கந்தகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கந்தகா எனப்படும் குதிரையுடன் புத்தரின் சிலை
தெய்வீகத் தேரோட்டி சன்னாவுடன் கந்தகாவின் புடைப்புச் சிற்பம், 1897

கந்தகா (Kanthaka) பௌத்த புராணத்தின் படி, தெற்காசிய நாடான நேபாளத்தில் கபிலவஸ்து மாவட்டத்தில் திலௌராகோட் பகுதியில் இருந்த பதினெட்டு முழ நீளமுள்ள வெள்ளைக் குதிரையாகும். இது இளவரசர் சித்தார்த்தரின் குதிரையாக இருந்தது, பின்னர் அவர் கௌதம புத்தராக மாறி உலகத்தைத் துறப்பதற்கு முன் பௌத்த நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இக்குதிரையைப் பயன்படுத்தினார். சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, குதிரையும் இறந்தது.[1]

பின்னணி[தொகு]

மன்னன் சுத்தோதனரின் அரசவையில், கந்தகா மிகவும் திறமையான குதிரையாக இருந்தது. மேலும் பட்டத்து இளவரசர் சித்தார்த்தன் அரண்மனைக்கு வெளியே செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம் இக்குதிரையை பயன்படுத்தினார். சித்தார்த்தனை வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பதற்காக அவரது தந்தியால் ஆடம்பர அரண்மனைகள் கட்டப்பட்டன. சித்தார்த்தர் மனித துன்பங்களைப் பற்றி சிந்தித்தால் அரியணையைத் துறப்பார் என்று கணித்த துறவி அசிதரின் தீர்க்கதரிசனத்தின் காரணமாக இவ்வாறான மாளிகைகள் கட்டப்பட்டது. கந்தகா முதலில் சித்தார்த்தன் சாக்கிய இளவரசியான யசோதரையைத் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளில் இக்குதிரை விவரிக்கப்பட்டுள்ளது. சத்திரிய சாக்கியக் குலத்தின் பழக்கவழக்கங்களின்படி, ஒரு இளவரசன் குதிரை சவாரி, வில்வித்தை மற்றும் வாள்வீச்சு போன்ற போர்வீரர் தொடர்பான திறமைகளில் மற்ற அரச குடும்பங்களை தோற்கடித்து தனது தகுதியை நிரூபிக்க வேண்டும். கந்தகாவின் மீதேறி, சித்தார்த்தன் வில்வித்தையில் தனது உறவினரான தேவதத்தனையும், குதிரையேற்றப் போட்டியில் மற்றொரு உறவினரான அனுருத்தரையும், பின்னர் வாள் விளையாட்டில் ஒன்றுவிட்ட சகோதரர் நந்தனையும் தோற்கடித்தார்.

புத்தரின் ஞானோயதம்[தொகு]

இந்தக் குதிரை சித்தார்த்தரின் திருமணத்திற்குப் பிறகு, சன்னா என்ற தேரோட்டியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்தது. சித்தார்த்தர் கபிலவஸ்துவைச் சுற்றி வசித்து வந்த தனது குடிமக்களைச் சந்தித்தார். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;

  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
  2. ஒரு நோயாளி
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
  4. நாலாவதாக ஒரு முனிவன்

இது உலகத்தைத் துறக்கும் முடிவை அவருக்குள் தூண்டியது. சித்தார்த்தருக்கு வயதில் மூத்தவரும், நோய்வாய்ப்பட்டவருமான சன்னா, இறந்தவரின் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த காட்சிகளையும், இறுதியாக, ஆன்மீக வாழ்வுக்காக உலக வாழ்க்கையைத் துறந்த ஒரு துறவியையும் சித்தார்த்தருக்கு விளக்கினார்.

பின்னர், துறவியாக மாற இக்குதிரையைப் பயன்படுத்தி அரண்மனையை விட்டு வெளியேறினார். அரண்மனை காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். சித்தார்த்தன் தன்னை விட்டு விலகுவதை ஏற்க மறுத்த சன்னர் முதலில் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, சன்னா கந்தகாவை தேரில் கட்டி, [2] நகருக்கு வெளியேயுள்ள அனோமா ஆற்றின் ஓரத்தில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார். மௌத்த நூல்களின்படி, கந்தகா ஆற்றைக் கடக்க முடிந்தது. சன்னா தன்னை விட்டுச் செல்ல மறுத்ததால் சித்தார்த்தர் அவரை அரண்மனைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினார். பின்னர் அரண்மனைக்கு திரும்பிய சன்னா சித்தார்த்தனின் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் முடிகளை சுத்தோதனரிடம் திருப்பிக் கொடுத்தார்.[3]

குதிரையின் இறப்பு[தொகு]

பௌத்த நூல்களின்படி,கந்தகா பிராமணனாக மறுபிறவி எடுத்து கௌதம புத்தரின் தர்மப் பேச்சுக்களில் கலந்துகொண்டு ஞானம் பெற்றது. இதன் மரணம் அனோமா நதிக்கரையில் அல்லது கபிலவஸ்துவுக்குத் திரும்பும்போது நிகழ்ந்ததாகப் பலவிதமாக விவரிக்கப்படுகிறது. [3]

தூபிகளில், சிற்பங்கள் போன்ற பௌத்த கலைகளிலும் கந்தகாவைப் பற்றிய விளக்கம் பரவலாகக் காணப்படுகிறது. அமராவதியில் உள்ள பிரதான ஸ்தூபியில் சித்தார்த்தர் கபிலவஸ்துவை விட்டு காந்தகாவுடன் வெளியேறும் சித்திரம் தற்போது இருக்கும் பழமையான சித்தரிப்பு ஆகும். [4] இத்தகைய சித்தரிப்புகள் லண்டன் மற்றும் கல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. Malasekera, G. P. (1996). Encyclopaedia of Buddhism. Government of Sri Lanka. 
  2. "Home".
  3. 3.0 3.1 Malasekera, G. P. (1996). Encyclopaedia of Buddhism. Government of Sri Lanka. 
  4. Source needed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தகா&oldid=3539868" இலிருந்து மீள்விக்கப்பட்டது