திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம் |
பெயர்: | திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருச்சத்தி முற்றம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவக்கொழுந்தீசர் (தழுவக்குழைந்த நாதர்) |
தாயார்: | பெரியநாயகி |
தீர்த்தம்: | சூல தீர்த்தம் |
சிறப்பு திருவிழாக்கள்: | முத்துப்பந்தல், ரத சப்தமி, சோமவார வழிபாடு |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 22ஆவது சிவத்தலமாகும்.
தல வரலாறு
[தொகு]சக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை, ஈசனை நினைத்து தவம் இருந்தார். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதிசொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஈசன்மீதும் வைத்து, இரு கரங்களால் ஈசனைத் தழுவி நிற்கும் தோற்றம் மூலவராக அமைந்தது. இந்த கோயிலில் வந்து வணங்கிச் சென்றால், திருமணம் கைகூடும்.
கோயில் அமைப்பு
[தொகு]பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டுள்ள இக்கோயிலின் கருவறையைச் சுற்றிலும் அருகிலுள்ள கோஷ்டத்திலும் விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலெட்சுமி, மூன்று லிங்க பானங்கள், மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. கருவறையின் வெளியே இடப்புறத்தில் லிங்கத்திருமேனியை தழுவிய அம்மன் காணப்படுகிறார். முன்மண்டபத்தில் அப்பர், ஞானசம்பந்தர், பைரவர், சந்திரன், சூரியன், நாகர்கள் உள்ளனர். பெரியநாயகி அம்மன் சன்னதி கோயிலின் இடப்புறம் அமைந்துள்ளது.
தல சிறப்புகள்
[தொகு]- மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய - இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம்.
- மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார்.
- சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தல் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.
- கல்வெட்டில் இறைவன் "திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்" எனக் குறிக்கப்பட்டுள்ளது.
- கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
- நாரைவிடு தூது பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர்.
திருத்தலப் பாடல்கள்
[தொகு]- இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
096 திருச்சத்திமுற்றம்
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே! 1
நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே! 4.
இடம் (முற்றம்)
[தொகு]திருச்சத்தி முற்றத்தில் சென்றெய்தித்
திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுறப்
பணிந்தேத்தி..மருவாரும் குழல்மலையாள் வழிபாடு
செய்யஅருள்
தருவார்தம் திருச்சத்திமுற்றம்.
என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பர். சக்தி சிவனை வழிபட்ட இடம் (முற்றம்) என்னும் பொருளில் இக்கோயிலின் பெயர் அமைந்ததெனலாம்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2013-05-18 at the வந்தவழி இயந்திரம்
- சிறப்புக்கள், அமைவிடம்[தொடர்பிழந்த இணைப்பு]
- அப்பர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 22 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 22 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புலவர் வே.மகாதேவன், பழையாறைத் திருக்கோயில்கள், மகாமகம் 1992 சிறப்பு மலர்