பிருகன்னளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருநங்கையாக மாறிய அருச்சுனன் விராட இளவரசிக்கு ஆடல் - பாடல் கற்றுத்தருதல்

பிருகன்னளை (Brihannala), மகாபாரத இதிகாசத்தின் விராட பருவத்தில், 13 ஆண்டு கால வனவாசம் முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டி, திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்கள் மத்சய நாட்டு மன்னர் விராடன் அரசவையில் பணியில் சேர்ந்தனர்.

பாண்டவர்களில் அருச்சுனன் திருநங்கை வடிவத்தில் பிருகன்னளை என்ற பெயரில், மன்னர் விராடனின் இளவரசி உத்தரைக்கு ஆடல், பாடல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தான். [1] [2]

பின்னணி; ஊர்வசியின் சாபம்[தொகு]

பிருகன்னளை

பாண்டவர்களின் வனவாசத்தின் போது, ஒருமுறை தனது அம்சமாகப் பிறந்த அருச்சுனனை, இந்திரன் தேவலோகத்திற்குச் அழைத்துச் சென்றான். அங்கு அரம்பையான தேவலோக நடனமாது ஊர்வசி அருச்சுனன் மீது மையல் கொண்டு, தன் காமப்பசியைத் தணிக்க வேண்டினாள். தன் பிறந்த குலத்தின் முன்னோரான புரூரவனின் மனைவியாக ஊர்வசி வாழ்ந்த காரணத்தினால், ஊர்வசி தனது தாய்க்குச் சமம் என எடுத்துரைத்து, ஊர்வசியின் காம ஆசையை நிறைவேற்ற அருச்சுனன் மறுத்தான். இதனால் கோபம் கொண்ட ஊர்வசி, அருச்சுனனை திருநங்கையாக மாறச் சாபமிட்டாள். பின்னர் இந்திரனின் வேண்டுகோளின் படி, அருச்சுனன் எப்போது நினைக்கிறாரோ அப்போது, ஒராண்டு திருநங்கையாக வாழ்வான் என ஊர்வசி சாபத்தை மாற்றி அமைத்தாள். [3]

உத்தர குமாரனின் தேரோட்டியாகப் பிருகன்னளை[தொகு]

ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையில், பாண்டவர்கள் மத்சய நாட்டில் ஒளிந்திருப்பதாகக் கருதிய துரியோதனன் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அஸ்வத்தாமன் தலைமையில் பெரும் படை திரட்டிக் கொண்டு, விராட நாட்டைத் தாக்கி பாண்டவர்களை வெளிக் கொணர, விராட நாட்டின் எல்லைப்புறங்களில் உள்ள ஆநிரைகளை கவர்ந்து சென்றனர்.

கௌரவர்களை விரட்டி அடித்து, ஆநிரைகளை மீட்கப் புறப்பட்ட விராடனின் மகன் இளவரசன் உத்தரனின் தேரோட்டியாகப் பிருகன்னளை சென்றார்.[4] போரில் உத்தரகுமாரன் தேரோட்ட, பிருகன்னளை ஆயுதமேந்தி கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டார். போரின் முடிவில் கௌரவப் படைகள் தோற்று அத்தினாபுரம் ஓடியது.[5]

பிருகன்னளை உத்தரையை மருமகளாக ஏற்றல்[தொகு]

போரின் முடிவில் தான் பிருக்ன்னளை அல்ல, அருச்சுனன் என்று வெளிக்காட்டி, விராட அரசவையில் சைரந்திரி எனும் பெயரில் பட்டத்தரசியின் பணிப் பெண்னாக பணிபுரிபவள் திரௌபதி என்றும், விராடனின் சொக்கட்டான் ஆடும் கங்கன் தருமர் என்றும் மற்றும் அரசவையில் பணியாற்றும் வீமன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்களைப் பற்றியும் தெரியப்படுத்தினார்.

பின்னர் விராட மன்னர், உத்தரையை அருச்சுனனுக்குத் திருமணம் செய்து தர எண்ணினார். உத்தரை தன்னிடம் ஆடல், பாடல் படித்த மாணவி என்பதால் உத்தரையைத் திருமணம் செய்து கொள்ள இயலாது என அருச்சுனன் கூறினார். இறுதியாக அருச்சுனன் மகன் அபிமன்யுக்கு உத்தரையை திருமணம் செய்து வைத்தனர்.[6] [7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகன்னளை&oldid=2888379" இருந்து மீள்விக்கப்பட்டது