கிருபர்
கிருபர் அல்லது கிருபாச்சாரியார் இந்து தொன்மவியலில் மகாபாரத்தில் அஸ்தினாபுரம் அரசவையில் ராசகுருவாக இருந்தவர்.
சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்தவர். இவரது இரட்டையரான உடன்பிறப்பு கிருபி அந்நாட்டு தளபதி துரோணரின் மனைவியாவார்.
குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் போரிட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றுகிறார்.
இறவாதவர்கள் எனக் கருதப்படும் எண்மரில் ஒருவர்.
பிறப்பு
[தொகு]கௌதம முனிவரின் பேரன் சரத்வான். சரத்வான் பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தவன். இளமைக்காலத்தில் வேதங்களைப் படிப்பதில் நாட்டமின்றி அனைத்து ஆயுதங்களையும் கற்றுத் தேர்ந்தான். அவனை விற்போட்டியில் யாராலும் வெல்லமுடியாதிருந்தது. இதனால் அச்சமடைந்த தேவர் மன்னன் இந்திரன் அவனது ஆற்றலை கட்டுப்படுத்த தேவலோக அழகி ஜனபதியை திருமணத்தை மறுக்கும் சரத்வானிடம் அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காமத்தை எதிர்கொள்கிறான்.இருப்பினும் அவனிடமிருந்து விந்து கீழே விழுகிறது. செடிகளில் விழுந்த விந்து, இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள்.இதனை அறியாத சரத்வான் அங்கிருந்து தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான்.
அவ்வழியாக வரும் சாந்தனு அரசன் இக்குழந்தைகளின் அழகில் மனதை பறிகொடுத்தவனாய் அவர்களை எடுத்துச் சென்று கிருபன்,கிருபி எனப் பெயரிட்டு வளர்க்கிறான். பின்னால் இதனை அறியவரும் சரத்வான் அரண்மனைக்கு வந்து தனது அடையாளத்தை நிலைநிறுத்தி குழந்தைகளுக்கு வில்வித்தை,வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் பிற உலக இரகசியங்களை கற்றுக் கொடுக்கிறான். இவ்வாறு பல கலைகளிலும் கற்றுத்தேர்ந்த கிருபன் கௌரவர் மற்றும் பாண்டவ இளவரசர்களுக்கு போர்க்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்.
வெளியிணைப்புகள்
[தொகு]அம்மன் தரிசனம் இணையதளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்