உள்ளடக்கத்துக்குச் செல்

ஏகலைவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏகலைவன் மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன்.[1] மகத நாட்டைச் சேர்ந்த இவன் பிறப்பினால் ஒரு வேடன் (நிஷாதன்). அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. வில் வித்தையில் தேர்ந்தவனாக வர எண்ணினான். துரோணர் தான் சிறந்த குரு என்று தெரிந்து கொண்டு அவரிடம் சென்று தனக்கு வில் வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். தான் சத்திரியர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுப்பதால், அதை வெளிக்காட்டாமல், ஏராளமான சீடர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் தனக்கு நேரமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு நான் எப்படி இதைக் கற்றுக்கொள்வது என்று துரோணரிடமே கேட்டான். "உனக்கு என்மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வாய்" என்று அனுப்பிவிட்டார்.

பயிற்சி

[தொகு]

ஏகலைவன் துரோணரின் வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு திரும்பித் துரோணரைப் போல ஒரு சிலையை செய்தான், அந்தச் சிலையை குருவாகக் கருதிக்கொண்டு பயிற்சியை மேற்கொண்டான். ஒரு நாள் பயிற்சியில் ஏகலைவன் துரோணரின் சிலைக்கு முன்பாக மிகவும் சிரத்தையோடு வில் வித்தை கற்றுக்கொண்டிருந்தான், அப்போது ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அவன் கவனம் சிதறியது, குரைப்புச் சத்தம் வந்த திக்கை நோக்கி அம்புகளை எய்தான், அம்புகள் எல்லாம் நாயின் வாயைச் சுற்றித் தைத்து குரைக்க முடியாதபடி செய்தது. நாய் அருச்சுனனை நோக்கி ஓடியது. நாயைக் கண்ட அருச்சுனன் அதை இழுத்துக் கொண்டு போய் துரோணரிடம் காண்பித்து "உலகிலேயே மிகச் சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றீர்கள், இந்த அற்புதத்தைச் செய்தவன் நிச்சயம் என்னைவிடச் சிறந்தவனாக இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்" என்று துரோணரிடம் அருச்சுனன் கேட்டான்.[1]

துரோணரே குரு

[தொகு]

துரோணருக்கு ஒரே அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து இது எப்படி சாத்தியம் குழம்பிப்போய் பாண்டவர்களுடன், ஏகலைவன் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கே தன்னைப் போல் ஒரு சிலை இருப்பதைக் கண்டார், அதற்கு எதிரே ஏகலைவன் வில்லுடன் நிற்பதைக் கண்டார். துரோணரைக் கண்டதும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினான். துரோணர் நாயைக் காட்டி "இதை யார் உனக்கு கற்றுத் தந்தது" என்று கடுப்புடன் கேட்டார். "நீங்கள் தான். நேரில் வந்து கற்றுத்தரவில்லை என்றாலும் ஆசி வழங்கி என்னுள் இருந்து கற்றுத் தந்தீர்கள்" என்றான் ஏகலைவன். துரோணர் அருச்சுனனைப் பார்த்தார், அவனை உலகிலேயே மிகச் சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது. உடனே ஏகலைவன் பக்கம் திரும்பி "என்னால் வில் வித்தைக் கற்றுக்கொண்டதால் எனக்கு குருதட்சிணை தந்தாக வேண்டும்" என்றார் குரூரமாக. தலை வணங்கிய ஏகலைவன் "நீங்கள் எதைக்கேட்டாலும் அதைத் தருகிறேன்" என்றான்.[1]

துரோணர் ஏகலைவனுக்கு செய்த துரோகம்

[தொகு]

ஒருவன் சம நிலையில் இருப்பதற்கும், நிமிர்ந்து நிற்பதற்கும் வில் ஒரு சின்னமாக சொல்லப்படுகிறது. வில் வித்தையில் ஒருவன் பயிற்சி பெறவேண்டுமானால், அவனது பெருவிரல் (கட்டைவிரல்) தான் மிக முக்கியமானது. மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு எனபதை அறிந்து அருச்சுனன் மட்டுமே மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் ஏகலைவன் வில்லைத் தொடக்கூடாது எனத் தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவு செய்தார் துரோணர். ஏகலைவனை நோக்கி "உனது வலதுகைக் கட்டைவிரலைத் தா" என்றார். ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கத்தியை எடுத்தான் தனது வலதுகைக் கட்டைவிரலை வெட்டி எடுத்து துரோணரின் காலடியில் வைத்தான். ஒருவன் வலது கைக் கட்டைவிரல் இல்லாமல் வில் எய்ய முடியாது, அருச்சுனன் தன் குருவின் கொடூர எண்ணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். தான் மட்டுமே வில்லாளன் என்ற எண்ணம் மேலோங்கி நின்றான்.[1]

ஒரு மீள்பார்வை

[தொகு]

ஏகலைவன் ஒரு வேடுவன் என்றும், தாழ்ந்த குலத்தினன் என்றுமே பலரால் நம்பப்படுகிறது. அவன் வேடுவ இனம்தான் என்றாலும் அவன் மகத நாட்டைச் சேர்ந்த ஒரு காட்டுக்குத் தலைவன். அவன் ஒரு நிஷாத மன்னன். நிஷாத மன்னன் என்றால் ஒடுக்கப்பட்டவர்களின் மன்னன் என நம்பப்படுகிறது. ஆனால், மகாபாரதத்தால் கொண்டாடப்படும் மன்னன் நளனும் ஒரு நிஷாத மன்னன் என்பதைக் கவனிக்க என்பதற்கு அப்பால் அவன் ஆதிவாசி அதாவது தொல் குடி சமூகத்தவன் என்பதற்கு சான்றாக வில்லாள் வேட குல மக்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகலைவன்&oldid=4099226" இலிருந்து மீள்விக்கப்பட்டது