உள்ளடக்கத்துக்குச் செல்

சாஆ

ஆள்கூறுகள்: 2°14′N 103°02′E / 2.233°N 103.033°E / 2.233; 103.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஆ
Chaah
 ஜொகூர்
சாஆ நகரம்
சாஆ நகரம்
Map
ஆள்கூறுகள்: 2°14′N 103°02′E / 2.233°N 103.033°E / 2.233; 103.033
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் சிகாமட் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்184 km2 (71 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்15,627
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
85400
Area code+6-0792
போக்குவரத்துப் பதிவெண்கள்J
சாஆ பேருந்து நிலையம்

சாஆ, (மலாய்: Chaah; ஆங்கிலம்: Chaah; சீனம்: 三合港; ஜாவி: شاه) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் சிகாமட் மாவட்டத்தின் தெற்கே உள்ள ஒரு முக்கிம் ஆகும். ஆனாலும் இது லாபிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியாக நிர்வகிக்கப் படுகிறது.[1]

ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து வடக்கே சுமார் 118 கி.மீ. தொலைவிலும்; சிகாமட் நகரில் இருந்து தெற்கே 45 கி.மீ. தொலைவிலும் சாஆ நகரம் அமைந்துள்ளது.

சாஆ எனும் பெயர் ஒரு சீனச் சொல்லில் இருந்து மருவியதாகக் கருதப் படுகிறது. இங்கு மூன்று ஆறுகள் ஒன்று கூடுவதால் அந்த இடத்திற்கு சாகெ காங் (San He Gang) எனப் பெயர் வந்ததாகவும் உள்ளூர் மக்கள் சொல்கின்றார்கள்.[2]

வரலாறு[தொகு]

சாஆ நகரத்தின் சுற்றுப் புறங்களில் பல செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. முன்பு அந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்தன. அந்த ரப்பர்த் தோட்டங்களில் பெரும்பாலும் தமிழர்கள் வேலை செய்தார்கள். .1900-ஆம் ஆன்டுகளில் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து இங்கு அழைத்து வரப் பட்டார்கள்.

மலேசியாவிலேயே மிகப் பெரிய செம்பனைத் தோட்டங்கள் இந்தச் சாஆ பகுதியில் தான் உள்ளன. பல ஆண்டுகளாகத் தமிழர்கள் இங்கு வேலை செய்தார்கள். சில தோட்டங்களில் இன்றும் வேலை செய்து வருகிறார்கள்.

 • சாஆ தோட்டம்
 • சிம்பாங் கிரி தோட்டம்
 • நார்த் லாபிஸ் தோட்டம்
 • ஆச்சி ஜெயா தோட்டம்
 • ஜொகூர் லாபிஸ் தோட்டம்
 • சுங்கை கெர்ச்சாங் தோட்டம்

அண்மைய காலங்களில் இந்தத் தோட்டங்களில் அதிகமாக வங்காள தேசவர்கள், இந்தோனேசியர்கள், நேப்பாளியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள். அதனால் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து விட்டது.

சாஆ தமிழர்கள் புள்ளிவிவரங்கள்[தொகு]

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, சாஆ முக்கிமின் மொத்த மக்கள் தொகை 15,627. சாஆ பகுதியில் ஒரு பெரிய தமிழர்ச் சமூகம் உள்ளது (சுமார் 4000 குடும்பங்கள்). அவர்கள் அனைவரும் தோட்டங்களில் இருந்து இங்கு குடியேறியவர்கள்.

தமிழர்கள் பலர் நீண்ட காலமாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பலருக்குச் சொந்தமாக வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளன. சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிமணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இன்னும் சிலர் விவசாயம்; ஆடு மாடுகள் வளர்த்தல்; சிறு குத்தகை வேலைகள் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தாமான் முகிபா; தாமான் மெஸ்ரா; தாமான் மேவா; தாமான் இண்டா; தாமான் டாமாய் ஜெயா மற்றும் தாமான் நேசா ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.

அரசு பணிகளில் தமிழர்கள்[தொகு]

முன்பு நகராண்மைக் கழகப் பணிகள், பொதுப்பணித் துறையின் வேலைகள், அரசு சார்ந்த தொலைபேசி பணிகளில் தமிழர்கள் ஓரளவிற்கு ஈடுபட்டு இருந்தனர். தற்போது அந்தப் பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சொற்பமான எண்ணிக்கையில் தான் தமிழர்கள் அரசு வேலைகளில் அமர்த்தப் படுகின்றனர் அல்லது நியமிக்கப் படுகின்றனர். அண்மைய காலங்களில், அரசாங்கப் பணிகளில் தமிழர்கள் தவிர்க்கப் படுகின்றனர் எனும் பொதுவான கருத்து மலேசியா முழுமையும் பரவலாக நிலவி வருகிறது.

சாஆ சுற்று வட்டாரத் தோட்டங்களில் உள்ள ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு பள்ளிக்கூடம் இருக்கின்றது. இந்தத் தமிழ்ப்பள்ளிகளில் படித்த பலர் இப்போது அரசாங்க உயர் பதவிகளில் உள்ளனர். மலேசியக் கல்வி அமைச்சிலும் காவல் துறையிலும் பல உயரிய பதவிகளில் பல தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உள்ளனர்.

சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி[தொகு]

சிகாமட் மாவட்டத்தில் சாஆ

இந்த நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி (SJKT Cantuman Chaah). 1990-ஆம் ஆன்டுகளில் சுற்று வட்டாரத்தில் இருந்த மூன்று தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தக் கூட்டுத் தமிழ்ப்பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 221 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 27 தமிழாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 2020-ஆம் ஆன்டில் மலேசிய அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[3][4][5]

இந்தப் பள்ளியின் மாணவர்கள் பல அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளனர். விடாமுயற்சி என்றும் வெற்றியின் திறவுகோல் என்பதனை நிருபித்துக் காட்டி உள்ளனர்.

உலக அளவில் வெற்றி வாகை[தொகு]

ஜொகூரில் ஒரு சிற்றூரில் அமைந்துள்ள சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி, இன்று உலக அளவில் வெற்றி வாகைச் சூடியிருப்பது மலேசியத் தமிழர்கள் பெருமைப் படக்கூடிய தகவல் ஆகும். இந்தோனேசியா அளவிலான IYIA 2020 புத்தாக்கப் போட்டியில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சிறப்பு விருது நிலைக்குத் தேர்வாகினர்.

2019 ஆம் ஆண்டு இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைப்பெற்ற அனைத்துலக இளம் ஆய்வாளர் புத்தாக்கக் கண்டுபிடிப்புக் கண்காட்சியில் தங்கம் வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[6]

சான்றுகள்[தொகு]

 1. "Latar Belakang". Portal Rasmi Majlis Daerah Labis. 4 November 2015. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
 2. CHAN, ADRIAN. "Chaah - Town with an interesting past". Star Media. Star Media Group Berhad (10894D). பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 3. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
 4. "SJKT Cantuman Chaah". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
 5. "Selamat datang ke SJK(T) Cantuman Chaah". SEJARAH. 9 July 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
 6. "சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியின் தொடர் சாதனை". Makkal Osai Online. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய மாவட்டங்கள்
ஜொகூர் மாவட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஆ&oldid=3923837" இலிருந்து மீள்விக்கப்பட்டது