சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரசுவதி
சரசுவதி
தேவநாகரிसरस्वती
சமசுகிருதம்சரசுவதி
வகைதேவி
இடம்பிரம்மபுத்ரா
மந்திரம்ஓம் ஐம் சரசுவதியாயா சுவாக
துணைபிரம்மா

சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரசுவதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.

'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.[1]

இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.

சரசுவதி எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.

சமயங் கடந்த தெய்வம்

இந்து மதத்தில்

இந்து மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.

'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.

சமண மதத்தில்

சுருதி தேவி என்றும், வாக்தேவி என்றும் சமணர்கள் சரஸ்வதியை வணங்குகிறார்கள். ஜின ஐஸ்வர்யா என்றும்,ஜினவாணி என்றும் அழைப்பதுண்டு. ஆபுத்திரன் என்பவன் கலைமகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது.

பௌத்த மதத்தில்

மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.

எனவே டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் சரஸ்வதியை கலைமகள் சமயங் கடந்த தெய்வம் என குறிப்பிடுகிறார்.

தோற்றமும் குறியீடும்

அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏட்டுச் சுவடியும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரசுவதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.

கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.

சரஸ்வதிக்கென நூல்கள்

சரஸ்வதியைப் பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.

வழிபாடு

  • தமிழ்நாடு கூத்தநூரில் தனி ஆலயம் உள்ளது.
  • கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
  • ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
  • காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் 'சர்வஜ்ன பீத' என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.
  • திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.

கருவி

  • வெள்ளைத் தாமரைப் பூவிருப்பாள்! - பருத்தியூர் கே. சந்தானராமன்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி&oldid=2822490" இலிருந்து மீள்விக்கப்பட்டது