குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம், தட்சிணகாசி, குழித்தண்டலை, பிரமபுரம், சதுர்வேதபுரி, கந்தபுரம்
பெயர்:அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு:நீலகண்டம் பஜே,
அமைவிடம்
ஊர்:குளித்தலை
மாவட்டம்:கரூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர், சுந்தரேசர், ஸௌந்தரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:முற்றாமுலையம்மை, பாலகுசாம்பிகை
உற்சவர் தாயார்:ஸ்ரீமீனாட்சி
தல விருட்சம்:கடம்பமரம்
தீர்த்தம்:காவிரி, பிரம்மதீர்த்தம்
ஆகமம்:காமிகம்
சிறப்பு திருவிழாக்கள்:மாசிமாதம் 13 நாட்கள் பிரம்மோற்சவம்

தைப்பூசம் வைகாசி விசாகம் கந்த சஷ்டி பங்குனி உத்திரம் பிரதோசம்

மகாசிவராத்திரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், அருணகிரிநாதர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65-ஆவது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

சொல்லிலக்கணம்[தொகு]

 • குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம் என்று அழைக்கப்பட்டிருந்தது. சேரமகாசுரனிடத்திலிருந்து திருமால் வேதங்களை மீட்டற்குக் காரணமாகிய திருவருளைப்பெற்ற இடமாதலிற் சதுர்வேதபுரியென்றும், முருகவேள் பூசித்துப் பேறுபெற்றமையிற் கந்தபுரமென்றும் இது பெயர்பெறுகிறது, பிரமதேவரால் வழிபட்டுத் திருக் கோயில் முதலியன அமைத்துத் திருத்தேர்விழாவும் நடத்தினதால் பிரமபுரமென்றும் அழைக்ப்படுகிறது. தட்சிணகாசி, குழித்தண்டலை என்று பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
 • இறைவன் கடம்ப மரத்தில் காட்சியளித்தமையால் கடம்பவனநாதர், கடம்பேசுவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
 • இறைவி பாலகுசாம்பாள் என்றும் முற்றிலா முலையம்மை என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு இளமையான முலைகளைப் பெற்றவள் என்று பொருளாகும். அம்பிகைக்கு இரு மகன்கள் இருந்தாலும், அவர்களை கருவில் சுமந்து இறைவி பெறவில்லை என்பதால், முலைகள் இளமையானது என்று கூறுகின்றனர்.

தல வரலாறு[தொகு]

அரக்கன் தூம்ரலோசனன் என்பவனை அழிக்க அம்பாள் துர்க்கையம்மன் வடிவில் சென்றாள். அரக்கன் துர்க்கையுடன் கடுமையாக போர் செய்தான். அரக்கனிடமிருந்த வரத்தால் துர்க்கையின் பலம் குறைந்தது. அவள் சப்தகன்னியர்களை துணைக்கு அழைத்து போரிடச் செய்தாள். அரக்கன் அங்கிலிருந்து ஓட, அவனை துரத்தி சென்ற பிராம்மி, மாகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா எனும் சப்த கன்னியர்கள் முனிவரை அரக்கன் என்று எண்ணி அழித்தனர். அதனால் கொலைப்பாவமான பிரம்மஹத்தி தோசம் பற்றிக் கொண்டது. அத்தோசத்தினை நீக்க இத்தலத்தில் உள்ள கடம்பவனநாதரை வழிபட்டனர் சப்த கன்னியர்.

இத்தலத்தின் வரலாக சொல்லப்படுகின்ற மற்றொரு கதையில் தூம்ரலோசனன் சப்த கன்னியரை துரத்தி வர அவர்கள் சிவபெருமானின் பின்னே ஒளிந்து கொண்டார்கள். இறைவன் சப்த கன்னியருக்கு அடைக்கலம் தந்து அரக்கனை அழித்தார்.

தல சிறப்பு[தொகு]

 • இச்சிவதலத்தின் கருவறையில் இறைவன் கடம்பவனநாதரின் பின்புறத்தில் சப்த மாதர்கள் உள்ளனர். மூலவரின் சன்னிதியில் சப்த மாதர்கள் இருப்பது சிறப்பாகும்.
 • சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டி துர்க்கையாவார். அதனால் இராகு காலத்தில் துர்க்கைக்குரிய வழிபாட்டை மூலவர் சன்னிதியிலேயே செய்கின்றனர். மேலும் இச்சிவாலயத்தில் துர்க்கையம்மன் சன்னதி தனியாக இல்லை.

வழிபட்டவர்கள்[தொகு]

 • சப்த கன்னியர்கள் தங்கள் பிரம்மஹத்தி தோசத்தினை போக்க இத்தல மூலவரை வழிபட்டுள்ளனர்.
 • வேதசன்மா என்ற ஓர் அந்தணர், தவம் புரிந்து, மதுரையில் நிகழ்ந்த திருமணக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்தார்.
 • அகத்தியமுனிவர், கன்வ முனிவர், மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முருகப்பெருமான் ஆகியோர் ஈசனை வழிபட்டு பேறுபெற்றார்கள் என்றும், கடம்பர் உலா தெரிவிக்கிறது.[1]
 • இத்திருக்கோயிலில், பிரமதேவர், சப்தமாதர்கள், அகத்திய முனிவர் முதலியவர்களுடைய திருவுருவங்கள் தனித்தனியே உள்ளன.
 • இப்பொழுது குழித்தலை, குளித்தலை என வழங்குவதுமாகிய இந்த ஊரில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீசுந்தரேசுவரரென்றும்,
 • அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமீனாட்சியென்றும், திரிவேணி என்றும் வழங்கப்படுகிறது.
 • கடம்பர்கோயிலிற் சிவபெருமான் திருமணக்கோலம் காட்டியதன் அறிகுறியாக இவ்வாலயத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாணம் செய்வது மரபு [1]

கல்வெட்டு[தொகு]

பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபினிடம் மந்திரியாக இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீனத்து மடத்தில் மடாதிபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்|திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல ஜமீன்தார்கள் சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது.[1]

மூன்று தலங்கள்[தொகு]

காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை கடம்பவனேசுவரர், மதியம் ஐயர்மலை,மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். [2]

திருத்தலப் பாடல்கள்[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

அப்பர் பாடிய தேவாரப் பதிகம்

   முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
   அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
   கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
   பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே

   ஆரி யந்தமி ழோடிசை யானவன்
   கூரி யகுணத் தார்குறி நின்றவன்
   காரி கையுடை யான்கடம் பந்துறைச்
   சீரி யல்பத்தர் சென்றடை மின்களே
   மறைகொண் டமனத் தானை மனத்துளே
   நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
   கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
   சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.

   பார ணங்கி வணங்கிப் பணிசெய
   நார ணன்பிர மன்னறி யாததோர்
   கார ணன்கடம் பந்துறை மேவிய
   ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே

படத்தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932. புத்தக விலை- அணா-6
 2. கி.ஸ்ரீதரன், ஐயர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.405