உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவிசைப்பா பாடல் பெற்ற
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் is located in தமிழ் நாடு
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பிரகதீசுவரர் கோயில், தஞ்சாவூர்
புவியியல் ஆள்கூற்று:10°46′58″N 79°07′54″E / 10.782800°N 79.131800°E / 10.782800; 79.131800
பெயர்
புராண பெயர்(கள்):தஞ்சாவூர் பெருவுடையார் கோவில்
பெயர்:தஞ்சைப் பெருவுடையார் கோயில்
அமைவிடம்
ஊர்:தஞ்சாவூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பெருவுடையார், பிரகதீசுவரர்
உற்சவர்:தியாகராசர்
தாயார்:பெரியநாயகி, பிரகன்நாயகி
உற்சவர் தாயார்:கமலாம்பிகை
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:சிவகங்கை தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா
பாடல்
பாடல் வகை:திருவிசைப்பா
பாடியவர்கள்:கருவூரார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:தமிழ் கல்வெட்டுகள்
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகள்
நிறுவிய நாள்:பொ.ஊ.-10 ஆம் நூற்றாண்டு
கட்டப்பட்ட நாள்:7 ஆண்டுகள் (பொ.ஊ.-1003 முதல் பொ.ஊ.-1010 வரை)
அமைத்தவர்:முதலாம் இராசராச சோழன்
கட்டடக் கலைஞர்:இராசராச குஞ்சரமல்ல பெருந்தச்சன்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்,[1] தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2] பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3]

இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் இயுனெசுகோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பிரகதீசுவரர் ஆலயம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைகலாச்சாரம் சார்
ஒப்பளவுii, iii
உசாத்துணை250
UNESCO regionஆசியா-பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11வது தொடர்)

தஞ்சாவூர் அரண்மனை தேவத்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[8]

நந்தி
தஞ்சாவூர் எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

சொல்லிலக்கணம்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.[9] இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்,[10] பெரிய கோயில், இராசராசேசுவரன் கோயில், இராசராசேச்சரம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராசராசேச்சரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[11] 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[சான்று தேவை]

வரலாறு

தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த முதலாம் இராசராச சோழன் சிலை

முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார்.[12] இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராசராச சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (பொ.ஊ. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (பொ.ஊ. 1009–1010).[6][13] கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.[14] இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.[15]

தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.[16]

இடைக்காலச் சோழர்கள்

பொ.ஊ. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.

பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்

காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் இராசராசனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராசராசன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராச சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.[சான்று தேவை]

திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராசராச சோழனின் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு.

கட்டமைப்பு

இராசராச சோழன் கருவூர் தேவருடன்[சான்று தேவை]

இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.[17] ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,[18] இலேபட்சி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.[19] முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது.[18] 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.[18] பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.[18] தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.[20]

கோயில் அமைப்பு

கோயில்வளாக உள்ளமைப்புப்படம்

முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேசுவரத்தில் கட்டப்பட்ட இலிங்கராசர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராசராசேச்சரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.

வடிவமைப்பு

கோட்பாடு:1

எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.

கோட்பாடு:2

எல்லோரா குகைகள் (பொ.ஊ. 700) எப்படி ஒரு பெரிய மலையை குடைந்து கட்டப்பட்டதோ; அது போல் தஞ்சை பெரிய கோவில் விமானமும் (பொ.ஊ. 1000) ஒரு பெரிய மலையை அந்த கோபுர வடிவத்திற்கு வெட்டப்பட்டபின், நுட்பமாக சிற்பங்கள் அந்த விமானத்தில்மேல் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

விமானம்

தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்

முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.

இடைச்சிக் கல்

தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை[சான்று தேவை] கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை இராசகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது.

நந்தி மண்டபம்

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராசராசனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின் தஞ்சை நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராசராசன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.[21]

சந்நிதிகள்

சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேசுவரர், அம்மன், நடராசர், வராகி, முருகர், விநாயகர் மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.

  • பெருவுடையார் சந்நிதி -பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராசராச சோழன் இராசராசீச்சரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை.
  • பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.
  • கருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.
  • வராகி அம்மன் சந்நிதி - இது சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது.

கல்வெட்டுக்கள்

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் அருண்மொழி வர்மன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று.

"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...."

தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.

கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.

விழாக்கள்

  • பிரம்மோற்சவம் -
  • இராசராசசோழன் பிறந்தநாள் விழா
  • அன்னாபிசேகம்
  • திருவாதிரை
  • ஆடிப்பூரம்
  • கார்த்திகை
  • பிரதோசம்
  • சிவராத்திரி
  • தேரோட்டம்

தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு

தஞ்சைக் கோயிலின் தோற்றம்
தஞ்சைக் கோயிலின் தோற்றம்
  • இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது.[22]
  • இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராசராச சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்
  • இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை இராசராசன் எழுப்பினார்.
  • இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது
  • கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
  • இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.[12]
  • தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திருபுவனம் கம்பகரேசுவரர் கோயில் ஆகியவையாகும்.
  • 1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை

தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் இராசராச சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.

ஆயிரமாண்டு நிறைவு விழா

சதயத்திருவிழாத் தோற்றம்

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.

மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ். எஸ். பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் இராசராசன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதசுவர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.[23]

2020 குடமுழுக்கு

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 5 பிப்ரவரி, 2020 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இராசகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது. தமிழ், சமசுகிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.[24][25]

கருத்துகளும் உண்மைகளும்

  • தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது.[26]
  • விமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறான தகவலாகும். ஒரே கல்லால் கட்டப்படாமல், தனித்தனி கற்களை ஆரஞ்சு பழத்தின் சுளைபோல் இணைத்து விமானக் கோபுரத்தைக் கட்டியுள்ளனர்.[27]

திருமேனிகள்

செப்புபட்டையங்கள், திருச்சுற்று மாளிகை மற்றும் கோயிலை சுற்றியுள்ள கல்வெட்டுகளிலிருந்து கோயிலுக்கு கொடுக்கப்பட்ட திருமேனிகளை கல்வெட்டு அறிஞர்கள் பட்டியல் இட்டுள்ளனர். அவையாவன:

  1. நம்பியாரூரார்
  2. நங்கை பரவையார்
  3. திருநாவுக்கரசர்
  4. திருஞான சம்பந்தர்
  5. பெரிய பெருமாள்(இராஜராஜர் சிலை)
  6. பெரிய பெருமாள் நம்பிராட்டியார் (இராஜராஜர் மனைவி ஒலோகமாதேவி சிலை)
  7. சந்திரசேகர தேவர்
  8. ஷேத்ரபாலர்
  9. ஆடுகின்ற பைரவ மூர்த்தி
  10. சிறுத்தொண்ட நம்பி
  11. திருவெண்காட்டு நங்கை
  12. சீராளதேவர்
  13. ஆடவல்லான்
  14. ஆடவல்லான் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி
  15. மிலாடுடையார்
  16. ரிஷபவாகனதேவர்
  17. ரிஷபவாகனதேவர் நம்பிராட்டியார்
  18. ரிஷபம்
  19. கணபதி
  20. இலிங்கபுராண தேவர்
  21. சிவபெருமானின் கல்யாண சுந்தரர் திருமேனி,
  22. தஞ்சை அழகர்,
  23. தஞ்சை அழகர் நம்பிராட்டியார்,
  24. கணபதி(நின்ற நிலை),
  25. பதஞ்சலித் தேவர்
  26. ஆடவல்லார் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
  27. தட்சிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி
  28. தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி
  29. பொன்மாளிகை துஞ்சியதேவர் (சுந்தர சோழர் சிலை)
  30. வானவன் மாதேவி சிலை (குந்தவை தம் அம்மையாக எழுந்தருள்வித்த திருமேனி)
  31. பிச்சத்தேவர் திருமேனி
  32. சண்டேச பிரதாச தேவர்
  33. பஞ்சதேக மூர்த்தி [28]
  34. தட்சிணாமூர்த்தி
  35. சண்டேசர்
  36. பிருங்கீசர்
  37. சூர்ய தேவர்
  38. கிராதார்ச்சுன தேவர் சிலை
  39. காளபிடாரி திருமேனி
  40. உமாஸகிதர்
  41. உமா பரமேஸ்வரி
  42. கணபதி
  43. சுப்பிரமண்யர்
  44. வில்லானைக்கு குருக்களாக எழுந்தருள்வித்த திருமேனி
  45. துர்க்கா பரமேஸ்வரி

படங்கள்

மேலும் பார்க்க

உசாத்துணை

  1. Keay, John (2000). India, a History. New York, United States: Harper Collins Publishers. pp. xix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-638784-5.
  2. "Endowments to the Temple". Archaeological Survey of India.
  3. ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.
  4. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 185.
  5. http://whc.unesco.org/en/list/250
  6. 6.0 6.1 "Great Living Chola Temples". UNESCO World Heritage Centre. 2004.
  7. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், ப.230-235, வ.எண்.1
  8. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  9. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009
  10. தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009
  11. "Temples of Tamil Nadu, Works of Art". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  12. 12.0 12.1 Encyclopaedia of Political Parties By Ralhan, O. P.
  13. "The Chola Dynasty 300 B.C. to 1250 A.D." kamat.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2008.
  14. Thapar 2004, pp.43, 52–53
  15. Mitchell 1988, pp. 145–148
  16. "Great Living Chola Temples". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 21 January 2008.
  17. Man 1999, p. 104
  18. 18.0 18.1 18.2 18.3 Various 2007, pp. 65–66
  19. V., Meena (1974). Temples in South India (1st ed.). Kanniyakumari: Harikumar Arts. pp. 23–24.
  20. Branfoot, Crispin. Imperial Frontiers: Building Sacred Space in Sixteenth-Century South India. 90. The Art Bulletin. p. 185. (subscription required)
  21. சோழர் வரலாறு - டாக்டர் மா.இராசமாணிக்கனார் 1985 பூரம் பதிப்பகம், சனவரி 13 2006.
  22. Middle Chola Temples, S.R.Balasubrahmanyam
  23. பெரியகோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சிகள்
  24. "`ஆயிரம் ஆண்டு அதிசயம்; இருமொழிகளில் குடமுழுக்கு!'- தஞ்சைப் பெரிய கோயில் விழா கோலாகலம்".விகடன் (05 பிப்ரவரி, 2020)
  25. "தமிழ் மந்திரம் ஒலிக்க கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு!".புதிய தலைமுறை(05 பிப்ரவரி, 2020)
  26. கல்லலிலே கலைவண்ணம் கண்டான் வலைதளம்
  27. "தஞ்சை பெரியகோயில் குறித்த நம்பிக்கைகள்". ஆனந்த விகடன்.
  28. ராஜராஜ சோழன் என்கிற சிவபாத சேகரன்! தஞ்சை பெரிய கோயிலில் சதயப் பெருவிழா! - வி. ராம்ஜி : 28 அக்டோபர், 2017 - இந்து தமிழ்திசை நாளேடு

• குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010
• தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Brihadisvara Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.