அருணாசலம் தங்கத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. தங்கத்துரை
இலங்கை நாடாளுமன்றம்
for மூதூர்
பதவியில்
1970–1977
இலங்கை நாடாளுமன்றம்
for திருகோணமலை
பதவியில்
1994–1997
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-01-17)சனவரி 17, 1937
கிளிவெட்டி, மூதூர், இலங்கை
இறப்புசூலை 5, 1997(1997-07-05) (அகவை 60)
திருகோணமலை, இலங்கை
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

அருணாசலம் தங்கத்துரை (சனவரி 17, 1937 - சூலை 5, 1997) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1994 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1997, சூலை 5 ஆம் நாள் திருகோணமலையில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

கல்வி[தொகு]

1936 ஆம் ஆண்டில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூரில் கிளிவெட்டி என்ற ஊரில் பிறந்த அருணாசலம் தங்கத்துரை தனது கல்வியை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் 1979 ஆம் ஆண்டில் கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து 1980 இல் சட்டத்தரணியானார்.

பணி[தொகு]

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எழுத்தராக நியமனம் பெற்ற தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார். கொழும்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய போது, இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரசியலில்[தொகு]

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதில் 1970 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் அக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி, தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய இலங்கை சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது. இதனால் தங்கத்துரை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியவில்லை.

கைது[தொகு]

தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தில் இவரையும் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் எட்டு மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் விடுதலையானார்.

1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியைத் துறந்தார்.

1994 இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

படுகொலை[தொகு]

1997 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றிய போது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். இவருடன் கல்லூரி அதிபர், உட்பட ஐவர் உயிரிழந்தனர்[1][2][3]. தமிழீழ விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக பன்னாட்டு மன்னிப்பகம் குற்றம் சாட்டியது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Trincomalee TULF MP assassinated, தமிழ்நெட், சூலை 6, 1997
  2. Date set for Thangathurai trial, தமிழ்நெட், 19 அக்டோபர் 1999
  3. Thangathurai murder accused transferred, தமிழ்நெட், 21 பெப்ரவரி 2000
  4. பன்னாட்டு மன்னிப்பகத்தின் அறிக்கை பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந்திரம், 22 சூலை 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாசலம்_தங்கத்துரை&oldid=3363157" இலிருந்து மீள்விக்கப்பட்டது