தேனி
தேனி அல்லிநகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 10°00′43″N 77°28′43″E / 10.01194°N 77.47861°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தேனி |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | தேனி நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | தங்க தமிழ்செல்வன் |
• சட்டமன்ற உறுப்பினர் | ஓ. பன்னீர்செல்வம் |
• மாவட்ட ஆட்சியர் | திருமதி.ஆர்.வி ஷஜீவனா, இ.ஆ.ப. |
மக்கள்தொகை (2011) | |
• சிறப்பு நிலை நகராட்சி | 94,453 |
• நகர்ப்புறம் | 2,02,100 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 625 x00 |
தொலைபேசி குறியீடு | 04546 |
வாகனப் பதிவு | TN-60 |
சென்னையிலிருந்து தொலைவு | 506 கி.மீ. (314 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 77 கி.மீ. (48 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 182 கி.மீ. (113 மைல்) |
விருதுநகரிலிருந்து தொலைவு | 100 கி.மீ. (62 மைல்) |
இணையதளம் | theni |
தேனி (Theni) அல்லது தேனி அல்லிநகரம் (Theni Allinagaram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சிகள் ஆகும். தேனி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தேனி - அல்லிநகரம் நகராட்சி
[தொகு]இந்நகரமானது மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 506 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் தேனி, அல்லி நகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன் பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில், இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லி நகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் தேனி-அல்லி நகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை (G.O. No. 194, date: 10. பெப்ரவரி 1972) மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாடு அரசு ஆணை (G.O. No. 851, date: 9. மே 1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரமுயர்த்தப்பட்டது. தற்போது 2023 இந்நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன. தேனியின் புறநகர் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, பூதிபுரம், அரண்மனைப்புதூர், முல்லைநகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி போன்றவைகளை சேர்த்தால் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும். [1]
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள்95.04% ஆக இருக்கின்றனர். அதையடுத்து முஸ்லிம்கள் 3.18%, கிறிஸ்தவர்கள் 1.63%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, மற்றவர்கள் 0.01%, மதம் குறிப்பிடாதவர் 0.12% ஆகவும் உள்ளனர்.[2]
கலாச்சாரம்
[தொகு]தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும். இது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை அணை உள்ளிட்ட ஆறுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு சுருலி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி மற்றும் மேகமலை நீர்வீழ்ச்சி என பல பிரபலமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இது கொடைக்கானல், தேக்கடி, மேகமலை, மூணார், கும்பக்கரை, சோத்துப்பாறை மற்றும் வைகை அணை போன்ற பல சுற்றுலா தலங்களால் சூழப்பட்டுள்ளது. தேனியின் அழகிய சூழல் என்பதால், இது தமிழ் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாகும். தேக்கடி வனவிலங்கு சரணாலயமானது, கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் எல்லையில் அமைந்துள்ளது.
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை இம்மாவட்டத்தில் கொண்டாடப்படும், முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
[தொகு]தேனி - அல்லி நகரம் நகராட்சி 33 நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்நகராட்சியின் நகரமன்றத் தலைவராக எஸ். முருகேசன் என்பவரும், 33 நிருவாகப் பிரிவுகளுக்கும், உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.[சான்று தேவை]
இலக்கியத் தலைநகரம்
[தொகு]ஒரு இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்த ஊர்? என்கிற கேள்விக்கு கவிஞர் ஜெயபாஸ்கரன், “எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ்நாட்டின் "இலக்கியத் தலைநகரம்' என்று ஒரு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார்.
போக்குவரத்து
[தொகு]பேருந்து போக்குவரத்து
[தொகு]தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான காமராசர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கம்பம், போடிநாயக்கனூர், கோட்டயம் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துநிலையத்திற்கு அதிகமான பேருந்துகள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, தேனி புறவழிச்சாலையில் கட்டி முடிக்கப்பட்டது. 2014ம் வருடத்திலிருந்து இப்புதிய பேருந்து நிலையம், 'கர்னல் பென்னிகுயிக் பேருந்து நிலையம்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
தொடருந்து போக்குவரத்து
[தொகு]மதுரையிலிருந்து .- போடிநாயக்கனூர் செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடருந்து காலையிலும், இந்தப் பயணிகள் தொடருந்து மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடருந்து நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும், இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடருந்து வாரவிடுமுறை நாளான, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
வானூர்தி நிலையம்
[தொகு]இங்கிருந்து 77 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
கல்வி நிலையங்கள்
[தொகு]மேல்நிலைப் பள்ளிகள்
[தொகு]தேனி-அல்லிநகரம் நகராட்சியில், கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
- அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம்.
- நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- மேரி மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- தேனி கம்மவார் சங்க மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
உயர்நிலைப் பள்ளிகள்
[தொகு]தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
- என்.ஏ.கொண்டுராசா நினைவு உயர்நிலைப் பள்ளி, தேனி.
- ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, தேனி.
- பத்மநாபா உயர்நிலைப் பள்ளி, தேனி.
- பாக்யா மெட்ரிக் பள்ளி, அல்லிநகரம்.
தொழிற்பயிற்சி நிலையம்
[தொகு]- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
வழிபாட்டு தலங்கள்
[தொகு]கோயில்கள்
[தொகு]இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
- வீரப்ப அய்யனார் கோயில்
- பெத்தாட்சி விநாயகர் கோயில்
- கணேச கந்த பெருமாள் கோயில்
- பத்திரகாளியம்மன் கோயில்
- வரசித்தி விநாயகர் கோயில்
- இரட்டை விநாயகர் கோயில்
- தர்மாபுரி ஸ்ரீ காளியம்மன் கோயில்
- வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில்
தேவாலயங்கள்
[தொகு]இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
- வழிவிடு மாதா கோவில், லோயர்கேம்ப், குமுளி.
- அந்தோணியார் ஆலயம், கனவாய், உசிலம்பட்டி.
- விண்ணரசி ஆலயம், உத்தமபாளையம்.
பள்ளிவாசல்கள்
[தொகு]இங்கு இசுலாமிய சமயம் சார்ந்தவர்கள் தொழுகை நடத்துவதற்காக சில பள்ளிவாசல்கள் உள்ளன. அவை:
- மொஹையதீன் ஆண்டவர் மசூதி, அல்லிநகரம்.
- ரௌலத்துள் ஜன்னத் ஜும்மா மசூதி, வள்ளிநகர்,தேனி.
- மக்கா மசூதி,பங்களாமேடு, தேனி.
- அப்துல் அஜீஸ் ஜும்மா,போடி சாலை, கோடங்கிப்பட்டி.
- முகைதீன் ஆண்டவர் மசூதி, கூளையனுர்.
- தேனி பழைய மசூதி,பத்திரகாளிபுரம், தேனி.
- அல் மதீனா மசூதி,நானோ நகர், தேனி.
சிறப்புகள்
[தொகு]- தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும்.[சான்று தேவை] இந்த வாரச்சந்தை சனிக்கிழமை கூடுகிறது.
- தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை சனிக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- ஆர். முத்துராமன் - திரைப்பட நடிகர்
- பாரதிராஜா - திரைப்பட இயக்குனர்
- வைரமுத்து - திரைப்படப் பாடலாசிரியர்
- வையாபுரி - திரைப்பட நடிகர்
- செவ்வாழை ராசு - திரைப்பட நடிகர்
- தனுஷ் - திரைப்பட நடிகர்
- செல்வராகவன் - திரைப்பட இயக்குனர்
- பாலா - திரைப்பட இயக்குனர்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம் பரணிடப்பட்டது 2011-10-15 at the வந்தவழி இயந்திரம்