தட்சகன்
தட்சகன் | |
---|---|
தட்சகனின் சிலை, தட்சேஸ்வர் கோயில் | |
தேவநாகரி | तक्षक |
சமசுகிருதம் | தட்சக் |
வகை | நாகர்கள் |
இடம் | நாக லோகம் |
தட்சகன் (Takshaka) இந்து தொன்மவியலில் காசிபர் - கத்ரு தம்பதியருக்கு பிறந்த நாகர் குலத்தினருள் ஒருவர். இவனுடன் பிறந்தவர்களில் சிறப்பானவர்கள் அனந்தன், ஆதிசேஷன், வாசுகி, சங்கபாலன், குளிகன், கார்க்கோடகன், பத்மன். மகாபாரதத்தில் தட்சகனின் வாழ்விடமான காண்டவ வனத்தை, கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை அமைத்தான்.
மகாபாரதத்தில் தட்சகன்
[தொகு]மகாபாரதத்தில் தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான். (1,3). தேவர்களின் தலைவன் இந்திரன் தட்சகனின் நண்பன் (1-225,227,230). காண்டவ வனத்தில் தன் குடிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை அமைக்கும் பொருட்டு, அருச்சுனன் தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக்கினான். அந்நேரத்தில் நாகர்கள் தலைவன் தட்சகன் குருச்சேத்திரம் சென்றிருந்தான்.[1] இதனால் தட்சகனின் குடும்பமே அழிகிறது. அவன் மகன் அஸ்வசேனன் மட்டுமே உயிர் பிழைக்கிறான், தன் நாகர் இனங்களைக் கொன்ற அருச்சுனனை பழி வாங்க சூளுரைத்து, கர்ணனிடம் நட்பு கொண்டான். குருச்சேத்திரப் போரின், கர்ண பருவத்தில், கர்ணன் அருச்சுனனின் கழுத்தை நோக்கி குறி வைத்து நாகாஸ்திரத்தை (அஸ்வசேனன்) ஏவிய போது, கிருஷ்ணரின் தந்திரத்தால், அருச்சுனனின் தேரை தரையில் ஒரு அடி ஆழத்திற்கு கீழே இறக்கியதால், அருச்சனின் மகுடத்தை நாகாஸ்திரம் பறித்தது. இதனால் அருச்சுனன் உயிர் காப்பாற்றப்பட்டது. பின் கிருஷ்ணனின் வழிகாட்டல் படி அஸ்வசேனனை அர்ஜுனன் கொல்கிறார்.[2]
நாக வேள்வி
[தொகு]பரிட்சித்து மன்னன், மௌன விரதத்தில் இருந்த முனிவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டு அவமதித்த காரணத்தால், ஏழு நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்ற சாபத்திற்கு ஆளாகி, தட்சகனால் கடிபட்டு இறந்தான். பரிட்சித்தின் மகன் ஜனமேஜயன், தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர்கள் குலத்தை கருவறுக்க, ஏழு நாட்கள் தொடர்ந்து நாக வேள்வியைச் செய்தான். வேள்வித் தீயில் இந்திரன் தயவால் தட்கன் தவிர அனைத்து நாகங்களும் விழுந்து மாண்டன. இறுதியில் தட்சகன் வேள்வித் தீயில் விழ சில விநாடிகள் இருக்கையில், நாக குலப் பெண் ஜரத்காருக்கும், அதே பெயர் கொண்ட ஒரு முனிவருக்கும் பிறந்த ஆஸ்திகர் என்பவர் ஜனமேஜயனிடம் நாக வேள்வியை நிறுத்தக் கேட்டுக் கொண்டதன் பேரில் தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.