அங்கம்
அங்கம் (अंग aṅga) என்பது கி. மு. 6ஆம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஓர் இராச்சியமாகும். இவ்விராச்சியம் அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. அங்குத்தர நிக்காய போன்ற பௌத்த நூல்களிலும் வியாக்கியபிரசினபதி என்னும் சமணநூலிலும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாக அங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய பீகாரிலுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார், ஜமுய் ஆகியவற்றையும், ஜார்க்கண்டிலுள்ள தியோகார், கொட்டா, சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். வங்கதேசத்தின் வடமேற்கிலும், விதேகதேசத்திற்கு தெற்கிலும் கண்டகீநதி அருகில் வரை பரவி இருந்த தேசம்.[1] சம்பா நதி மகதத்தையும் அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின்படி குந்தியின் மூத்த மகனான கர்ணனுக்கு கௌரவர்களில் மூத்தவனான துரியோதனனால் கர்ணனை அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான். [2] மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம், வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. இந்த தேசம் மேற்கில் உயர்ந்தும், கிழக்கில் சாய்ந்தும் மிகவும் நல்ல மண் வளத்துடன் இருக்கும் தேசமாகும். இதற்கு வடக்கில் அருணம் என்றும், தெற்கில் அபரகாசி என இரு உப தேசங்கள் உண்டு. இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[3]
மலை, காடு, விலங்குகள்
[தொகு]இந்த தேசத்தின் கிழக்குப்பாகத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் மோதாகிரி, என்னும் மலை மிகச்சிறந்தவை. இதில் கொடிய விலங்குகள் அதிகம்.
ஆறுகள்
[தொகு]இந்த அங்கதேசத்தின் வடக்கில் சம்பா என்னும் நகரத்தின் அருகில் கண்டகீ நதியும், கௌசிக நதியும் ஒன்று சேர்ந்து அங்க தேசத்தை செழிக்க வைக்கின்றது. அங்கதேசத்திற்கு மேற்கில் பூமியை கடந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.[3]
தலைநகர்
[தொகு]அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.[N.B. 1]. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது (திக நிக்காய). பீகாரிலுள்ள பகல்பூரே சம்பா என கருதப்படுகிறது. இங்குள்ள இரண்டு கிராமங்களின் பெயர்கள் சம்பா நகரம் மற்றும் சம்பா புரம் என்பனவாகும்.[5]
சம்பா அதன் செல்வம் மற்றும் வணிகத்துக்காக புகழ்பெற்றது. இது ஒரு வணிக நிலையமாக காணப்பட்டதோடு இதன் வணிகர்கள் சுவர்ணபூமி எனுமிடத்துக்கு வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி சென்று வந்துள்ளனர். 4ம் நூற்றாண்டின் இறுதியில் சீனத் துறவியான ஃபக்சான் தனது யாத்திரிகையின்போது சம்பாவில் பல பௌத்த கோயிகள் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்நகரை சீன மொழியில் சான்போ(瞻波 பின்யின்: Zhānbō; வேட்-கில்சு: Chanpo)[N.B. 2] எனக்குறிப்பிட்டுள்ளார். அங்க தேசம் அதன்பின் பலகாலம் இருக்கவில்லை;இது பின்னர் சீனமொழியில் யாங்ஜியா(鴦伽) என வழங்கப்பட்டது.[N.B. 3]
சம்பா ராச்சியம்(இன்றைய வியட்நாமில்) என்பதும் இவ் கிழக்கிந்திய சம்பா நகரிலிருந்தே ஆரம்பமானதாக எண்ணப்படுகிறது. என்னும் மானிடவியல் ஆதாரங்களின்படி இவ்விராச்சியத்தைத் தோற்றுவித்தவர்கள் கிழக்கிந்தியாவின் எதிர்ப்புறமாகவுள்ள இந்தோசீனக் குடாவிலுள்ள போர்னியோவிலிருந்தே வந்துள்ளனர்.[6]
அங்கத்தின் ஏனைய முக்கிய நகரங்களாக அஸ்ஸபுரம் மற்றும் பத்திரிகா என்பவற்றைக் குறிப்பிடலாம்.
பெயரின் மூலம்
[தொகு]மகாபாரதம் (I.104.53-54) மற்றும் புராண இலக்கியங்கள் அங்கம் எனும் பெயர் அதனைத் தோற்றுவித்த இளவரசர் அங்கன் பெயரால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன.
ராமாயணம், (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது.[7]
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]மகாபாரத காவியத்தில் அங்க நாட்டிற்கு கர்ணனை மன்னராக, துரியோதனன் பட்டம் சூட்டியதாக ஆதி பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்க நாட்டின் தலைநகராக சம்பாபுரி நகரம் விளங்கியது. மகத நாட்டு மன்னர் ஜராசந்தன் மாலினிபுரி எனும் நகரத்தை அங்க மன்னர் கர்ணனுக்குப் பரிசாக அளித்தான்.
அத்துடன் மன்னன் தசரதனுக்கு சாந்தா என்ற மகள் பிறந்ததாகவும் அவளை அங்க தேசத்து மன்னன் ரோமபாதன் வளர்த்ததாகவும் வன பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருச்சேத்திரப் போரில்
[தொகு]அங்க நாட்டு மன்னன் கர்ணன், குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக போரிட்டார். குருச்சேத்திரப் போரின் 16 மற்றும் 17வது நாள் போரின் போது, கௌவரப் படைகளுக்கு தலைமை ஏற்றார். போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டார். போருக்குப் பின்னர் கர்ணனின் மகன் இந்திரப்பிரஸ்தம் நாட்டிற்கு மன்னராக, பாண்டவர்களால் முடிசூட்டப்பட்டான்.
பதியப்பட்ட வரலாறு
[தொகு]மிகமுந்தைய குறிப்பு அதர்வ வேதத்தில் (V.22.14) காணப்படுகிறது.
புராண நூல்கள் அங்கம், கலிங்கம், வங்கம், விதர்பம், விந்தியம் போன்ற நாடுகளை பூர்வ தட்சிண பிரிவுகள் எனக் குறிப்பிடுகிறது.[8]
புராண நூல்கள் அங்கத்தின் மன்னர்கள் சிலரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. மகாகோவிந்த சுத்தந்த எனும் நூல் அங்க மன்னனான தத்தாரத்தனைக் குறிப்பிடுகிறது. சமணக் குறிப்புகளில் தாதிவாகனன் என்பவன் அங்கத்தின் ஆட்சியாளனாகக் குறிப்பிடப்படுகிறான். புராணங்களும் ஹரிவம்சம் எனும் நூலும் அவனை அங்கத்தின் ஸ்தாபகரான அங்கனின் மகனாகக் குறிப்பிடுகின்றன. சமண சமயக் குறிப்புகளில் இவனது ஆட்சிக்காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கத்துக்கும் மத்ச தேசத்துக்கும் இடையில் மகதம் காணப்பட்டது. ஆரம்பத்தில் மகத தேசத்தினர் மிகவும் பலவீனர்களாயிருந்தனர். அங்கத்துக்கும் அதன் கிழக்கேயிருந்த நாடுகளுக்குமிடையில் பெரும் மோதல் ஏற்பட்டிருந்தது. விதுர பண்டித ஜாதக எனும் நூலில் ராஜக்கிருகம் (மகதத்தின் தலைநகர்) அங்கத்தின் ஒரு நகரமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் அங்கத்தின் மன்னனால் விஷ்ணுபாத மலையில் (கயையில்) செய்யப்பட்ட ஒரு தியாகத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இதன் படி அங்கதேசம் மகதத்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றதோடு அதன் எல்லைகளை மத்சய தேசம் வரை விஸ்தரித்துக் கொண்டமையும் தெளிவாகிறது.
அங்கத்தின் இவ் வெற்றி நீண்டநாள் நீடிக்கவில்லை. கி.பி. 6ம் நூற்றாண்டின் இறுதியில் மகதத்தின் மன்னனான பிம்பிசாரன், அங்கத்தின் இறுதி மன்னனான பிரம்மதத்தனைக் கொன்றதோடு சம்பாவையும் முற்றுகையிட்டான். பிம்பிசாரன் அதனை தன் தலைமையிடமாக ஆக்கிக்கொண்டு தன் தந்தையின் பிரதிநிதியாக ஆட்சிபுரிந்தான். அதன்பின், அங்கதேசம் மகதப் பேரரசின் ஒரு பகுதியாக ஆனது (PHAI, 1996).
இவற்றையும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Variously written as Mālinī,[4] Mālini, Mālina[5]
- ↑ Campā (Indian, not Vietnamese) was also transliterated, besides 瞻波, in the records as Zhanbopo (瞻博婆) and Zhanpo (瞻婆、瞻匐、瞻蔔、詹波、闡蔔、閻波、占波)[4]
- ↑ Anga was also transliterated, besides 鴦伽, in the records as 鴦迦 (different radical for jiā), 泱伽 (same pronunciation), Yāngjué (鴦掘), Àng'é (盎誐). Sometimes by metonymy, the kingdom would be called the ‘State of Champa’‘’, i.e., 瞻波國.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
- ↑ Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK
- ↑ 3.0 3.1 புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 222 -
- ↑ 4.0 4.1 4.2 佛光電子大辭典 (Buddha's Light Electronic Dictionary). Taiwan: Buddha's Light Publishing (Fo Guang Shan)
- ↑ 5.0 5.1 G P Malalasekera, Dictionary of Pali Proper Names. 1937.
- ↑ Wikipedia article on the Chams.
- ↑ "Balakanda Book I, Chapter 23". Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
- ↑ The Garuda Purana 55.12; V.D. I.9.4; the Markendeya Purana 56.16-18