லேடாங் மலை

ஆள்கூறுகள்: 2°22′27″N 102°36′28″E / 2.37417°N 102.60778°E / 2.37417; 102.60778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேடாங் மலை
Gunung Ledang
உயர்ந்த இடம்
உயரம்1,276 m (4,186 அடி)
ஆள்கூறு2°22′27″N 102°36′28″E / 2.37417°N 102.60778°E / 2.37417; 102.60778
புவியியல்
அமைவிடம்ஜொகூர் - மலாக்கா எல்லை தீபகற்ப மலேசியா
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்
ஏறுதல்
எளிய அணுகு வழிமலாக்கா அசகானில் இருந்து செல்லும் வழி

லேடாங் மலை (மலாய் மொழி: Gunung Ledang; ஆங்கிலம்: Mount Ophir), மலேசியா, ஜொகூர் - மலாக்கா மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது. இந்த மலை வரலாற்றுப் புகழ் பெற்றது. தித்திவாங்சா மலைத் தொடரின் தென் கோடியில் அமைந்து இருக்கும் இந்த மலை, மலாக்கா வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது.[1]தங்காக் நகரில் இருந்தும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இருந்தும் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த மலையை, தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள். லேடாங் மலையை தங்காக் நகரில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும்.[2] மலையேறிகள், பறவைப் பார்வையாளர்கள், இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் லேடாங் மலையில், மிதவெப்ப மண்டல காடுகளின் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இங்கே பல சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.

ஜொகூர் லேடாங் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் இந்த மலை, மலேசியாவின் உயர்ந்த மலைகளில் 64-ஆவது இடம் வகிக்கிறது. அதே சமயத்தில், மலேசியாவில் அதிகமாக மலையேற்றம் கண்ட மலையாகவும் வரலாறு பதிக்கிறது. மேகக் கூட்டம் இல்லாத பிரகாசமான நாளில், லேடாங் மலை உச்சியில் இருந்து மலாக்கா நீரிணையையும் சுமத்திரா தீவையும் பார்க்க முடியும்.

இந்த லேடாங் மலையை புராண காலத்து தேவதை ஒருவர் காவல் காத்து வருவதாக மலேசியப் புராணக் கதைகளில் சொல்லப்படுகிறது.[3]

குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை[தொகு]

முன்பு காலத்தில் லேடாங் மலையில் வாழ்ந்த ஓர் இளவரசியின் புராணக் கதையே குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை என்பதாகும். லேடாங் மலையில், தேவதை போன்ற ஓர் இளவரசி வாழ்ந்து வந்ததாக இன்றும் நம்பப்படுகிறது.[4]

அந்த இளவரசியைப் பற்றி கேள்விப் பட்ட மலாக்காவின் சுல்தான் மகமுட் ஷா (ஆட்சி காலம்: 1488 to 1511), அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அந்த இளவரசி சில நிபந்தனைகளை விதித்தார்.[5]

  • லேடாங் மலையில் இருந்து மலாக்கா சுல்தானின் அரண்மனைக்கு நடந்து செல்ல தங்கத்திலான ஒரு பாலம்
  • மலாக்காவில் இருந்து லேடாங் மலைக்குத் திரும்பி வர வெள்ளியிலான ஒரு பாலம்
  • ஏழு மண் ஜாடிகளில் ஒரு கன்னிப் பெண்ணின் கண்ணீர்
  • ஏழு மண் ஜாடிகளில் பாக்குச் சாறு
  • ஏழு தட்டுகளில் தெள்ளு (பூச்சி)களின் இருதயங்கள்
  • ஏழு தட்டுகளில் கொசுக்களின் இருதயங்கள்
  • ஒரு கிண்ணத்தில் சுல்தானின் இளைய மகனின் இரத்தம்

அந்த நிபந்தனைகளைச் சுல்தான் மகமுட் ஷாவினால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், மலாக்கா சுல்தானகம் அழிவு பெற்றதாகவும் சொல்லப் படுகிறது.[6] 1511-ஆம் ஆண்டு, மலாக்காவைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். சுல்தான் மகமுட் ஷா, பகாங் மாநிலத்திற்குத் தப்பிச் சென்றார்.

லேடாங் கவிதை[தொகு]

லேடாங் மலையைப் பற்றி மலாய் இலக்கியத்தில் ஒரு கவிதையும் உள்ளது.[7]

  • எவ்வளவுதான் வாழை மரத் தண்டு தழைத்து இருந்தாலும்
  • எவ்வளவுதான் தீயின் புகை உயர்ந்து சென்றாலும்
  • எவ்வளவுதான் லேடாங் மலை நிமிர்ந்து நின்றாலும்
  • இதயத்தின் நம்பிக்கைகள் தான் உயர்வானவை

லேடாங் நீர்வீழ்ச்சி[தொகு]

லேடாங் நீர்வீழ்ச்சி அல்லது அசகான் நீர்வீழ்ச்சி எனும் பெயரில் இங்கு ஒரு பொழுதுபோக்குச் சார்ந்த பகுதி இருக்கிறது. வார இறுதி நாட்களில், பொது மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்தப் பொழுது போக்குத் தளத்தில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. லேடாங் மலையில் இருந்து பெருகி வரும் தெளிந்த நீரோட்டம் மக்களைக் கவர்கின்றது. இயற்கை விரும்பிகளுக்கு ஓர் அமைதியான இடம்.[8]

‘சவுஜானா அசகான்’ (மலாய்: Saujana Asahan) எனும் தன்முனைப்புத் தூண்டுதல் மையமும் இங்கு இருக்கிறது. லேடாங் மலையின் அடிவாரத்தில், அந்த மையம் இருக்கிறது. இங்கு முகாம் திடல்கள், வனவலம், மலையேற்றம், பாறையேற்றம், பறவைகள் பார்த்தல் போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்து தரப் படுகின்றன. அரசாங்க அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் அந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.[9]

படத்தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடாங்_மலை&oldid=3413903" இலிருந்து மீள்விக்கப்பட்டது