உள்ளடக்கத்துக்குச் செல்

புத்திந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்திந்து நெறி அல்லது புதிய வேதாந்தம் என்பது (ஞால இந்துநெறி, மறுமலர் இந்துநெறி, நவீன இந்துநெறி,புதுவேதாந்த நெறி - neo-Hinduism,[1], Global Hinduism[2], Hindu modernism,[3][4] Neo-Vedanta[5] என்றெல்லாம் அழைக்கப்படுவது) சமகாலத்தில் உருவாகியுள்ள மறுமலர்ச்சி இந்து அமைப்புக்கள், இந்து நிறுவனங்கள், இந்து சிந்தனைகள் என்பவற்றை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும். இந்துப் பண்பாட்டுடன், மேலைத்தேய மரபுகளும் அறிவியலும் ஊடாடியதன் விளைவுகளின் கூட்டமைப்பாக புத்திந்து நெறி விளங்குகின்றது.[6]பொதுவாக, சைவம், வைணவம் சாக்தம், சுமார்த்தம் எனும் நான்கு இந்துக் கிளைநெறிகளுடன், இன்றைய இந்து சமயத்தின் ஐந்தாவது கிளைநெறியாக, புத்திந்து நெறியைக் கொள்ள முடியும்.[7]

வரலாறு

[தொகு]

இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன் ஏற்பட்ட, பண்பாட்டுப் புரட்சியுடன், பொ.பி 19ஆம் நூற்றாண்டிலேயே புத்திந்து நெறிக்கான துவக்கம் உருவாகி வந்தது. பிரம்ம சமாசத்தை துவக்கிய ராம் மோகன் ராய், விவேகானந்தர், மகான் அரவிந்தர், இரமண முனிவர் ஆகியோரை இந்நெறியின் ஆரம்ப கால காரணகர்த்தர்கள் எனலாம். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இதன் தோற்றம் அமைந்ததால், மேலைச்சிந்தனைகளுடன் இது உரையாட வேண்டிய தேவை தவிர்க்கமுடியாததாயிற்று. மரபார்ந்த இந்து சமயத்து்டன் ஏற்பட்ட இந்த உரையாடல்களை அடுத்து, பல்வேறு மேலைநாடுகளில் உருவான புதுப்புது ஆன்மிக அமைப்புகளும், தத்துவப் பரப்புகை நிறுவனங்களும் இந்தப் புத்திந்து அமைப்புக்களை உருவாக்கின.

"புதுவேதாந்தம்" என்ற சொல்லாடலானது, முதலில் "பிரயேந்திர நாத் சீல்" (1864-1938) எனும் வங்காள அறிஞராலும், "புத்திந்து" என்ற சொல்லாட்சி "ராபர்ட் அண்டோன்" (1914-1981) எனும் கிறித்துவ மறைபரப்புநராலும் எடுத்தாளப்பட்டன.[8]

இயல்புகள்

[தொகு]
யோகம் பயிலும் மேலைநாட்டினர்.யோகத்தையொத்த ஆன்மிகப் பயிற்சி ஒன்றில் அல்லது பலவற்றில் ஈடுபாடு வேண்டுமென்பது புத்திந்துக்களின் கொள்கைகளில் ஒன்று.

கொள்கையிலும் தத்துவங்களிலும் முற்றிலும் வேறுபட்ட பல அமைப்புக்களின் கூட்டுத் தொகுப்பாக, புத்திந்து விளங்குவதால், இதற்கென சிறப்பியல்புகள் கூறுவது கடினம். இவற்றில் பெரும்பாலானவை, மரபார்ந்த இந்து சமயத்தின் புதுமைப்படுத்திய வடிவங்களாக விளங்குகின்றன. உதாரணமாக, சைவ நெறியை முன்னிலைப்படுத்தும் ஹவாய் சைவ சித்தாந்த மடத்தையும், கௌடிய வைணவத்தை முன்னிலைப்படுத்தும் இஸ்கான் அமைப்பையும் சொல்லலாம்.

புத்திந்து அமைப்புக்கள் பெரும்பாலும் தமக்கென ஒரு குருவை, அல்லது குரு பரம்பரையைக் கொண்டிருக்கின்றன.[9] சிலவேளைகளில், இந்து சமயம் மரபாக ஏற்றுக்கொள்ளும் மூலநூல்களைத் தவிர்த்து, அக்குருவின் அருள்மொழிகளையே இவற்றின் பின்பற்றுநர்கள் மையமாகக் கொள்வர். இன்னும் சிலர், அக்குருதேவரை இறை அவதாரமாகவும், வழிபாட்டு மூர்த்தியாகவும் வளர்த்தெடுப்பதுண்டு.[10] மரபார்ந்த இந்து நெறியைக் கடைப்பிடிப்போரை விட, புத்திந்துக்கள் சமூக சேவையிலும், இறை வழிபாட்டிலும் தீவிரமாக ஈடுபடுவர். எம்மதமும் சம்மதம் என்பது இவர்களது முக்கியமான கொள்கைகளுள் ஒன்று. சாதியோ, இன - தேச வேறுபாடுகளோ தம்வழியில் செல்வோரிடம் இல்லை என்பதை இவர்கள் மீள மீள வலியுறுத்துவர். யோகாசனம், தியானம் அல்லது அதையொத்த ஆன்மிகப் பயிற்சி ஒன்றில் அல்லது பலவற்றில் ஈடுபாடும் இவர்கள் மத்தியில் காணப்படும்.இவை, புத்திந்து ஒருவனின் பொதுவான இயல்புகளாகும்.[11]

பெரும்பாலான புத்திந்து அமைப்புக்கள், மேலை நாடுகளிலேயே முற்றுமுழுதாக இயங்குகின்றன. எனினும் இன்றும் சில அமைப்புகள், அவற்றின் தாய்மண்ணான பாரதத்துடன் தொடர்புகளைப் பேணுகின்றன.

புத்திந்து அமைப்புக்கள்

[தொகு]
அமெரிக்க யுதா மாநில இஸ்கான் ஆலயத்தில் நிகழும் வண்ணமாடு விழா.

முக்கியமான சில புத்திந்து அமைப்புக்களின் பட்டியல் வருமாறு:

விமர்சனங்கள்

[தொகு]

புத்திந்து அமைப்புக்கள், மரபார்ந்த இந்துநெறியின் அடிப்படையான சில பழைமைவாதக் கருத்துக்களை நிராகரிப்பதால், அவை மரபுவழி இந்துக்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.[18][19] மேலைக் கிறித்துவத்தின் மாறுபட்ட வடிவங்களாக, புத்திந்து அமைப்புக்கள் மரபார்ந்த இந்து நெறியைச் சீரழிப்பதாக, அவை மீது கடும் விமர்சனம் வைக்கப்படுகின்றது.[20] யோகம் போன்ற இந்து சமயத்தின் கொடைகளை அடையாளமழித்து, அவற்றுக்கு உலகப் பொது அடையாளம் வழங்கி, மேலைத்தேய ஆதிக்கவாதத்தின் அங்கங்களாக அவற்றைப் பயன்படுத்துதல் என்பது அவற்றில் முதன்மையானது. மேலும் சில, தம் குருதேவருக்கு வழங்கும் அதீத முன்னுரிமை காரணமாக, தம் சிறப்புகளை இழக்கின்றன. சாதாரண வழக்கில் ஏற்றுக்கொள்ளப்படாத தாந்திரீக நடைமுறைகளை முயல்வதாகக் கூறிக்கொண்டு, தம் பின்பற்றுநர்களை, தனிப்பட்ட இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதாக, புத்திந்து அமைப்புக்களின் மேனிலை நடத்துநர்கள் மீது எப்போதும் விமர்சனம் இருந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் சர்ச்சைக்குள்ளான சுவாமி நித்தியானந்தா விவகாரம் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணைகள்

[தொகு]
  1. King 2002, ப. 93.
  2. Flood 1996, ப. 265.
  3. Flood 1996, ப. 258.
    • Rinehart, Robin (2004), "Chapter Six Contemporary Hindu Thought", Contemporary Hinduism: Ritual, Culture, and Practice, ABC-CLIO, p. 207, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-576-07905-8
  4. King 2002, ப. 135.
  5. Halbfass 2007a, ப. 307.
  6. 12.0 12.1 Altglas, Véronique (2014), From Yoga to Kabbalah: Religious Exoticism and the Logics of Bricolage, Oxford University Press, p. 393, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-199-99763-3
  7. Neusner, Jacob (2009), World Religions in America, An Introduction (Fourth Edition ed.), Westminster John Knox Press, p. 193, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-611-64047-2 {{citation}}: |edition= has extra text (help)
  8. Malhotra, Rajiv (2014), "Old Indic Formations", Indra’s Net: Defending Hinduism’s, HarperCollins Publishers India, p. 139, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-351-36248-7
  9. Frykenberg, Robert Eric (2003), "The Impact of the Protestant Missionary Movement on Hindu SelfUnderstanding", Christians and Missionaries in India: Cross-cultural Communication Since 1500, Psychology Press, p. 178, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-700-71600-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்திந்து&oldid=3913738" இலிருந்து மீள்விக்கப்பட்டது