உள்ளடக்கத்துக்குச் செல்

மேகமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகமலை ஏரிப்பகுதி

தமிழ்நாட்டின், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது. சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை எளிதாக அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது. எரசக்கநாயக்கனூர் சீமைக்கு மேலே உள்ளது மேகமலை ஊராட்சி.

சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்[தொகு]

சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக 8 பிப்ரவரி 2021 அன்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.[1][2][3]

தனியார் நிறுவன உடமை[தொகு]

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகவும், இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதி தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைப்பகுதியின் சாலை உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்நிறுவனத்தால் இப்பாதையைச் சரிவர பராமரிக்க முடியாததால் சாலையின் பெரும்பகுதிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியின் சாலையைப் பராமரிக்க தேயிலைத் தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.

மேகமலைத் தேயிலைத் தோட்டம்

நீர்மின்சக்தி திட்டம்[தொகு]

இம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் ஊர் ஒன்று உள்ளது. இந்த ஊர் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நகரியம் எனும் அமைப்பிலிருந்தது. இம்மலைப்பகுதியில் வெண்ணியாறு, இரவங்கலூர், மகாராசாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இம்மலைப்பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் "சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம்" அமைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகமலை&oldid=3781997" இலிருந்து மீள்விக்கப்பட்டது