உள்ளடக்கத்துக்குச் செல்

திருபுவனம்

ஆள்கூறுகள்: 10°35′N 79°16′E / 10.59°N 79.26°E / 10.59; 79.26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருபுவனம்
—  பேரூராட்சி  —
திருபுவனம்
அமைவிடம்: திருபுவனம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°35′N 79°16′E / 10.59°N 79.26°E / 10.59; 79.26
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் திருவிடைமருதூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர் அமுதவல்லி கோவிந்தன்
மக்கள் தொகை

அடர்த்தி

14,989 (2011)

2,677/km2 (6,933/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.6 சதுர கிலோமீட்டர்கள் (2.2 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.thirubuvanam.com


திருபுவனம் (Thirubuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சி பகுதியில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் நெசவுத் தொழிலை சார்ந்தவர்களாவர். ஏனையோர் விவசாய கூலிகள் ஆவார். இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும். மேலும் புகழ்பெற்ற சரபேசுவரர் கோயில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

தஞ்சாவூரிலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ள திருபுவனம் பேரூராட்சிக்கு அருகில் கும்பகோணம் 7 கிமீ, திருப்பனந்தாள் 20 கிமீ, திருநாகேஸ்வரம் 4 கிமீ, மயிலாடுதுறை 30 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

5.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பெரூராட்சியில் 3,807 வீடுகளும், 14,989 மக்களும் வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]

ஊர் நிர்மாணம்

[தொகு]

சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான். அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே இராசேந்திரச் சோழன் இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.[6]

ஆலயஅமைப்பு

[தொகு]
கம்பகேசுவரர் திருக்கோயிலின் கோபுரம்.

இங்கு கம்பகரேஸ்வரர்க்கு ஆலயம் அமைந்துள்ளது. உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.

திருநீலக்குடி சப்தஸ்தானம்

[தொகு]

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். [7]

சௌராட்டிரர்

[தொகு]

பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த சௌராட்டிர தேசத்திலிருந்து புலம் பெயர்ந்த சௌராஷ்டிரா சமூக நெசவாளர்கள் பெருமளவில் இப்பகுதியில் குடியேறினர். இவர்களின் வழிபாட்டிற்காக கோதண்டராமஸ்வாமி ஆலயத்தை அமைத்தனர். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும், விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர் நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

பிறசமூக மக்கள்

[தொகு]

சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், வன்னியர்,ஆதி திராவிடர், செங்குந்தர், நாயுடு, பிள்ளைமார், இசை வேளாளர், யாதவர், பிராமணர், மருத்துவர், விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.

வழிபாட்டுதலங்கள்

[தொகு]

இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன.

பள்ளிகள்

[தொகு]

மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஓர் அரசினர் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன. மேலும் அன்னை ஆயிஷா(ரலி)பெண்கள் அரபி மதரஸாவும் செயல்பட்டுவருகிறது.

திகோ சில்க்ஸ்

[தொகு]

இங்கு நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். இந்த ஆண்டு மட்டும் முப்பத்தி நான்கு கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது.[8]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. [http://www.townpanchayat.in/thirubuvanam திருபுவனம் பேரூராட்சியின் இணையதளம்]
  5. "Thirupuvanam Population Census 2011". பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2015.
  6. தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19
  7. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
  8. தினமணி இணையத்தளம்

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருபுவனம்&oldid=3495273" இலிருந்து மீள்விக்கப்பட்டது