ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை
தேவாரம் பாடல் பெற்ற புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்புள்ளமங்கை, ஆலந்துறை |
பெயர்: | புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | வெள்ளாளர் பசுபதிகோயில் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதிநாதர். |
தாயார்: | அல்லியங்கோதை, சௌந்தரநாயகி. |
தல விருட்சம்: | ஆல் (ஆலமரம்) |
தீர்த்தம்: | திருக்குளம், தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 16ஆவது சிவத்தலமாகும்.
இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. [1] இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.
தல வரலாறு
[தொகு]- ஊர்ப்பெயர் பண்டை நாளில் 'புள்ள மங்கை' என்றும், கோயிற் பெயர் 'ஆலந்துறை' என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி 'பசுபதி கோயில்' என்று வழங்குகின்றது. 'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.
- குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.
- அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.
- பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.
இறைவன், இறைவி
[தொகு]இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்துமகாதேவர். இறைவி ஸ்ரீஅல்லியங்கோதை, சௌந்தரநாயகி.
தல சிறப்புகள்
[தொகு]- அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.
- விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
- இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார்.
- இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
- இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.
- முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.
- சம்பந்தர் இப்பாட்டில் 'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.
திருத்தலப் பாடல்கள்
[தொகு]இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே..
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்
[தொகு]சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. [1]
- சக்கராப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
- அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
- சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
- நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
- பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
- தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
- புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம்
- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம் பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2014-12-25 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]மிகச்சிறிய, நுட்பமான சிற்பங்கள்
[தொகு]பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 16 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 16 |