சிகண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சிகண்டி இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில்வரும் ஒரு கதை மாந்தர். முதலில் பாஞ்சால மன்னன் திருபதனின் மகளாகப் பிறந்து சிகண்டினி எனப் பெயர் கொண்டவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்கள் தரப்பில் தனது தந்தை துருபதன் மற்றும் தமையன் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டவன்.

முன்வரலாறு[தொகு]

முற்பிறவியில் அம்பா எனும் பெண்ணாக இருந்தபோது இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அத்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.

அம்பா சால்வ நாட்டு மன்னனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தினாள். பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்த பீஷ்மர் அதனை மறுத்துவிட்டார். இதனால் மிகவும் அவமதிக்கப்பட்டதாக கருதி அவரைப் பழி வாங்க விரும்புகிறாள். பீஷ்மர் தன்னால் இறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறாள்.அவளே சிகண்டினி ஆக மறுபிறவி எடுக்கிறாள்.

அவள் பிறக்கையில் அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது. அதன்படியே போர்முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டு ஒரு இளவரசனைப்போல் வளர்கிறாள். ஒரு பெண்ணை திருமணமும் செய்துகொள்கிறாள். ஆனால் உண்மையை அறிந்த மனைவி அவளை அவமதிக்கிறாள். இதனால் மனமுடைந்த சிகண்டி பாஞ்சால நாட்டை விட்டு விலகி காட்டில் தற்கொலை செயதுகொள்ள முயல்கிறாள். அச்சமயம் ஒரு யட்சன் அவளைக் காப்பாற்றி அவளுடன் பாலின மாற்றம் செய்து கொள்கிறான்.[1]

சிகண்டி என்ற பெயருடன் ஓர் ஆணாகப் பாஞ்சாலம் திரும்புகிறான். தனது மனைவியுடன் இனிது வாழ்ந்து பிள்ளைகளையும் பெறுகிறான்.அவனது மறைவிற்குப் பின்னர் அவனது ஆண்மை யக்சனுக்குத் திரும்புகிறது.

குருச்சேத்திரப் போர்[தொகு]

குருச்சேத்திரப் போரின்போது, பீஷ்மர் அம்பாவின் மறுபிறவியே சிகண்டி என்பதனை அறிந்தவராக இருந்ததால் ஒரு பெண்ணிடம் போர் புரிதல் ஆண்மைக்கு இழுக்கு என்ற நிலையில், சிகண்டியுடன் போரிட மாட்டார் என்பதை அருச்சுனன் அறிந்தான்.அவரை நேரிடையாக வெற்றிகொள்ள முடியாத அருச்சுனன்,சிகண்டியை முன்னிறுத்தி பின்னால் இருந்து அம்பு மழை பெய்தான். இவ்வாறே சிகண்டியின் உதவியால் யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அருச்சுனன் வீழ்த்தினான்.

போரின் பதினெட்டாம் நாள் இரவில் அசுவத்தாமன் சிகண்டியை கொன்றான்.

ஜாவா நாட்டுவழக்கில் ஸ்ரீகண்டி என அறியப்படும் இவள், ஆணாக மாறுவதில்லை, ஆணுக்கு நிகரான பெண்ணாகக் கருதப்படுகிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சிகண்டினியும்! ஸ்தூணாகர்ணனும்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகண்டி&oldid=3725104" இலிருந்து மீள்விக்கப்பட்டது