkar Masai); கங்கார் பிளந்தோங் (Kangkar Plentong); கங்கார் லுஞ்சு (Kangkar Lunchu) பகுதிகளை உருவாக்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காங்சு (kangchu) ஆற்றங் கரைகளில் தான் அவர்கள் கருப்பு மிளகு பயிர் செய்தனர். கருப்பு மிளகு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதும், சில தோட்ட உரிமையாளர்களை அன்னாசிப் பயிர்களைப் பயிர் செய்தனர்.
ரப்பர் தோட்டங்கள்
[தொகு]20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலேசியாவில் ரப்பர் அறிமுகம் செய்யப் பட்டது. அதன் விளைவாகப் பிரித்தானியர்; மற்றும் சிங்கப்பூர் விவசாயிகளால் பெரிய தோட்டங்கள் திறக்கப்பட்டன. 1916-ஆம் ஆண்டு வரை, 15,000 ஏக்கர் (61 கிமீ²) பரப்பளவு கொண்ட ஆறு தோட்டங்கள் பிளந்தோங் பகுதியில் திறக்கப் பட்டன.
ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டதால், பாசிர் கூடாங் பகுதிகளில் வேலை செய்வதற்காகச் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.
மலாயா அவசரகாலத்தில்
[தொகு]இரண்டாம் உலகப் போரினால் மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் மலாயா அவசரகாலத்தில் கொரில்லா இயக்கங்களின் செயல்பாடுகள் பரவின. இருப்பினும், இவற்றினால் இங்குள்ள வேளாண் நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பு அடையவில்லை.
1950-களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ், பிளந்தோங், மாசாய், பாசிர் கூடாங் ஆகிய இடங்களில் புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டன. அந்தக் கிராமங்களில் தோட்டத் தொழிலாளர்களும் பாதுகாப்பு கருதி இடம்பெயர்க்கப் பட்டனர்.
நில மேம்பாட்டுத் திட்டங்கள்
[தொகு]1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெல்டா நிலத் திட்டத்தின் கீழ், இங்கு சில நிலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பான் பூ (Ban Foo); பிளெந்தோங் பாரு (Plentong Baru); பெல்டா சகாயா பாரு (Felda Cahaya Baru) போன்ற நிலத் திட்டங்கள் உருவாகின.
1 சூலை 2008-இல், பாசிர் கூடாங் மாநகராட்சி நிறுவப்பட்டது. 22 நவம்பர் 2020-இல், பாசிர் கூடாங் நகராட்சி மன்றம், முனிசிபல் கவுன்சில் தகுதிக்கு மேம்படுத்தப்பட்டது. மாநகர் தகுதிக்கும் உயர்த்தப்பட்டது.[4]
நிர்வாகம்
[தொகு]பாசிர் கூடாங் உள்ளூர் ஆணையம் (Pasir Gudang Local Authority) அல்லது ஜொகூர் மாநில நிர்வாக நிறுவனத்தின் துணை நிறுவனமான பாசிர் கூடாங் உள்ளூர் நிர்வாக அமைப்பினால் (Pihak Berkuasa Tempatan Pasir Gudang) இப்போதைய பாசிர் கூடாங் நகராட்சி, நிர்வாகம் செய்யப் படுகிறது. மலேசியாவில் தனியார் மயமாக்கப்பட்ட முதல் உள்ளூர் அதிகாரம் இந்தப் பாசிர் கூடாங் நிர்வாகமாகும்.
ஜொகூர் மாநிலத்தின் முதலீட்டுப் பிரிவு
[தொகு]ஜொகூர் மாநில நிர்வாக நிறுவனம் எனும் ஜொகூர் கார்ப்பரேசன் (Johor Corporation) என்பது ஜொகூர் மாநில அரசாங்கத்தின் முதலீட்டுப் பிரிவாகும்.
01 சூலை 2008-ஆம் தேதி, இந்தப் பாசிர் கூடாங் நகரத்திற்கு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பாசிர் கூடாங் நகராட்சி மன்றம் என்றும் பெயர் மாற்றம் கண்டது.[5]
பாசிர் கூடாங் நகர சபை
[தொகு]2015-ஆம் ஆண்டில், பாசிர் கூடாங் நகராட்சி மன்றத்தின் நிர்வாக மண்டலம் மறுச் சீரமைப்பைத் தொடர்ந்து 29,459.9 எக்டர் பரப்பில் இருந்து 31,732.24 எக்டராகப் பரப்பளவு உயர்த்தப்பட்டது. [6] இதன் வழி மாசாய் மற்றும் பண்டார் ஸ்ரீ ஆலாம் பகுதிகள் பாசீர் கூடாங்கின் பகுதிகளாக மாறின.
22 நவம்பர் 2020-ஆம் தேதி, பாசிர் கூடாங்கிற்கு நகரத் தகுதி வழங்கப் பட்டது, இனிவரும் காலங்களில் அதன் பெயர் பாசிர் கூடாங் நகர சபை என்று மாற்றம் காண்கிறது. பாசிர் கூடாங்கின் தலைவர்ப் பதவியும் மேயர் பதவிக்கு மாற்றம் கண்டது.[7]
பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி
[தொகு]மலேசியா; ஜொகூர்; ஜொகூர் பாரு மாவட்டத்தில் (Johor Baru District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 7,855 மாணவர்கள் பயில்கிறார்கள். 447 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவற்றில் ஒரு பள்ளி பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளியாகும்.[8][9]
பள்ளி எண் |
பள்ளியின் பெயர் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|
JBD1009 | பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி[10] | பாசிர் கூடாங் | 289 | 28 |
பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
[தொகு]பாசிர் கூடாங் தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் அனைத்துலக அளவில் பல உயர்ப் பதவிகள் வகித்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் சுலோச்சனா முனியாண்டி.
ஜொகூர் பார்வைக் கல்விக் கழகத்தின் துணைத் தலைவராகச் சேவையாற்றி வரும் முனியாண்டி புத்துரன் என்பவரின் மூத்த புதல்வி. பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் படித்தவர். தன் பட்டயக் கல்வியைச் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். தற்சமயம் பாசிர் பூத்தே இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
முனியாண்டி புத்துரனின் இரண்டாவது புதல்வி நிசா முனியாண்டி. இவரும் தன் அக்காளைப் போன்று பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர். சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பட்டயக் கல்வி பயின்ற பட்டதாரி ஆசிரியர்.[11]
பொது
[தொகு]அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 1200-க்கும் குறையாத தமிழாசிரியர் வேலை வாய்ப்புகளை மலேசியத் தமிழ்ச் சமூகம் இழந்து உள்ளது.
இனியும் தொடர்ந்து இழக்கும் அபாயம் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளியே நம் தேர்வாக அமைய வேண்டும்.[12]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shenzhen Port China Shipping to Pasir Gudang". www.forwarder-cn.com.
- ↑ "Until 1916, 6 estates which cover an area the size of 15,000 acres have been opened in Mukim Plentong". Official Portal of Pasir Gudang City Council (MBPG) (in ஆங்கிலம்). 2 January 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "City Background". 2 January 2016.
- ↑ பாசிர் கூடாங் நகராட்சி மன்றம், மாநகர் தகுதிக்கு மேம்படுத்தப்பட்டது.
- ↑ "Latar Belakang | Portal Rasmi Majlis Perbandaran Pasir Gudang (MPPG)". Archived from the original on 2016-09-08.
- ↑ "Johor stands firm on housing policy". www.thesundaily.my.
- ↑ "Sultan of Johor proclaims Pasir Gudang a city | New Straits Times". 22 November 2020.
- ↑ "SJKT Pasir Gudang Johor Tamil School" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
- ↑ "தமிழ்மொழியை அழியாது காப்போம். எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்போம்". Nanban. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ பாஸ்கரன், சுப்பிரமணியம். "மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும்". [மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் முகமை அமைப்பாளர். பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Pasir Gudang தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பாசீர் கூடாங் நகராட்சி பரணிடப்பட்டது 2020-12-03 at the வந்தவழி இயந்திரம்