உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கை (இந்து மதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கை
கங்கை தனது கெளுத்தி மீன் வாகனத்துடன்
தேவநாகரிगंगा
சமசுகிருதம்Ganga
வகைதேவி, நதி
இடம்பிரம்மலோகம் அல்லது பிரம்மபுரம், இமயமலை மற்றும் புவி
மந்திரம்ஓம் கங்கா தேவி நமஹ
துணைதிருமால்- திருமால் பாதங்களில் கங்கை பிறப்பதாக நம்பிக்கை
சிவன் –கங்கையைத் தாங்கியவராக
சந்தனு –மகாபாரதத்தில் கங்கையின் கணவன்
குழந்தைகள்வீடுமர்(மகாபாரதத்தில்) , முருகன்(ஒளி வடிவில் முருகனை ஏந்திச்சென்றதால்), வீரபத்திரன் (சிவனின் சடையில் கங்கை தங்கிய பிறகு அச்சடையிலிருந்து தோன்றியவர்)

கங்கா தேவி (சமசுகிருதம்: गङ्गा, இந்தி: गंगा Gaṅgā, பர்மியம்: ဂင်္ဂါ, ɡɪ́ɴɡà என்பவர் பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவனின் மனைவியருள் ஒருத்தியும்[1] ஆவார். இவருடைய சகோதரியான பார்வதி சிவனை மணந்தபின்பு, பகீரதனின் வேண்டுதலால் தேவலாகத்திலிருந்து சிவனின் சடாமுடியை அடைந்தார்.

இந்து மதத்தில், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.

இந்து சமய நூல்களின்படி, கங்கைக்கு எண்ணற்ற குணநலன்களும், பல கதைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணானவை. கங்கையைச் சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்புத் தாயென சைவ சமயம் கூறுகிறது.இதிகாசமான மகாபாரதம் கங்கையைப் பீஷ்மரின் தாயென கூறுகிறது.

சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்

[தொகு]
கங்கை கோயில்
கங்கை நதி

கங்கா தேவி தேவலோகத்தில் மந்தாகினி என்று அறியப்படுகிறார். பகீரதன் தவத்திற்கு மகிழ்ந்து பூலோகத்திற்கு வந்தமையால் பாகீரதி எனவும் வழங்கப்படுகிறார். சைவ சமயத்தில் கீழ்கண்ட பெயர்கள் கங்கா தேவிக்கு வழங்கப்படுகின்றன.

  • கங்கையம்மன்
  • ஜானவி
  • பூலோக கங்கை
  • பாதாள கங்கை
  • திரிபதாகை
  • தேவிநதி
  • மந்தாகினி
  • வரநதி
  • உமைசுர நதி
  • தசமுகை நதி
  • சிர நதி
  • தெய்வ நதி
  • விமலை
  • பாலகங்கா
  • நீளகங்கா
  • காளிகங்கா
  • பாணகங்கை
  • போகவதி

திருவுருவ அமைப்பு

[தொகு]

கங்கை சிவனுடைய மனைவி என்பதால் தலையில் பிறைசூடி, நெற்றிகண்ணுடன் காட்சியளிக்கிறார். வெண்ணிற ஆடையுடுத்தி வெண் தாமரையில் வீற்றிருக்கும் தேவி, நான்கு கரங்களையும், அதில் முன்னிரு கைகளில் அபயவரத ஹஸ்த முத்திரைகளையும், பின்னிரு கைகளில் தாமரையும், பொற்குடமேந்தியிருக்கிறார். இவருடைய வாகனமாக முதலையுள்ளது.

இல்லறம்

[தொகு]

சிவனின் வரம்

[தொகு]

ஆதி சக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்துத் தட்சனின் யாகத்தில் விழுந்து மாய்ந்தார். அவருடைய பூத உடலை எடுத்துத் திரிந்த சிவபெருமானை நிலைகொள்ளச் செய்யத் திருமால் அவ்வுடைலைச் சக்ராயுதத்தினால் சிதைத்தார். அவ்வாறு சிதைக்கப்பட்ட தாட்சாயிணியின் உடல் பாகங்களில் ஒன்று பர்வதராஜனின் எல்லையில் இருந்தது. அதை அரக்கர்களிடமிருந்து காக்க, பர்வதராஜன் போராடும் பொழுது, அவரின் மகளான கங்கையும் துணைபுரிந்தார். இதனால் சிவபெருமான் கங்கைக்கு நதியாக மாறும் பொழுது புண்ணியமிகுந்த நதியாக இருப்பாய் என்று வரமளித்தார். கங்கைக்குச் சிவபெருமான் மீது காதல் வந்தது. அதைச் சிவபெருமானிடம் கூறிய பொழுது தாட்சாயிணியைப் பிரிந்த சோகத்தில் இருப்பதால் மறுத்துவிட்டார்.

தேவலோக நதி

[தொகு]

சிவபெருமானின் வரத்தினால் புண்ணியமான நதியாக இருந்த கங்கையை அரக்கர்களால் களங்கப்பட்ட தேவலோகத்தின் பாவங்களை நீக்கப் பிரம்மாவும், இந்திரனும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகம் புண்ணியமடைந்தது. இருப்பினும் சிவபெருமானின் மீது கொண்ட காதலால் கங்கை வருத்தத்துடன் இருந்தார்.

பகீரதத் தவம்

[தொகு]
வானிலிருந்து இறங்கி வரும் கங்கை - மாமல்லபுரச் சிற்பம்

சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை பகீரதன். முன் தோன்றி, நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின் என்றாள். உடனே பிரம்ம தேவன் பகீரதனிடம் சிவனாரை நோக்கித் தவம் புரியும் படி கட்டளையிட்டார். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் பகீரதன் முன் தோன்றி கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூறினார்.

சடாமுடிப்பிரியை

[தொகு]

தேவலோகத்திலிருந்து மிகுந்த வேகத்துடன் சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு பாதாள லோகம் செல்ல கங்கை தீ்ர்மானித்தாள். அதனை உணர்ந்த சிவபெருமான் கங்கையை சடாமுடியில் பிடித்தார். கங்கையின் ஆணவம் தீரும் வரை பூலோகத்தில் அவளை விட இயலாது என்று கூறினார். கங்கை சிவபெருமானின் சடாமுடியில் மோகம் கொண்டு அங்கேயே சுற்றி வந்தாள். அதனால் கவலையுற்ற பகிரதன் மீண்டும் கடுந்தவம் இயற்றி சிவபெருமானின் மணம் குளிரும்படி செய்தான்.[2] சிவபெருமானும் கங்கையை பிந்துசரஸ் மலையில் பாய செய்தார். கங்கை பகிரதனின் வேண்டுகோளின் படி அவனுடைய முன்னோர்களை நற்கதி அடையும்படி செய்தாள்.[3]

சிவகங்கா பரம்பரை

[தொகு]

சிவபெருமான் கங்கா தேவியின் பரம்பரைப் பற்றி சிவருத்திர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4][5]

சிவபெருமான் கங்கா தேவிக்கு வீரபத்திரர் என்ற மகன் பிறந்தார். வீரபத்திரனுக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர் என்ற பெயருமுண்டு.[6] அவருக்குத் திருமண வயது வந்ததும் சிவபெருமான் இந்திரனை அழைத்துப் பெண் பார்க்கும்படி கூறினார். அவர் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணி தேவியை வீரபத்திரனுக்கு ஏற்ற மணமகள் என்பதை அறிந்தார். இராமராசர் சம்மதத்துடன் வீரபத்திரன் - கயல்மணி திருமணம் நடந்தது. அவர்களுக்குச் சிவருத்திரன் என்ற ஆண்குழந்தையும் பிறந்தது.

சிவருத்திரனுக்கு ஒரு வயதானபொழுது வீரபத்திரன் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கயல்மணி தேவி சிவருத்திரனுடன் பூக்கட்டும் வியாபாரத்தினைக் கோயிலில் செய்து வந்தார். சிவருத்திரன் பெரியவனாகியதும் சிவபெருமானின் வில்லும் வாளும் பெற்று நள்ளி மாநகருக்குள் திக்விஜயம் செய்தார். அங்கு உக்கிர குமாரன் என்ற இளவரசனுடன் சிவருத்திரனுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற பொழுது, பண்டிதர் மகள் கண்டிகா தேவி, வணிகர் மகள் உமையாள் மற்றும் இளவரசி தத்தை ஆகியோரை கவர்ந்து சென்றவனிடமிருந்து சிவருத்திரன் மீட்டார்.

அவர்கள் மூவரும் சிவருத்திரன் மேல் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவியான கண்டிகைதேவிக்குத் தருமக்கூத்தன், காந்திமதி என்ற இரு குழந்தைகளும், இரண்டாவது மனைவியான உமையம்மைக்கு தருமன், மந்திரை என்ற இரு குழந்தைகளும், மூன்றாவது மனைவியான தத்தைக்கு கலுழன், சுதை என்ற இரு குழந்தைகளும் பிறந்தன.

பார்வத ராசன்மைனாகுமாரி
சிவன்கங்கைஇராமராசர்
வீரபத்திரன்கயல்மணி தேவி
சிவருத்தர்கண்டிகாதேவிஉமையம்மைதத்தை
தருமக்கூத்தன்காந்திமதிதருமன்மந்திரைகலுழன்சுதை

மகாபாரதத்தில் கங்கை

[தொகு]
எட்டாவது குழந்தையாகிய வீடுமரை கங்கை நீரில் அமிழ்த்துவதை சந்தனு தடுத்தல்.

இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் கங்கை, வருணனின் மனைவியாகவும், பீஷ்மரின் அன்னையாகவும் சித்தரிக்கப்படுகிறார். தேவலோக நதியான கங்கையும், தேவர்களும் சத்திய லோகத்தில் பிரம்மனைத் தரிசிக்கச் சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனைப் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும்படிச் சாபமிட்டார். அத்துடன் மேலாடையைச் சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கவும், மனிதனாகப் பிறக்கும் வருணனைத் திருமணம் செய்து கணவனுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்வாயெனவும் சாபமிட்டார்.

இதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களைச் செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார்.[7] கங்கையை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்குக் கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்கக் கூடாதன்ற ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையைச் சந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.

இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தையை எடுத்துச் சென்று ஆற்றில் மூழ்கச் செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்கச் சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறா என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தனவற்றையும் விளக்கினார்.

கங்கா தசரா

[தொகு]

தேவலோக நதியான கங்கா தேவி பகீரதனின் தவத்தினால் பூலோகத்திற்கு வந்தது வைகாசி மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாளாகும். இந்நாளை, ‘கங்கா தசரா’ என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.[8] இந்நாளைப் பாஹர தசமி என்றும் அழைக்கிறனர்.[9]

பாவம் போக்கும் நதி

[தொகு]

சிவபெருமான் கங்கைக்கு புனிதமான மதிப்பினைத் தந்தார். அவ்வரத்தினால் கங்கை நதியில் குளிப்பவர்களுக்குப் பாவங்கள் தொலைந்தன. இதனால் பூலோக மனிதர்கள் அனைவரும், அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினைக் கைலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன்படி கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மானுட ரூபம் கொண்டு சென்றனர். வயதானவரான சிவபெருமானும், பாமரப் பெண்ணாக பார்வதியும் மாற்றுருவில் நதியில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள், தன்னுடைய கணவன் நீரில் மாட்டிக் கொண்டதை கண்டு அருகிலுள்ளோரைக் காக்கும்படி வேண்டினாள். சிலர் வயதானவரைக் காப்பாற்றச் சென்றனர். ஆனால் அவர்களைத் தடுத்த அப்பெண், அவர்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்றாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஓர் இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கித் தன்னுடைய பாவங்களைத் தீர்த்து, அவள் கணவனைக் காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரது பாவங்களையும் தீர்க்கலாம் எனும் பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் பாவங்களைத் தீர்க்க இயலும் என்பது நம்பிக்கையாகும்.[10]

சைவ சமயம்

[தொகு]
கங்கையினை சடாமுடியில் தாங்கும் சிவபெருமான்

சைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திரப் புராணம் எனும் நூல் வீரபத்திரனைச் சிவகங்கை மகனாகச் சித்தரிக்கிறது.

சூரிய குலத்தின் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கிப் பத்தாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பகீரதன் முன்னோர்களின் சாம்பலில் பட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். அதற்காகக் கங்கையை நோக்கித் தவமிருந்தான் பகீரதன். கங்கையும் அவனுடைய தவத்தில் மகிழ்ந்து பூலோகத்திற்கு வருவதற்குச் சம்மதம் தெரிவித்தாள். ஆனால் சிவபெருமானிடம் தன்னுடைய காதலைக் கூறிய வேளையில் அவர் மறுத்துவிட்டதால், இம்முறை பகீரதனைப் பயன்படுத்திச் சிவபெருமானை அடைய எண்ணினாள்.

அதனால் பகீரதனிடம் தான் தேவலோகத்திலிருந்து பெரும் பிரவாகமாக வருவதைக் கட்டுப்படுத்தச் சிவபெருமானால் மட்டும் இயலும் என்று கூறி அவரிடம் சம்மதம் வாங்கும்படி கூறினாள். பகீரதன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய சம்மதத்தினைப் பெற்றார். கங்கையும் சிவபெருமானைப் பாதாள லோகத்திற்கு அடித்துச் சென்று அங்கு வாழ்வதென்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய ஆவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையைச் சிறைப்பிடித்தார்.

சிவபெருமானின் சடாமுடியிலேயே சுற்றித் திரிந்த கங்கை மீண்டும் பூலோகத்திற்கு வரப் பகீரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையைச் சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையைப் பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்.[3] நாயன்மார்களும் சிவபெருமானைக் கங்கைவார் சடையார் என்றே போற்றிப் பாடுகின்றனர்.

வைணவ சமயம்

[தொகு]

வைணவ சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்த பொழுது, வானை அளப்பதற்காகக் காலை மேலே தூக்கிய பொழுது சத்திய லோகம் வரை அக்கால் நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் அபிசேகம் செய்தார். அதனால் கங்கை திருமாலின் திருவடியில் பிறந்தார் என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.[11]

கௌமாரம்

[தொகு]

முருகப்பெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் கௌமார சமயமானது, முருகனை கங்கையின் மகனாகக் கூறுகிறது.[12] சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட ஆறு நெருப்புப் பொறிகளைக் கங்கையே சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார் என்பதால் முருகனைக் கங்கையின் மைந்தன் என்று கூறுகின்றனர்.

கங்கையம்மன்

[தொகு]

கங்கையை அம்மனாக வழிபடுவதால் இந்தியாவில் கங்கையம்மன் என்ற பெயரால் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் கெங்கையம்மன் கெங்காதேவி என்ற பெயர்களும் பரவலாக உள்ளது.

கங்காதேவி வழிபட்ட சிவாலயம்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள் ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%9A பரணிடப்பட்டது 2015-06-28 at the வந்தவழி இயந்திரம் சிவனுக்கு இரண்டு மனைவிகள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.
  3. 3.0 3.1 http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm கம்பராமாயணம் யுத்தகாண்டம் | பகீரதன் (1586, 3923)
  4. வரகவி மு.கணபதியா பிள்ளை இயற்றிய சிவருத்திரர் கலிவெண்பா - முதற்பதிப்பு - 1949
  5. Theni. "Welcome to Illathu Pillaimar Community Site - இல்லத்துப் பிள்ளைமார் இணைய தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!". Archived from the original on 2015-05-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
  6. "Agora Veerabadra Temple : Agora Veerabadra Agora Veerabadra Temple Details – Agora Veerabadra – Kumbakonam – Tamilnadu Temple - அகோர வீரபத்திரர்".
  7. http://www.thinakaran.lk/2010/05/22/_art.asp?fn=f1005221&p=1[தொடர்பிழந்த இணைப்பு]
  8. http://temple.dinamalar.com/news_detail.php?id=19270 இன்று கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்!
  9. "கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்!". Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
  10. "பக்தி கதைகள்,".
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  12. gmail.com, kaumaram.meta @. "திருப்புகழ் - எண் வரிசைப் பட்டியல் திரு அருணகிரிநாதர் அருளியது - Sri AruNagirinAthar's Thiruppugazh numerical list for songs – Songs of Praises and Glory of Lord Murugan – Experience the Magic of Muruga".
  13. "Gangai Amman Temple : Gangai Amman Gangai Amman Temple Details – Gangai Amman – Chandavasal – Tamilnadu Temple - கங்கையம்மன்".

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ganga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_(இந்து_மதம்)&oldid=4000694" இலிருந்து மீள்விக்கப்பட்டது