உள்ளடக்கத்துக்குச் செல்

தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

தாராசுரம் ஆவுடையநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தாராசுரத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] மூலவர் ஆத்மநாதர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் தாராசுரத்தில் உள்ள கம்மாளர் தெருவில் அமைந்துள்ளது. கோயிலின் வாயிலில் ஆவுடைநாதசுவாமி காமாட்சி அம்மன் ஆலயம் என்ற பெயர்ப்பலகை காணப்படுகிறது.

இரு கோயில்கள்[தொகு]

இக்கோயில் வளாகத்தில் காமாட்சி அம்மன் கோயிலும், ஆவுடைநாதர் கோயிலும் உள்ளன.

காமாட்சி அம்மன் கோயில்[தொகு]

காமாட்சி அம்மன் விமானம்

முதன்மை நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தியும் உள்ளன. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறையில் காமாட்சி அம்மன் உள்ளார்.

ஆவுடைநாதர் கோயில்[தொகு]

ஆவுடைநாதர் (வலது), இறைவி (இடது)விமானங்கள், நடுவில் சண்டிகேஸ்வரர் சன்னதி

காமாட்சி அம்மன் சன்னதியின் இடப்புறத்தில் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆவுடைநாதர் என்றும் ஆத்மநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் கோயில் சன்னதியின் வாயிலின் இரு புறமும் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் உள்ளனர். உள்ளே பலிபீடமும், நந்தியும் உள்ளன. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் லிங்கத்திருமேனியாக மூலவர் உள்ளார். மூலவர் சன்னதியின் வலப்புறத்தில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியிலும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. ஆவுடைநாதர் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர் . திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், லிங்க பானம், பைரவர் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சிவன் கோயில் வளாகத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன.

கும்பகோணம் சப்தஸ்தானம்[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலைஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[2] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.[3] விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

திருப்பணி[தொகு]

24.1.2016 காலை மீனாட்சி என்கிற சிவசக்தி அம்பாள் உடனுறை ஆவுடைநாதர் மற்றும் காமாட்சியம்மன் கோயில் விமானங்களுக்கான திருப்பணி தொடங்கப்படுவதற்கான அறிக்கை காணப்பட்டது. கோயிலில் திருப்பணி ஆரம்பித்துள்ளதைக் காணமுடிந்தது.

மேற்கோள்கள்[தொகு]