உள்ளடக்கத்துக்குச் செல்

திருட்டத்துயும்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருட்டத்துயும்னன் (திருஷ்டத்யும்னன்) மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். மகாபாரதத்தின்படி இவன், துருபதனின் மகனும், திரௌபதி, சிகண்டி ஆகியோரின் உடன்பிறந்தோனும் ஆவான். குருச்சேத்திரப் போரின்போது பாண்டவர்களுடைய தலைமைப் படைத்தலைவனாகப் பணிபுரிந்த திருஷ்டத்யும்னன், துரோணர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தான்.

பிறப்பு

[தொகு]

பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனுக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்ததால், தேவர்கள் அருள் பெற்றுப் பிள்ளைகளைப் பெறுவதற்காக, புத்திரகாமி யாகம் எனப்படும் வேள்வியைச் செய்தான். துருபதனுக்குத் துரோணருடன் பகை இருந்தது. துரோணர், துருபதனைத் தோற்கடித்து அவனது நாட்டில் பாதியையும் எடுத்துக் கொண்டிருந்தார். தனது இளம் வயது நண்பனான துரோணருடன் தனது நாட்டைப் பகிர்ந்துகொள்வதாக வாக்குறுதி அளித்துப் பின் அதனை மீறியவன் துருபதன். ஆனாலும் துரோணர் தன்னை அவமானப்படுத்தியதாக அவன் கடும் சினம் கொண்டிருந்தான். தனது மகன், துரோணரைக் கொல்லும் வலிமை பெற்றவனாக இருக்க வேண்டுமெனத் துருபதன் விரும்பினான்.

வேள்வியின் முடிவில், வேள்வித் தீயிலிருந்து முழுமையாக வளர்ச்சி பெற்ற, வலிமை மிக்க இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் தோன்றினான். அவனே திருட்டத்துயும்னன். அவன் தோன்றும்போதே, நிறைந்த சமய அறிவும், போர்த்திறனும் கொண்டிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது.

துரோணரைக் கொல்வதற்காகவே அவன் பிறந்தவனாக இருந்தும், போர்க் கலையில் மேலும் தேர்ச்சி பெறுவதற்காகத் துரோணரிடமே சேர்ந்துகொண்டான்.

தலைமைப் படைத்தலைவர்

[தொகு]

திருட்டத்துயும்னனின் தங்கையான திரௌபதியின் சுயம்வரத்தின் போது நடைபெற்ற போட்டியில் வென்று, பிராமணர்கள் போல் வேடமணிந்திருந்த பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் அவளை அடைந்தான். அவர்கள் யாரென அறிய விரும்பிய திருட்டத்துயும்னன் அவர்கள் அறியாமல் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்கள் பாண்டவர்கள் என அறிந்து கொண்டான். பின்னர் பாரதப் போரின்போது, கண்ணனும், அருச்சுனனும் கூறிய ஆலோசனைக்கு இணங்க திருட்டத்துயும்னன் பாண்டவர் படையின் தலைமைப் படைத்தலைல்வராக பொறுப்பேற்றுக் கொண்டான்.

துரோணர் இறப்பு

[தொகு]

குருச்சேத்திரப் போரின்போது துரோணர் பாண்டவர் படையைச் சேர்ந்த பலரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார். துரோணரின் கையில் ஆயுதம் இருக்கும்வரை அவரை யாராலும் வெல்ல முடியாது என உணர்ந்துகொண்ட கண்ணன், அவரைத் தந்திரத்தாலேயே கொல்ல முடியும் எனத் தருமனுக்கு எடுத்துரைத்தான். துரோணர் தனது மகனான அசுவத்தாமன் மீது மிக்க அன்பு கொண்டிருந்தார். அதனால் அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் கூறினால் துரோணர் துயரத்தினால் சிறிது நேரமாவது ஆயுதத்தைக் கீழே போடுவார் எனக் கண்ணன் நினைத்தான். அறம் வெல்ல வேண்டுமானால் இவ்வாறு பொய் கூறுவதில் தவறில்லை எனக் கண்ணன் தருமனுக்குக் கூறினான். தருமன் கண்ணனின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினான். இதனையுணர்ந்த வீமன், கௌரவர் படையிலிருந்த அசுவத்தாமா என்னும் பெயருடைய யானையைக் கொன்றுவிட்டு, அசுவத்தாமா இறந்தான், அசுவத்தாமா இறந்தான் எனக் கூறி ஆர்ப்பரித்தான்.

இச் செய்தியைக் கேள்வியுற்ற துரோணர் அதிர்ச்சியடைந்தார். தருமன் உண்மையே பேசுபவன் என்பதால், செய்தி உண்மையா என்று துரோணர் தருமனைக் கேட்டார். தருமனும், அசுவத்தாமா இறந்தான் என உரக்கக் கூறி யானை என்று மெதுவாகக் கூறினான். தன் மகன் இறந்தான் என்பதை நம்பிய துரோணர் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்தார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட திருட்டத்துயும்னன் உடனே பாய்ந்து துரோணரின் தலையைத் தனது வாளால் வெட்டிக் கொன்றான்.

திருட்டத்துயும்னன் இறப்பு

[தொகு]

போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றுப் போர் முடிவுக்கு வந்தது. இப்போரிலே இறந்து போகாமல் தப்பியவர்களுள் துரோணரின் மகனான அசுவத்தாமன் ஒருவன். ஒரு நாள் இரவில், எதிர்பாராத விதமாக அசுவத்தாமன் பாண்டவர் பாசறையைத் தாக்கித் திருட்டத்துயும்னனையும், திரௌபதியின் மக்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என நினைத்து கொன்று தன் தந்தையின் இறப்புக்குப் பழி தீர்த்துக் கொண்டான்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருட்டத்துயும்னன்&oldid=4059557" இலிருந்து மீள்விக்கப்பட்டது