அசுவமேத பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரை வேள்வி குறித்துக் கண்ணன் ஆலோசனை கூறுதல்.

அசுவமேத பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினான்காவது பருவமாகும்.அசுவமேத யாகம் என்பது குதிரை வேள்வி எனப் பொருள்படும். பிற விடயங்களுடன், தருமர் குதிரை வேள்வி செய்வது முதன்மையான நிகழ்வாகச் சொல்லப்படுவதால் இப்பருவத்துக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

அமைப்பு[தொகு]

இப்பருவம் பின்வரும் இரண்டு துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:

  1. அசுவமேதிக பருவம்
  2. அனுகீதா பருவம்

இப்பருவங்கள் பாண்டவர்கள் செய்த குதிரை வேள்வி தொடர்பான நிகழ்வுகளையும், அனுகீதா பருவத்தில், முன்னர் கண்ணன் அருச்சுனனுக்குச் சொன்ன கீதையின் பல விடயங்களை மீண்டும் அருச்சுனனுக்குச் சொல்வதாகவும் அமைந்துள்ளன.

நிகழ்வுகள்[தொகு]

போரின் போது தம்மால் செய்யப்பட்ட பாவச் செயல்கள் குறித்துத் தொடர்ந்தும் வருந்துகிறான் தருமன். வியாசர் அவனைத் தேற்றி. வேள்வி செய்வதன் மூலம் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபட்டுவிடலாம் என்று கூறி, குதிரை வேள்வி நிகழ்த்தும்படி ஆலோசனை கூறுகிறார். இதற்கான நிதியைப் பெறுவதற்காக, ஒரு காலத்தில் மாருதன் என்னும் அரசன் இமயமலைப் பகுதியில் செய்த வேள்வியில் தானமாக அளிக்கப்பட்ட செல்வங்களில் பெரும்பகுதியைப் பிராமணர்கள் அங்கேயே விட்டுச் சென்றார்கள் என்றும் அதனை எடுக்கும்படியும் வியாசர் கூறுகிறார்.[1] இவ்விடத்தில் மாருதனுடைய கதையையும் வியாசர் தருமனுக்குக் கூறுகிறார். பாண்டவர்கள் அப்புதையலை அடைகிறார்கள். போரின் இறுதி நாளில் அசுவத்தாமன் செலுத்திய கணையின் தாக்கத்தால், அருச்சுனனின் மகனான அபிமன்யுவின் மனைவி உத்தரைக்குக் குழந்தை இறந்து பிறப்பதும், கண்ணன் அக்குழந்தையை உயிர்ப்பிப்பதுமான நிகழ்வும் இப்பருவத்தில் சொல்லப்படுகின்றன. இதன் பின்னர் குதிரை வேள்வி நடப்பது, இதன்போது அருச்சுனன் பல அரசர்களுடன் போரிட்டு நாடுகளைப் பிடிப்பது ஆகிய நிகழ்வுகளும் இப்பருவத்தில் இடம்பெறுகின்றன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. Ganguli, Kisari Mohan. (translator), The Mahabharata of Krishna Twaipayana Vyasa - Book 14.
  2. அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 27

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவமேத_பருவம்&oldid=3722119" இலிருந்து மீள்விக்கப்பட்டது