உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் பத்தாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

[தொகு]

பத்தாம் நாள் வீடுமர்- அருச்சுனன் இடையே பெரும்போர் நடந்தது. போர்க்களத்தில் சிகண்டியை முன்னிறுத்தி அருச்சுனன் போர் செய்தான்.

பெண் பிறப்பாகிய சிகண்டியை வீடுமர் எதிர்க்கவில்லை. பீஷ்மர் அமைதியாக இருந்த சமயத்தில் அவரை அருச்சுனன் குறிபார்த்து தாக்கினான்.

பீஷ்மர் எறிந்த சக்தியாயுதத்தை அருச்சுனன் தனது அம்புகளால் சிதைத்தான். இதைத் தொடர்ந்து வீடுமர் கத்தியும் கேடயமுமாக தேரிலிருந்து இறங்க முயற்சித்தார். ஆனால் அந்த ஆயுதங்களை அருச்சுனன் தனது அம்புகளால் துண்டு துண்டாக்கினான். அவரின் உடல் முழுவதும் அருச்சுனனின் அம்புகள் பாய்ந்தன. தேரிலிருந்து வீடுமர் தரையில் வீழ்ந்தார்.

உடலின் எல்லா பாகங்களிலும் அம்புகள் குத்திக்கோர்த்து இருந்ததால், வீடுமரின் உடல் தரையைத் தீண்டவில்லை. அம்புப்படுக்கையில் உடல் கிடக்க, தலை தொங்கிக்கிடந்தது. தன் தலையை தாங்கிப் பிடிக்கும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை வைக்குமாறு வீடுமர் கேட்டபோது, பலரும் பஞ்சு அடைக்கப்பட்ட தலையணைகளை கொண்டு வந்தனர். அவைகளை மறுத்த வீடுமர், அருச்சுனனை உதவுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அருச்சுனன் தனது மூன்று அம்புகளை எடுத்து, கூர்மையான பக்கம் வீடுமரின் தலைப்பக்கம் வரும்படி அம்புகளை தரையில் ஊன்றினான்.

தான் மிகவும் களைப்படைந்துள்ளதால் தண்ணீர் தருமாறு வீடுமர், அருச்சுனனை கேட்டார். அருச்சுனன் ஒரு அம்பினை எடுத்து நிலத்தை நோக்கி எய்தவுடன், நிலத்தடியிலிருந்து நீர் பாய்ச்சலாய் வெளிவந்தது. தனது புதல்வனின் தாகத்தை தீர்க்க கங்கை நதியே அங்கு வந்ததாக வியாசர் தனது உரையில் எழுதியுள்ளார். தண்ணீரை அருந்தியபிறகு வீடுமர், "இனிமேலும் போர்புரிய வேண்டாம்; பாண்டவர்களுடன் சமாதானமாக போகவும்" என துரியோதனனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் அந்த அறிவுரை துரியோதனனுக்குப் பிடிக்கவில்லை.

வீரர்கள் அனைவரும் தத்தம் பாசறைகளுக்கு வெவ்வேறான மனநிலைகளுடன் திரும்பினர்.

உசாத்துணை

[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.