இரா. சம்பந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். சம்பந்தன்
R. Sampanthan


நா.உ
R. Sampanthan.jpg
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
3 செப்டம்பர் 2015 – 18 டிசம்பர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் நிமல் சிரிபால டி சில்வா
பின்வந்தவர் மகிந்த ராசபக்ச
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2001
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2001
திருகோணமலை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1983
முன்னவர் பா. நேமிநாதன், இதக
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 5, 1933 (1933-02-05) (அகவை 87)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழ்க்கை துணைவர்(கள்) லீலாதேவி
பிள்ளைகள் சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி
இருப்பிடம் கொழும்பு 5, இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி
புனித செபஸ்தியான் கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் சைவ சமயம்
இனம் இலங்கைத் தமிழர்

இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan, பிறப்பு: 5 பெப்ரவரி 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015 செப்டம்பர் 3 முதல்[1][2][3] 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில்[தொகு]

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[4] 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்[5].

1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.[6][7]

2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்[8].

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தவிகூ தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.[9] இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004,[10] 2010[11], 2015[12][13] நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்[தொகு]

2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][14]

தேர்தல் வரலாறு[தொகு]

இரா. சம்பந்தனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1977 நாடாளுமன்றத் தேர்தல்[4] திருகோணமலை தவிகூ 15,144 தெரிவு
1989 நாடாளுமன்றத் தேர்தல்[7] திருகோணமலை மாவட்டம் தவிகூ 6,048 தேர்ந்தெடுக்கப்படவில்லை
2001 நாடாளுமன்றத் தேர்தல்[8] திருகோணமலை மாவட்டம் ததேகூ 40,110 தெரிவு
2004 நாடாளுமன்றத் தேர்தல்[10] திருகோணமலை மாவட்டம் ததேகூ 47,735 தெரிவு
2010 நாடாளுமன்றத் தேர்தல்[11] திருகோணமலை மாவட்டம் ததேகூ 24,488 தெரிவு
2015 நாடாளுமன்றத் தேர்தல்[15] திருகோணமலை மாவட்டம் ததேகூ 33,834 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Sampanthan Chosen As New Leader Of The Opposition". கொழும்பு டெலிகிராப் (3 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 3 செப்டம்பர் 2015.
 2. 2.0 2.1 "Ethnic Tamil lawmaker becomes opposition leader in Sri Lanka for first time in decades". Fox News (3 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 3 செப்டம்பர் 2015.
 3. 3.0 3.1 TNA’s Sampanthan becomes opposition leader in Sri Lankan parliament, தி இந்து, 3 செப்டம்பர் 2015
 4. 4.0 4.1 "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 5. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்ட், இலங்கை. http://www.island.lk/2008/01/18/features11.html. 
 6. "Result of Parliamentary General Election 1989". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 7. 7.0 7.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 182. http://noolaham.net/project/148/14715/14715.pdf. 
 8. 8.0 8.1 "General Election 2001 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 9. "Objection against TNA using HOUSE symbol rejected". தமிழ்நெட். 28 பெப்ரவரி 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11340. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2010. 
 10. 10.0 10.1 "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 11. 11.0 11.1 "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 12. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 13. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 14. "Tamil MP Sampanthan to lead Sri Lanka opposition". பிபிசி. 3 செப்டம்பர் 2015. http://www.bbc.co.uk/news/world-asia-34136684. 
 15. Jayakody, Pradeep (28 ஆகத்து 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சம்பந்தன்&oldid=2784386" இருந்து மீள்விக்கப்பட்டது