உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சோற்றுத்துறை
பெயர்:திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் தெரு, திருச்சோற்றுத்துறை, திருவையாறு வட்டம்[1]
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
உற்சவர்:தொலையாச் செல்வர்
தாயார்:அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
உற்சவர் தாயார்:ஒப்பிலாம்பிகை.
தல விருட்சம்:பன்னீர் மரம்
தீர்த்தம்:காவிரி
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:சோழர் காலக் கல்வெட்டுக்கள்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.[1] இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் திருக்கோயிலுக்கு செயல் அலுவலராக உள்ளார்.

இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது. கௌதமர், இந்திரன் தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 13வது சிவத்தலமாகும்.

தல வரலாறு

[தொகு]

வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.) அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்சய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.

தல சிறப்புக்கள்

[தொகு]
  • இத் தலம் சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.
  • ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.
  • இத்தலத்தில் சமயக்குரவர்கள் பாடிய பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
  • தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.
  • முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

திருவையாறு சப்தஸ்தானம்

[தொகு]
திருச்சோற்றுத்துறை பல்லக்கு, திருவையாறு சப்தஸ்தான விழா, ஏப்ரல் 2008

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும் செல்வார். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[2].

இருப்பிடம்

[தொகு]

தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் உள்ளது. இத்தலம் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது.

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் ஒதனவனேஸ்வரர், அன்னபூரணி சன்னதிகளும், விநாயகர், முருகன், அம்மாள், விஷ்ணு, தெட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

பேருந்து வழி

[தொகு]

திருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணத்திலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணை மற்றும் திருவையாற்றுக்குச் செல்லும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.

பிற சாலை போக்குவரத்து வழிகள்

[தொகு]
  • கும்பகோணத்திலிருந்து வருபவர்கள் தஞ்சை சாலையில் அய்யம்பேட்டை வந்து, பின் அய்யம்பேட்டை - கண்டியூர் சாலையில் 5 கி.மீ. பயணித்தால் திருச்சோற்றுத்துறையை சென்று அடையலாம்.
  • தஞ்சை மற்றும் திருவையாறு வழியாக வருபவர்கள், தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள திருக்கண்டியூரை அடைந்து, பின் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் 5 கி.மீ. பயணித்தால் திருச்சோற்றுத்துறையை சென்று அடையலாம்.

தொடர்வண்டி வழி

[தொகு]

திருச்சோற்றுத்துறைக்கு அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் : தஞ்சாவூர்

வானூர்தி வழி

[தொகு]

திருச்சோற்றுத்துறைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் : திருச்சிராப்பள்ளி

திருத்தலப் பாடல்கள்

[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே..

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.
கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே..

சுந்தரர் பாடிய பதிகம்

அழல்நீர் ஒழுகி அனைய சடையும்
உழையீர் உரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனலுண் டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே..

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]

படத்தொகுப்பு

[தொகு]