பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°44′45″N 79°25′03″E / 10.7457°N 79.4175°E / 10.7457; 79.4175
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பூவனூர்
பெயர்:திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பூவனூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர், புஷ்பவன நாதர்.
தாயார்:கற்பகவல்லி,
ராஜ ராஜேஸ்வரி
(தனித்தனி சந்நிதிகள்)
தல விருட்சம்:பலா மரம்
தீர்த்தம்:க்ஷீரபுஷ்கரிணி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் (Chathuranga Vallabhanathar Temple) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவத்தலமாகும். இத்தலம் அப்பர் பாடல் பெற்றதாகும். அப்பர், தேவாரப் பதிகத்தில் ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.[1] உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருப்பதிகக் கோவை மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆகியவற்றில் இத்தலம் போற்றிக் கூறப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

திருவாரூர், நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் பூவனூர் ஊரில் இறங்கி, பாமினி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[2]

அமைப்பு[தொகு]

இக்கோயில் ராஜ கோபுரம், திருச்சுற்று, மூலவர் கருவறை உள்ளிட்டவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவராக இலிங்கத் திருமேனி வடிவில் சதுரங்க வல்லபநாதர் உள்ளார். மூலவரின் வலது புறத்தில் தியாகராஜர் சன்னதி உள்ளது. மூலவரின் இடது புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது.

ராஜ கோபுரம்[தொகு]

கோயிலுக்கு முன்பாக எதிர் புறத்தில் குளம் உள்ளது. கோயிலின் வாயிலில் ராஜ கோபுரம் அமைந்துள்ளது. அந்த ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அதற்கு அடுத்தபடியாக கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன.

சாமுண்டீஸ்வரி சன்னதி[தொகு]

கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலையை அடுத்து இங்கு சாமுண்டீஸ்வரி கோயில் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். சாமுண்டீஸ்வரி இங்கு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். [1]கோயிலின் வலப்புறத்தில் சாமுண்டீஸ்வரிக்காக ஒரு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதி வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இச்சன்னதி முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. எலிக்கடி மற்றும் பிற கடிகளால் பாதிக்கப்பட்டு துன்புறுவோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி மன்னன் சன்னதியின் முன்பாக கையில் வேர் கட்டிக்கொண்டு கோயிலின் முன்பாக அமைந்துள்ள பாற்குளம் என்ற பெயர் பெற்ற கோயில் குளத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.

இரு அம்மன் சன்னதிகள்[தொகு]

கோயிலின் இடது புறத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அந்த சன்னதியை ஒட்டி அடுத்ததாக கற்பகவல்லி அம்மன் சன்னதி உள்ளது அதுவும் தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இரு சன்னதிகளும் தனித்தனியாக கருவறை, விமானம் ஆகியவற்றோடு அமைந்துள்ளன.

திருச்சுற்று[தொகு]

மூலவரை வணங்கிவிட்டு திருச்சுற்றில் வரும்போது அங்கு பிரதான விநாயகர், லெட்சுமி நாராயணர், காசி விசுவநாதர் விசாலாட்சி (அவர்களுக்கு முன்பாக நந்தி, பலிபீடம்), கால பைரவர், பசுபதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், நவக்கிரகம் ஆகியோரின் சன்னதிகளைக் காண முடியும். அதே திருச்சுற்றில் சாஸ்தா, சம்பந்தர், மாணிக்கவாசகர், நாகர், திருநாவுக்கரசர், கோதண்டராமர், வசுசேன மன்னர், விசேஷ லிங்கம், அகத்தியர், அய்யனார், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் தனியாக ஒரு சன்னதியில் உள்ளார். மூலவரான சதுரங்க வல்லபநாதர் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மேற்கு நோக்கிய நிலையில் அண்ணாமலையார் உள்ளார். அண்ணாமைலையாரின் வலது புறத்தில் விஷ்ணு உள்ளார். இடது புறத்தில் பிரம்மா உள்ளார். கோஷ்டத்தில் வடக்கு நோக்கிய நிலையில் அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

வழிபட்டோர்[தொகு]

இத்தலத்தில் சுகப்பிரம்மரிசி மலர்வனம் வைத்து வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

தல வரலாறு[தொகு]

வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கொண்டு மணந்ததால் இத்தல இறைவனாருக்கு சதுரங்க வல்லபேசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.[3] இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவன் என்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு இறைவனுடன் வேண்டினார். இறைவனும் ராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆடினார். ஆட்டத்தில் இறைவன் வென்றார். பின்னர் தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அதனால் இறைவன் சதுரங்க வல்லபநாதர் என்றழைக்கப்படுகிறார். [4]இங்குள்ள சாமுண்டீசுவரி சன்னதி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு தொடக்க விழாவில்[தொகு]

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 28 சூலை 2022 அன்று 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளை துவக்கி வைத்து பேசிய போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்-பார்வதி தேவி குடிகொண்டுள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலைக் குறிப்பிட்டார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் கோயில், தினமலர் கோயில்கள்
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  3. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 256
  4. சதுரங்கம் விளையாடிய சிவனுக்கு தமிழகத்தில் கோயில்
  5. {https://www.dinamalar.com/news_detail.asp?id=3088891 சதுரங்க வல்லபநாதர் கோவிலை பற்றி பிரதமர் மோடி பேசியது எப்படி?]
  6. Tamil Nadu even has a temple for chess: Modi

வெளி இணைப்புகள்[தொகு]

  • பிரதமர் மோடி குறிப்பிட்ட சதுரங்க வல்லபநாதர் கோவில் (பூவனூர்), அம்மையும் அப்பனுமாய் சதுரங்கம் ஆடிய தலம் - காணொளி
  • "05.065 பூவ னூர்ப்புனி". Archived from the original on 3 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |archivedate= (help) - இத்தலத்தின் மீது அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரம் முழுமையாக.

இவற்றையும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]