கூடலூர் சொக்கநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

கூடலூர் சொக்கநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூருக்கு அருகே வெண்ணாற்றங்கரையில் கூடலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் சொக்கநாதர் ஆவார். இறைவி மீனாட்சி என்றழைக்கப்படுகிறார்.

அமைப்பு[தொகு]

மூலவர் விமானமும், இறைவி விமானமும்

மூலவர் மேற்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். அருகே நந்தியும், பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கன்னி மூல விநாயகர், பாலசுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். சூரியன், சனீசுவரர், பைரவர், நாகம் ஆகியோர் உள்ளனர். மூலவருக்கு இடது புறம் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில், மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் நடராஜர் மண்டபம் உள்ளது. இக்கோயில் கரந்தை சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய கோயில்களில் ஒன்றாகும்.

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்[தொகு]

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோயில்களும் ஒன்றாகும். கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் என்பதானது கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றாங்கரை தஞ்சபுரீசுவரர் கோயில், திட்டை வசிஷ்டேசுவரர் கோயில், கூடலூர் சொக்கநாதர் கோயில், கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில், பூமால்ராவுத்தர் தெருவிலுள்ள வைத்தியநாதேசுவரர் கோயில் ஆகிய கோயில்களை உள்ளடக்கியதாகும். கரந்தட்டாங்குடி வசிஷ்டேஸ்வரர் கோயிலில் கிளம்புகின்ற கண்ணாடிப் பல்லக்கு மிகவும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டு பிற பல்லக்குகளுடன் அனைத்து சப்தஸ்தானங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியில் கரந்தட்டாங்குடியை வந்தடையும். பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.

சிறப்பு[தொகு]

அநபாய சோழன் ஆட்சியின்போது பஞ்சம் வந்ததாகவும், அதனை நீக்குவதற்காக தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் முன்பு வழிபட்டு நின்றபோது, கூடலூருக்குப் போகும்படி இறைவனின் ஆணை கிடைக்கவே, மதுரைக்குச் சென்று அங்கிருந்த பாண்டிய மன்னனைக் கலந்து ஆலோசித்தான்.அவனுடைய குறையைத் தீர்க்கும் வகையில் மதுரை சொக்கநாதர் ஆனி மாதம் உத்திர நாளில் இங்கு வந்து அருள் தந்தார்.[1]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் சித்திரை தமிழ் வருடப்பிறப்பும், சித்ரா பௌர்ணமியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். இங்குள்ள பைரவருக்கு ஒவ்வொரு அஷ்டமியிலும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சிறப்புப் புசைகள் நடைபெறுகின்றன. ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகின்ற பஞ்ச ஆதித்ய தலங்களும் இக்கோயிலும் ஒன்றாகும்.வைகாசி, மாசி மாதங்களில் மாலை வேளையில் சூரிய ஒளி மூலவரின் மீது விழுவதைக் காணலாம். [1]

மேற்கோள்கள்[தொகு]