திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | சண்பக வனம், கிரிகன்னிகை வனம் |
பெயர்: | திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநாகேஸ்வரம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர் |
தாயார்: | 1. பிறையணிநுதலாள், 2. கிரிகுஜாம்பிகை |
தல விருட்சம்: | சண்பகம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்[தொகு]
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. சண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்களில் இத்தலமும் அடங்கும்.[1] இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது.
கோயில் அமைப்பு[தொகு]
கோயிலானது ஊரின் தென் வடவாக 630 அடியும், கீழ் மேலடி 200 அடியும் கொண்ட பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலை ஒட்டி மட விளாகமும், அடுத்து நான்கு வீதிகளும் உள்ளன. நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாயில்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோயில் மதில் சுவர்களை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது. வட புறம் பூந்தோட்டம் உள்ளது. கிழக்கு கோபுர வாயிலை அடுத்து விநாயகர் கோயில், பலிபீடம், நந்தி மண்டபம், கொடி மரம் ஆகியவை உள்ளன. தெற்கில் குளம் நான்கு புறமும் பழமையான வவ்வால் இரட்டை மண்டப வடிவில் உள்ளது. வடக்குப் புறத்தில் தேர் வடிவில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. கோயில் நடு கோபுர வாயில் அமைப்புடன் தொடங்குகிறது. கோபுர வாயிலையொட்டி பெரிய பிரகாரமும் அதன் பக்கச்சுவர்களை ஒட்டி திருச்சுற்று மண்டபம் உள்ளது.[2] இறைவனுக்கு அருகில் உள்ளது பிரையணிநுதலாள் சந்நிதி. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோயிலாக விளங்குகிறது. சுதை உருவம். எனவே அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.
கோயிலின் சிறப்பு[தொகு]
வழிபட்டோர்[தொகு]
இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலமாகும்.[3]
சேக்கிழார்[தொகு]
இது சேக்கிழார் திருப்பணி செய்த தலமாகும்.[2] இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால், அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்கு பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம்.[3] இக்கோயிலில் இவருடைய அமர்ந்த நிலையிலான சிலை உள்ளது. உருத்திராக்க மாலையோ அணிகலன்களோ இல்லாமல் உள்ள இந்த சிலையின் அருகே இவரது தம்பியான பாலறாவாயரின் உருவச்சிலையும், இவரது தாயாரின் உருவச்சிலையும் உள்ளன.[4]
ராகு தலம்[தொகு]
பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது.[2] ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.[3]
ஆதிசேஷன்[தொகு]
பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.[3] இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[5]
சிவராத்திரி தொடர்பு[தொகு]
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[6]
குடமுழுக்கு[தொகு]
இக்கோயிலின் குடமுழுக்கு 24 அக்டோபர் 2021இல் நடைபெற்றது. [7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
- ↑ 2.0 2.1 2.2 "அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்". 2020-02-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-05-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 3.3 திருநாகேசுவரம் நாகநாதசுவாமி (ராகு)கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.160
- ↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
- ↑ கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015
- ↑ திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு, திரளான பக்தர்கள் பங்கேற்பு, தினமணி, 25 அக்டோபர் 2021
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- தல வரலாறு பரணிடப்பட்டது 2011-12-30 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமேப்பீயாவில் அமைவிடம்
திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 29 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 29 |